Published : 13,Feb 2022 06:11 PM
வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா, துப்பாக்கி, தங்கம், பணம்; ஷாக் ஆன குடியாத்தம் போலீசார்!

குடியாத்தம் அருகே சொகுசு காரில் இருந்து 5 கிலோ கஞ்சா, 2 துப்பாக்கிகள், 500 கிராம் தங்கம், 3.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கிவிட்டு சொகுசு காரில் வந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிவிட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா உத்தரவிட்டார்
இதனிடையே குடியாத்தம் அருகே மேல்பட்டி ரயில்வே நிலையம் அருகில் காவல் ஆய்வாளர் ராஜன்பாபு உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சொகுசு காரை சோதனை செய்தனர். அதில், 5 கிலோ கஞ்சா மற்றும் 2 கைதுப்பாக்கிகள் சுமார் 500 கிராம் தங்க கட்டி மற்றும் 3.50 லட்சம் ரொக்கம் ஆகியவை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை மேல்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் சென்னையைச் சேர்ந்த பாட்ஷா, மாதவன், அசோக்குமார், மணிபாலன், மற்றும் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இவர்கள் மீது சென்னை மாநகரில் ராயபேட்டை, மணலி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது
இதனையடுத்து 5 கிலோ கஞ்சா 2 கைதுப்பாக்கி 500 கிராம் தங்கக் கட்டி 3.5 லட்சம் ரூபாய் ரொக்கம் சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து 5 பேரையும் கைது செய்த மேல்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.