Published : 10,Feb 2022 03:14 PM
‘புஷ்ப ராஜ்’ ஆக மாறும் அல்லு அர்ஜூன் - வைரலாகும் மேக்கிங் வீடியோ

‘புஷ்பா’ திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜூன், அந்தப் படத்தின் கதாபாத்திரமான புஷ்ப ராஜ் ஆக மாறிய மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சுகுமார் இயக்கத்தில், ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடிப்பில், கடந்த டிசம்பர் மாதம் 17-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா : தி ரைஸ் பார்ட் 1’. இந்தப்படம் தெலுங்கில் நேரடியாகவும், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலும், குறிப்பாக அல்லு அர்ஜூனின் வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் ஸ்ரீவள்ளி நடன அசைவுகள், ரசிகர்கள், கிரிக்கெட், பாலிவுட் பிரபலங்களிடையே பிரபலமானது.
50 நாட்களை கடந்தும் இந்தப் படம் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்தியில் மட்டும் ரூ. 100 கோடியை தாண்டியுள்ளது. இந்தப் படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தனர். இந்நிலையில், அல்லு அர்ஜூன், ‘புஷ்பா’ படத்தில் புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது புஷ்ப ராஜ் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அல்லு அர்ஜூன் புஷ்பாவாக மாறும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை 2.4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.