Published : 07,Feb 2022 09:43 AM
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு பிரதமர் பதில்

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த 31ஆம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். ஒன்றாம் தேதி அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வந்தது. தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் உரையாற்றவுள்ளார்.
ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அப்போது மோடி பதிலளிப்பார் எனத் தெரிகிறது. நேற்று காலமான பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு நாடாளுமன்றத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி இரு அவைகளும் தலா ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்படும். இதற்கிடையே உத்தரப்பிரதேசத்தில் ஒவைசியின் கார் தாக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று விளக்கம் அளிக்க உள்ளார்