
டெக்சாஸ் மாகாண மக்கள் எதையும் சமாளிப்பார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகணத்தில் ஹார்வீ புயலால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்ட அதிபர் ட்ரம்ப், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். பின்னர் கார்பஸ் கிறிஸ்டே என்ற பகுதியில் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், துரித கதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட டெக்சாஸ் ஆளுநர் அப்பாட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். கூட்டு முயற்சி காரணமாகவே மிகப் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டதாக அவர் கூறினார். டெக்சாஸ் மாகாண மக்களால் எதையும் சமாளிக்க முடியும் என பெருமிதம் பொங்க தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து விமானம் மூலம் அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
இந்நிலையில், ஹூஸ்டனில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் சிக்கி தவிப்பவர்கள் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினரின் உதவிக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவுவதற்காக தன்னார்வ தொண்டு அமைப்பினர், பொதுமக்கள் என பலர் முன் வந்துள்ளனர். அவர்கள் படகுகள் மூலம் வீடு, வீடாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். ஓரிருவர் மட்டுமே அமரக்கூடிய சிறிய படகு என்றாலும், அவர்கள் சளைக்காமல் பலமுறை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். சீன அமெரிக்கரான லீயோவின் குழுவினர் தன்னந்தனியாக செயல்பட்டு 15 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளனர். இதனால் அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.