Published : 07,Feb 2022 09:31 AM
வெற்றியுடன் கேப்டன்சியை தொடங்கிய ரோகித் - கவனம் ஈர்த்த 1000வது ஒருநாள் போட்டி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிக் கண்டது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடும் 1000-வது ஒருநாள் போட்டி, ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றுள்ள முதல் போட்டி என பல சிறப்புகளுடன் மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி சாஹல், வாஷிங்டன், பிரசித் ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சால் 43.5 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட் ஆனது.
50 ஓவரில் 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் துரத்தலை தொடங்கினர். கிஷன் நிதானமாக விளையாடி கம்பெனி கொடுக்க, ரோகித் 42 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 60 ரன் (51 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 8 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இந்தியா 116 ரன்னுக்கு 4வது விக்கெட்டை இழந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. எனினும், சூரியகுமார் - தீபக் ஹூடா ஜோடி 5வது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 28 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாஹல் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். இந்தப் போட்டி தொடர்பான 3 முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.
ரோகித் கேப்டன்சியின் கீழ் கோலி
ரோகித் சர்மாவுக்கு இது முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டி. ரோகித் சர்மாவின் கேப்டன்சியின் கீழ் முதல் முறையாக விராட் கோலி விளையாடினார். கேப்டன்சி விவகாரத்தால் இருவருக்குமிடையில் மனக்கசப்பு இருந்து வருவதாக ஊகங்கள் வெளியான நிலையில், நேற்றைய போட்டியில் கோலி பல சந்தர்ப்பங்களில் ரோகித்துக்கு உதவுவதைக் காண முடிந்தது. மேலும் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் செட்டிங்க்ஸில் கோலியிடம் ஆலோசனைகளை தயங்காமல் கேட்டுப் பெற்றார்.
22-வது ஓவரில் சாஹல் வீசிய பந்தை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ப்ரூக்ஸின் பேட்டில் பந்து உரசியதுபோல சென்று கீப்பரின் கையில் தஞ்சமடைந்தது. நடுவர் அதற்கு நாட்-அவுட் கொடுத்தார். ரிவ்யூ எடுக்குமாறு கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் சொல்லியிருந்தார் பவுலர் சாஹல். அப்போது கோலியும் ரிவ்யூவுக்கு செல்லும்படி ரோகித் ஷர்மாவிடம் கூற, அதன்படி ரிவ்யூ எடுத்தார் ரோகித். டிவி அம்பயரின் ரிவ்யூவில் பந்து பேட்டில் எட்ஜ் ஆனது தெளிவாக தெரிந்தது. பின்னர் ப்ரூக்ஸ் அவுட் என அறிவிக்கப்பட்டார்.
வாஷிங்டன் சுந்தர் கம்பேக்
நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் கம்பேக் கொடுத்துள்ளார் ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த அவர், கடந்த மார்ச் மாதம் முதல் அதிகாரப்பூர்வ ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. கடந்த மாதம் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் விலகினார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய வாஷிங்டன் சுந்தர் நேற்றைய ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இனி அனைத்து வடிவ போட்டிகளிலும் வாஷிங்டன் சுந்தர் தவறாது இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
அறிமுக வீரராக தீபக் ஹூடா
இந்திய அணியில் 26 வயதான ஆல் ரவுண்டர் தீபக் ஹூடா அறிமுகமானார். 5-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் - தீபக் ஹூடா ஜோடி 62 ரன்களை விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா். சூரியகுமார் 34 ரன், ஹூடா 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பேட்டிங்கில் தனது பணியை சிறப்பாக முடித்திருந்தாலும் தீபக் ஹூடாவுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆறாவது இடத்தில் பந்துவீச்சு திறன் கொண்ட ஒரு பேட்ஸ்மேனை இந்திய அணி எதிர்பார்க்கும் நிலையில், இப்போட்டியில் சோதனை முயற்சியாக தீபக் ஹூடாவுக்கு ஒரு ஓவராவது வழங்கியிருக்கலாம். ஆனால் ஹூடாவின் பந்துவீச்சை கேப்டன் ரோகித் முயற்சிக்கவே இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. .
மேலும் இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் சாஹல், வெஸ்ட் இண்டீசின் புரூக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியபோது ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட் என்ற சாதனை மைல் கல்லை எட்டினார்.
இதையும் படிக்க: அன்று தோனி.. இன்று தினேஷ் பானா.. உலகக்கோப்பையில் சிக்ஸர் விளாசி வெற்றி - வைரலாகும் போட்டோ