“நேருவின் இந்தியாவில் கிரிமினல் எம்.பி-க்கள்” - பற்ற வைத்த சிங்கப்பூர் அதிபரின் பேச்சு!
சிங்கப்பூர் நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனநாயகம் குறித்த விவாதத்தின் போது அந்த நாட்டின் 70 வயது பிரதமர் லி சியென் லூங் தனது கருத்துகளை முன்வைத்து பேசியுள்ளார். அப்போது அவர் நேரு உருவாக்கிய இந்தியா குறித்தும், தற்போது இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாக பதவியில் இருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிரிமினல் குற்றவாளிகள் என்றும் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.

“நாடுகள் உயர்ந்த லட்சியங்கள் மற்றும் உன்னத கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. உயர்ந்த தலைவர்கள் இருந்த நாடுகளில், அந்தந்த தலைவர்களின் வழிநடப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அரசியல் அமைப்பு மாறிய காரணத்தால் அரசியல் செய்பவர்களின் மீதான மரியாதையும் குன்றி வருகிறது.
நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி வென்ற தலைவர்கள் அசாத்திய துணிச்சலும், தனித்திறனும் கொண்டவர்கள். அவர்கள் தீயில் புடமிடப்பட்ட தங்கம் போல உருவாகி நின்றவர்கள். டேவிட் பென் குரியன், ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் அதற்கு உதாரணம். ஏன் நம் சிங்கப்பூரில் அது போல தலைவர்கள் உள்ளனர்” என அவர் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய லி சியென் லூங், “நேரு உருவாக்கிய இந்திய நாட்டில் இன்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பாலியல் மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பத்திரிகைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று கூறப்பட்டாலும் இவர்கள் மீது வழக்குகள் உள்ளன” என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூர் பிரதமரின் கூற்றுக்கு இந்திய தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.