Published : 10,Feb 2022 04:23 PM

கொண்டாட்ட அறுவடை செய்த ‘கடைசி விவசாயி’ - தமிழ் சினிமாவின் விதை நெல்

Kadaisi-Vivasayi---Review

'காக்கா முட்டை' தமிழ்சினிமாவின் முக்கியமான திரைப்படம். அதன் பின்பு அதன் இயக்குநர் மணிகண்டன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. காக்கா முட்டையைத் தொடர்ந்து குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை மணிகண்டன் இயக்கினார். அதில், ஆண்டவன் கட்டளை மணிகண்டனின் திறமையை இன்னும் அதிகமாய் பறை சாற்றியது. அதன்பின் மணிகண்டன் இயக்கத்தில் நாளை வெளியாகவிருக்கும் சினிமா ‘கடைசி விவசாயி’. சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவன் ‘கடைசி விவசாயி’. நீண்டகாலம் தயாரிப்பிலிருந்து, கொரோனாவால் பலமுறை ரிலீஸ் தள்ளிப் போய் நாளை ரசிகர்களை வந்தடைகிறான் இந்த விவசாயி. இந்த முறையும் வெற்றி பெற்றிருக்கிறாரா மணிகண்டன்? பார்க்கலாம்.

படத்தின் தலைப்பை வைத்து இது விவசாயிகளின் சோகக் கதையினை, அவல வாழ்க்கையை அழுது அழுது சொல்லப் போகிற சினிமா எனத் தோன்றலாம். ஆனால் மணிகண்டன் அப்படி செய்பவரல்ல. இந்த சினிமாவை வேறு விதமாக கையாண்டிருக்கிறார். ஒரு சம்சாரியின் வாழ்க்கையினை மிக நெருக்கமாக நின்று படம் பிடித்து நமக்குக் காட்டியிருக்கிறார்.

விஜய் சேதுபதி படத்திலிருந்தாலும், இந்தக் கதையின் நாயகன் அவரல்ல; 80 வயது முதியவரான நல்லாண்டிதான் நாயகன். இப்படத்தில் ‘மாயாண்டி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த முதியவரின் வாழ்வியலைச் சுற்றியே நகர்கின்றன காட்சிகள். நல்லாண்டிக்கு நடித்து பழக்கமில்லை. ஆனால், வாழ்ந்திருக்கிறார். 80 ஆண்டுகள் இந்தப் பூமியில் வாழ்ந்திருக்கிறார். அதையே திரையிலும் செய்திருக்கிறார். அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதைவிட நல்லாண்டியின் வாழ்க்கையினை மணிகண்டன் ரகசியமாக நின்று இயல்பாக படமாக்கியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அவ்வளவு இயல்பாக இருக்கிறது நல்லாண்டியின் நடிப்பும், அவரது காட்சிகளும்.

image

கதைக்களம் இதுதான். நீண்ட நாள்களுக்குப் பிறகு குல தெய்வ வழிபாட்டை முன்னெடுக்க நினைக்கும் கிராமம். அதற்கு முதல் நெல்லை விளைவித்துத் தரும் பொறுப்பு மூத்த விவசாயினான மாயாண்டிக்கு கொடுக்கப்படுகிறது. அந்த விவசாயியின் தோட்டத்தில் தற்செயலாக இறந்து கிடந்த மயிலை புதைக்கப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் மாயாண்டி. பிறகு சட்டம் மாயாண்டியின் மீது என்ன நடவடிக்கை எடுத்தது என பயணிக்கிறது திரைக்கதை.

