Published : 24,Feb 2022 01:02 PM

உக்ரைன்-ரஷ்யா போர்ச் சூழல்: இந்தியாவின் நிலைப்பாடு என்ன? விரிவான தகவல்கள்

India-has-expressed-concern-at-the-UN-that-the-current-situation-between-Ukraine-and-Russia-could-lead-to-a-major-crisis

உக்ரைன் - ரஷ்யா இடையேயான தற்போதைய சூழல் மிகப்பெரிய சிக்கலுக்கு வித்திடும் என ஐ.நா.வில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் சில நகரங்களில் உள்ள ராணுவ படைகள் மற்றும் விமானப்படைகளை குறிவைத்து ரஷ்யா தனது ராணுவத் தாக்குதலைத் துவக்கியுள்ளது. அங்குள்ள முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போரை நிறுத்த உலக நாடுகள் உதவிட வேண்டும் என உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது. இருப்பினும் தாங்கள் போரை தொடங்கவில்லை என்றும் இதுவரை பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா கவலை:

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இரு நாடுகள் இடையே போர் துவங்கி இருப்பதால் உலகப் பொருளாதாரம் பாதிக்கும் என பல நாடுகள் கவலை அடைந்துள்ளன. இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா இடையேயான தற்போதைய சூழல் மிகப்பெரிய சிக்கலுக்கு வித்திடும் என ஐ.நா.வில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு சபையில் பேசிய இந்தியப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ''உக்ரைன்-ரஷ்யா இடையேயான பதற்றநிலை கவலையைத் தருகிறது'' என்று கூறினார்.  

image

இந்தியா நடுநிலை வகிக்கும்

போர் மூண்டுள்ள சூழலில் உக்ரைன்-ரஷ்யா இடையேயான பிரச்னையில் 'இந்தியா நடுநிலை வகிக்கும்' என வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். அமைதி வழியில் பிரச்னை தீர்க்கப்படும் என நம்புவதாக ஆர்.கே.சிங் கூறினார்.

இந்தியாவுக்கு உக்ரைன் தூதரகம் கோரிக்கை

ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் புடினுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போதைய நிலை குறித்து உக்ரைன் அதிபருடன் இந்தியப் பிரதமர் மோடி பேசி அறிந்துகொள்ளவும் உக்ரைன் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

image

இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையை 1800118797, +91 11 23012113, +91 11 23014104, +91 11 23017905 ஆகிய எண்களை தொடர்புகொள்ள வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இதையும் படிக்க: ரஷ்யா - உக்ரைன் இடையே போர்ச் சூழல் : அமெரிக்காவின் அடுத்தக்கட்ட பிளான் இதுதான்!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்