Published : 15,Feb 2022 04:11 PM
“என்னா 13 கோடியா! இது டூ மச்.. இதுக்கு மேல விலைய கூட்டாதீங்க”-தீபக் சாஹரின் ஏல நேர அனுபவம்

எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் பெங்களூர் நகரில் பிப்ரவரி 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்று முடிந்தது. இதில் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இரண்டாவது வீரராக உள்ளார் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு வாங்கியது. கடந்த சீசனிலும் அவர் சென்னை அணிக்காக விளையாடி இருந்தார்.
இந்த நிலையில் ஏலத்தின் போது தனது எண்ணம் என்ன என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அவர்.
“நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகதான் விளையாட வேண்டும் என விரும்பினேன். மஞ்சள் நிற ஜெர்சியை தவிர வேறு அணியின் ஜெர்சியில் விளையாடுவது குறித்து நான் கற்பனை கூட செய்து பார்த்தது கிடையாது.
ஏலத்தின் போது எனக்கான விலை கொஞ்சம் அதிகமாக இருப்பதை போலவே தோன்றியது. சென்னை அணியின் வீரனாக வலுவான அணியை கட்டமைக்க வேண்டுமென நான் விரும்பினேன். அதனால் எனக்கான விலை 13 கோடியை கடந்ததும் சி.எஸ்.கே மேற்கொண்டு கேட்கக் கூடாது என நினைத்தேன். அதோடு அந்த தொகையை கொண்டு வேறு வீரர்களை அணி ஏலத்தில் எடுக்க பயன்படுத்தலாம் என்பது எனது எண்ணமாக இருந்தது. 2018 வாக்கில் நான் எப்போதும் மஞ்சள் ஜெர்சியில் விளையாடுவேன் என்ற உறுதியை எனக்கு அளித்திருந்தார் சென்னை அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன்” என தெரிவித்துள்ளார் அவர்.
தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார் தீபக் சாஹர்.