மாயாண்டியின் சொற்களில் முழுக்க அனுபவம் நெற்கதிராய் பொங்கி வழிகிறது. விவசாயம் குறித்து அவர் சொல்லும் நுணுக்கங்கள் முக்கியமானது. மாயாண்டிக்கு அவரது மொத்த கிராமமே ஆதரவாக நிற்கிறது. மாயாண்டி மின்சார வசதி கூட இல்லாத அல்லது நவீனத்தை விரும்பாமல் தனியாக வாழுகிற மனிதர். ஆனால் அவரை தனி மனிதராக விடவில்லை. கிராமமே அந்த முதியவரின் பின்னே கைகோர்த்து நிற்கிறது.

image

இந்தப் படத்தில் தெரிந்த முகம் என்றால் அது விஜய் சேதுபதிதான். அவரது வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்பு கவனம் ஈர்க்கிறது. பல கிராமங்களில் இப்படியொரு மனிதரைக் காண முடியும். பில்கேட்ஸை ரயில் கேட்டில் பார்த்தேன் எனச் சொல்லும் காட்சி, சாமியார் ஒருவர் திருநீரை ‘அங்க ஒருத்தி இருக்காளே அவளுக்கு குடு’ எனச் சொல்லும் காட்சி ஆகியவை அசத்தலான தியேட்டர் மொமெண்ட்ஸ். விஜய் சேதுபதியும் ரகளை செய்திருக்கிறார்.

சிரிப்புக்கு இன்னொரு ஆள் யோகி பாபு. அவர் யானை வளர்க்கும் காட்சிகளும் வெகுவாய் ரசிக்க வைக்கின்றன. தன் விவசாய நிலத்தை விற்று யானை வாங்கி பிழைக்கிறார் யோகிபாபு. அந்த நிலத்தை வாங்கியவரிடம் ‘அந்த நிலத்துல என்னயா பண்ணப் போறீங்க’ எனக் கேட்கும் யோகி பாபுவிற்கு “ஆர்கானிக் விவசாயம் பண்ணப் போறோம்” என பதில் சொல்கிறார் பினான்ஸியர். இப்படி சின்னச் சின்ன வசனங்கள் கவனம் ஈர்கின்றன. யோசிக்கவும் வைக்கின்றன.

image

நீதிமன்ற காட்சிகள் ரொம்பவே எதார்த்தம். நீதிபதியாக வரும் பெண் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல் ஒரு வழக்கை மனிதாபிமானம் மற்றும் அப்பகுதி மக்களின் வாழ்வியலோடு அணுகும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. முதலில் இளையராஜா இசையமைத்து பின் சில காரணங்களால் அது மாற்றப்பட்டது. சந்தோஷ் நாராயணன், ரிச்சர்டு ஹாவேயின் இசை இதம். படத்தொகுப்பும் அருமை.

ஊராரின் எளிய மொழி வழக்கில் அவ்வளவு ஒரு ஈர்ப்பு. கிராமத்து நையாண்டி, யாரையும் யாரும் எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்காத மனப்பான்மை எனப் பல விஷயங்களைச் சேர்த்து அழகாகக் காட்சிகளைக் கோர்த்திருக்கார் இயக்குநர். கடைசி விவசாயியை தானே எழுதி ஒளிப்பதிவு செய்து தயாரித்திருக்கிறார் மணிகண்டன். தனது சினிமாக்கள் ஒவ்வொன்றையும் தனித்த கவனத்தோடு தனி அடையாளத்தோடு உருவாக்க நினைக்கும் மணிகண்டனுக்குப் பாராட்டுகள். சர்வதேச திரைப்பட விழாக்களில் ஆப்ரிக்க எத்தியோப்பிய சினிமாவில் காட்டப்படும் கிராமங்களையும் அதன் வாழ்வியலையும் பார்த்து ரசிப்போமே, அது போலொரு சர்வதேச முனைக்கு இந்த சினிமா செல்லும் அத்தனை தகுதிகளும் உண்டு. அதைச் செய்ய வேண்டியது நல்ல சினிமா வேண்டுமென எனக் கேட்கும் ஒவ்வொரு ரசிகரின் பொறுப்பு.

ஊர் கூடி தேர் இழுப்போம்!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்