'இந்த மூக்கும் தும்மலும் இருக்கே!'-சைனஸ் பிரச்னைக்கான காரணங்களும் வகைகளும் #DoctorExplains

'இந்த மூக்கும் தும்மலும் இருக்கே!'-சைனஸ் பிரச்னைக்கான காரணங்களும் வகைகளும் #DoctorExplains
'இந்த மூக்கும் தும்மலும் இருக்கே!'-சைனஸ் பிரச்னைக்கான காரணங்களும் வகைகளும் #DoctorExplains

குளிர்காலம் வந்தாலே பலருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னை சளி, மூக்கடைப்பு. ஆனால் ஓரிரு நாட்களில் இது சரியாகிவிடும். அதுவே சிலருக்கு தலைவலி, மூக்கடைப்பு, தும்மல் மற்றும் அலர்ஜி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதுடன், நீண்ட நாட்களுக்கு நீடிக்கும். இதை சைனஸ் பிரச்னை என்கின்றனர். சைனஸ் பிரச்னை எதனால் ஏற்படுகிறது? இந்த பிரச்னைக்கான தீர்வுகள் குறித்து விளக்குகிறார் நுரையீரல் நிபுணர் டாக்டர் ஜெயராமன்.

சைனஸ் பிரச்னை என்றால் என்ன?

சைனஸ் என்பது அடிப்படையில் ஒரு முக அமைப்பு. பாராநேசல் சைனசஸ்(paranasal sinus) என்பது காற்றிலுள்ள மாசு மற்றும் அழுக்கை சுத்தம் செய்து சுவாசிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. சைனஸின் அமைப்பை பொருத்தவரை, மூக்கிற்கு மேலே ஃப்ராண்டல் சைனஸ்(frontal sinuses), மூக்கிற்கு பக்கவாட்டில் மேக்சில்லரி சைனஸ் (maxillary sinuses), கண்கள் மற்றும் மூக்கு இணையும் இடத்தில் ஸ்பெனாய்டல் சைனஸ்(sphenoidal sinuses), அதற்கும் உள்ளே எத்மாய்டல் சைனஸ்(ethmoidal sinuses) என வகைப்படுத்தலாம். இந்த சைனஸ்கள் காற்று வடிகட்டிபோல் செயல்பட்டு சுத்தமான குளிர்ந்த காற்றை சுவாசப்பாதைக்கு அனுப்புகிறது. இந்த சைனஸ் சரியாக இயங்காவிட்டால் வறண்ட, மாசுபட்ட காற்று மூச்சுக்குழாய்க்குள் சென்று தொற்றுக்களை ஏற்படுத்தும். கோடைகாலத்தில் ஏஸியில் இருப்பதுபோன்ற இதமான உணர்வை சுவாசப்பாதைக்கு கொடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

சைனஸ் பிரச்னை எப்போது ஏற்படுகிறது?

சைனஸ் அமைப்பிற்குள் பல அடுக்குகள் உள்ளன. இந்த அடுக்குகளில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத்தொற்று ஏற்படுவதாலோ அல்லது புகைப்பிடித்தல் மற்றும் மாசுபட்ட காற்றால் அலர்ஜியோ ஏற்படுவதாலோ பிரச்னை ஏற்படுகிறது. அதாவது நாள்பட்ட அழற்சியால் மூக்கினுள் அமைந்துள்ள எபிதிலியம் சேதமடைந்து தொற்று ஏற்பட்டு சைனஸ் பிரச்னையாக உருவெடுக்கிறது. இதைத்தான் மருத்துவரீதியாக ’’சைனசைட்டிஸ்’’(Sinusitis), அதாவது சைனஸ் அலர்ஜி என்கின்றனர்.

நீண்ட நாட்களாக மாசுபட்ட காற்றை சுவாசிக்கும்போது சைனஸுக்கு தேங்கும் தொற்றுக்கிருமிகள் பெருகி சைனசைட்டிஸாக மாறும்போது, சீழ் பிடித்தல், மூக்கடைப்பு, தலைவலி, முகத்தில் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதனை இன்ஃபெக்டிவ் சைனசைட்டிஸ்(Infective Sinusitis) என்கின்றனர். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு மூக்கிலிருந்து மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் சளி வடிதல், சிலருக்கு ரத்தம் வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதனால் உடல் வலி, காய்ச்சல் மற்றும் காலை எழும்போதே தலைவலி போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் மூக்கு, சைனஸ் அனைத்தும் அடைபட்டு, சளியானது ரத்தக்குழாய் வழியாக மூளைப்பகுதி மற்றும் காதுகளுக்குள் சென்றுவிடும். இது மூளை, காது மற்றும் தொண்டை தொற்றை ஏற்படுத்தும்.

மற்றொன்று அலெர்ஜிக் சைனசைட்டிஸ் (Allergic Sinusitis). இதில் சுவாசிக்கும் புகை , மாசு, அழுக்கு ஆகியவை மூக்கினுள் சேர்ந்து தும்மல், சளி மற்றும் ஜலதோஷம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு காலை எழுந்தவுடன் அடுக்கு தும்மல், மூக்கிலிருந்து நீர் வடிதல், அடிக்கடி மூக்கு உறிஞ்சுதல், செருமல், சளித்தொல்லையால் தொண்டைவலி போன்ற அறிகுறிகள் தென்படும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் நுரையீரலுக்குள் சென்று, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி பிரச்னைகளை ஏர்படுத்து, நாள்பட்ட சைனசைட்டிஸ் ஆஸ்துமா பிரச்னைக்கு வழிவகுக்கும்.

