Published : 10,Feb 2022 10:14 AM

க்ளிக் ஆன பிரசித், ஆகாத பண்ட் - தொடரும் இந்தியாவின் பரிசோதனை முயற்சிகள்

Ind-vs-WI-3-talking-points-from-2nd-ODI-as-Rohit-Sharma-Co-seal-the-series-with-a-44-run-win

வித்தியாசமான முயற்சியை மேற்கொள்ளத்தான் தனக்கு பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறிய கேப்டன் ரோகித் சர்மா, அணியின் எதிர்காலம் மற்றும் நீண்ட பயணத்தை கருத்தில்கொண்டு நேற்று சில மாற்றங்களை செய்திருந்தார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகித்து வந்த நிலையில் இரண்டாவது போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்திய அணியில் இஷான் கிஷான் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் போலார்டு காயத்தால் விலகினார். இவருக்கு பதிலாக கேப்டனாக நிக்கோலஸ் பூரன், மாற்று வீரராக ஒடியன் ஸ்மித் தேர்வாகினர்.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 43 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 67 ரன்கள் எடுத்தார்.

image

இதனைத் தொடர்ந்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற குறைவான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 46 ஓவர்களில் 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 9 ஓவர்கள் பந்துவீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. இந்தப் போட்டி தொடர்பான 3 முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.

image

பிரசித் கிருஷ்ணா அபாரம்

'பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசினார். இந்தியாவில் இதுபோல் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் பந்து வீசியதை பார்த்து நீண்ட காலமாக ஆகிவிட்டது’ என்று கேப்டன் ரோகித் சர்மாவின் பாராட்டுதலைப் பெற்றார் பிரசித் கிருஷ்ணா. ஆம் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இளம் வீரர் பிரசித் கிருஷ்ணாதான். தனது வேகத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஓப்பனிங் கூட்டணியை பிரித்தார். முதல் விக்கெட்டாக பிராண்டன் கிங் 18 ரன்களிலும், அடுத்து வந்த பிராவோவை 1 ரன்னிலும் பிரசித் அவுட் செய்து அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.  தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசி, பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். இதனால், பேட்ஸ்மேன்கள் இவரது பந்தை தொடவே பயந்தனர். மொத்தம் 9 ஓவர்களை வீசிய அவர் 3 மெய்டன்கள் உட்பட 12 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்களை கைப்பற்றியதால், ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து பிரசித் கிருஷ்ணா கூறுகையில், ‘’நான் பேட்டிங் செய்ய வந்தபோது, பிட்ச் இன்னும் வேகத்திற்கு ஏற்றதாகத்தான் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டேன். இருப்பினும், பந்தை வேறு வேறு லெந்தில் போட்டு, பிட்சை சோதனை செய்ய விரும்பினேன். ஆனால், இலக்கு குறைவு என்பதால், வேறு வழியில்லாமல், ஆரம்பம் முதலே குட் லெந்த், பவுன்சர் பந்துகளை போட வேண்டிய நெருக்கடி இருந்தது. தொடர்ந்து அதே இடத்தில் பந்துவீச வேண்டும் என்ற குறிகோளுடன் செயல்பட்டேன்’’ என்றார்.

பவர்பிளே மற்றும் மிடில் ஓவர்களில் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யக்கூடிய தீபக் சாஹர் மாதிரியான வேகப்பந்து வீச்சாளர்கள் அணிக்கு தேவைப்படும் நிலையில் அந்த இடத்திற்கு தகுதியானவராக பிரசித் கிருஷ்ணா உள்ளார் என்பது உறுதி.

image

லோகேஷ் ராகுல் - சூர்யகுமார் யாதவ் பார்ட்னர்ஷிப்

நேற்றைய போட்டியில் வித்தியாசமான முயற்சியாக ரோகித் சர்மாவுடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டார். கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் ஆடினார். ஆனால் இந்திய அணி 43 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. இருவரும் பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.  ஒடியன் ஸ்மித் வீசிய 26வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த ராகுல், அகீல் ஹொசைன் பந்தில் 2 சிக்சர் பறக்கவிட்டார். நான்காவது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்த போது ராகுல் (49) ‘ரன்–அவுட்’ ஆனார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது.

image

சோதனை முயற்சிக்காக ரிஷப் பண்ட்

வித்தியாசமான முயற்சியை மேற்கொள்ளத்தான் தனக்கு பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறிய கேப்டன் ரோகித் சர்மா, அணியின் எதிர்காலம் மற்றும் நீண்ட பயணத்தை கருத்தில்கொண்டு நேற்று சில மாற்றங்களை செய்திருந்தார் அவர். அதன்படி நேற்றைய போட்டியில் ரோகித் சர்மாவுடன் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டார். கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் ஆடினார். ரிஷப் பண்ட் அதிரடியாக அடித்து ஆடக்கூடிய வீரர் என்பதால், பவர்ப்ளே ஃபீல்டிங் கட்டுப்பாடுகளை பயன்படுத்தி அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக அனுப்பப்பட்டார். கேஎல்ராகுல் எந்த வரிசையிலும் ஆடக்கூடிய வீரர் என்பதால், அவர் மிடில் ஆர்டரில் ஆடினார். இந்த முயற்சி வெறும் ஒரு போட்டிக்கு மட்டும்தான் என்றுகூறிய ரோகித் சர்மா,  அடுத்த போட்டியில் தொடக்க வீரராக ஷிகர் தவான் இறங்குவார் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: “குஜராத் டைட்டன்ஸ்”: அகமதாபாத் அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்