Published : 25,Feb 2022 08:23 AM
தூத்துக்குடி: திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை - குற்றவாளிகளை தேடும் போலீஸார்

தூத்துக்குடியில் திமுக பிரமுகர் சரமரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (49). டெய்லரான இவர், திமுக வட்டச் செயலாளராகவும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து உறுப்பினராகவும் உள்ளார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும் மகாலட்சுமி என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு இவர் வழக்கம் போல கடையில் இருந்து வீடுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கையில் கத்தி மற்றும் அரிவாளுடன் வந்த 3 இளைஞர்கள் கண்ணனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடியதாக தெரியவருகிறது.
இது குறித்து தகவலறிந்த எஸ்பி ஜெயக்குமார், டவுன் டிஎஸ்பி கணேஷ், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, எஸ்ஐகள் சங்கர், சரண்யா உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.