காது, மூக்கு மற்றும் தொண்டை மூன்றும் ஒன்றோன்று இணைந்திருப்பதால் சைனஸ் பிரச்னை ஏற்படும்போது மூன்றிலும் பிரச்னைகள் ஏற்படும். எனவே தொற்றினால் சைனஸ் பிரச்னை ஏற்பட்டால் அதற்கான உரிய சிகிச்சை எடுக்கவேண்டும். மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் சைனஸ் பிரச்னை ஏற்பட்டால் அதிக மாசுள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும். பூனை, நாய் போன்ற செல்லப் பிராணிகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும். குறிப்பாக ஒவ்வாமை பொருட்கள் அனைத்தையும் தவிர்க்கவேண்டும். சைனஸ்பிரச்னை 99% வான்வழியாக ஏற்படுவதால் சுவாசிக்கும் காற்றில் கவனம் செலுத்துவது அவசியம். உணவால் மிக அரிதாகவே ஒவ்வாமை ஏற்படுவதால் பெரும்பாலும் அனைத்துவகையான உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம். சைனஸ் ஒருவகை சுவாச வியாதி என்பதால் காற்றிலுள்ள நோய்க்கிருமிகளால் உருவாகும் பிரச்னை இது. உணவுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை.

எனவே இதுபோன்ற அலர்ஜி மற்றும் தொற்று ஏற்படுத்தும் பொருட்களையோ இடங்களையோ தவிர்க்கவேண்டும் அல்லது மாசு வடிகட்டி மாஸ்க்குகளை பயன்படுத்தவேண்டும். தொற்றினால் அலர்ஜி ஏற்படுபவர்கள் அதெற்கென உள்ள தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம். மூச்சுப்பாதை தொடர்பாக உள்ள ஃப்ளூ தொற்று தடுப்பூசி, நிமோனியா தடுப்பூசி, ஹெர்பிஸ் வைரஸ் தடுப்பூசி, பெர்ட்டூசிஸ் தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பூசி போன்ற தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம்.

சைனசைட்டிஸிற்கும், நுரையீரல் அலர்ஜிக்கும் உள்ள தொடர்பு

சுவாசமண்டலத்தை மேல் மற்றும் கீழ்ப்பகுதி என இரண்டாக பிரிக்கலாம். சைனஸ், மூக்கு, தொண்டை போன்றவற்றை மேல் சுவாசப்பகுதி என்றும், தொண்டைமுதல் நுரையீரல் வரையுள்ள பகுதியை கீழ் சுவாசப்பகுதி என்றும் பிரிக்கலாம். கீழ் சுவாசப்பகுதியில் ஏற்படும் ஒவ்வாமையை ப்ரான்கைட்டிஸ்(Bronchitis) என்று அழைக்கின்றனர். மேல் சுவாசப்பகுதியில், ஏற்படும் பிரச்னையை சரிசெய்யாவிட்டால் கீழ் சுவாசப்பகுதிக்கும் தொற்று பரவிவிடும். இதுவும் கொரோனாவைப் போலத்தான் மூக்கு, தொண்டையில் தொற்று ஏற்பட்டு உள்ளுக்குள் பரவிவிடும். சைனசைட்டிஸ் அதிகமாகும்போது அது நிமோனியா பிரச்னைக்கும் வழிவகுக்கும்.

சைனசைட்டிஸ் அறிகுறிகள்

மூக்கடைப்பு, சளி, முகத்தில் வலி, தலைவலி, மஞ்சள் நிற சளி, மூக்கில் நீர்வடிதல், மூக்கு அரிப்பு, கண் எரிச்சல், தொண்டை அரிப்பு, தொண்டைவலி, காய்ச்சல், உடல்வலி, உடல் சோர்வு, தூங்கும்போது மூச்சடைத்தல், குறட்டை சத்தம் வருதல் போன்றவை.

பாதுகாப்பு வழிமுறைகள்

  • ஏஸி பயன்படுத்துபவர்கள் அதனை முறையாக பராமரிக்கவேண்டும். மேலும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும், புகை மாசை தவிர்க்கவேண்டும். இவற்றை பின்பற்றினால் நோய்த்தொற்று சைனசைட்டிஸிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
  • புகைப்பிடித்தலை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும்.
  • தொற்று பரவிவிட்டால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுக்கவேண்டும்.
  • மூக்கடைப்பிற்கு ஸ்ப்ரே பயன்படுத்தலாம். மிக அரிதாக சிலருக்கு சைனஸ் அறுவைசிகிச்சை செய்யவேண்டி வரும்.
  • மூக்கினுள் அதிக சீழ் அடைத்து மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்போது அவர்களுக்கு சைனஸ் எண்டோஸ்கோபிக் சிகிச்சை அளிக்கவேண்டும்.
  • மருத்துவர் பரிந்துரைப்படி ஆன்டிபயாட்டிக் எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • ஆவி பிடித்தல், சுடு தண்ணீர் அருந்துதல், உப்புத்தண்ணீரால் தொண்டை கழுவுதல் போன்றவையும் சைனஸ் பிரச்னையிலிருந்து விடுபட உதவும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com