Published : 03,Feb 2022 07:45 AM
“நான் ஒரு தமிழன்” - ராகுல் காந்தி
மத்திய பாஜக அரசு தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை ஆட்சி செய்ய முடியாது என மக்களவையில் ராகுல் காந்தி மிகுந்த ஆவேசம் பொங்க பேசியுள்ளார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மறுத்து வருவதற்கும் மத்திய அரசை அவர் கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் நீண்ட காலமாக நிலவி வரும் மாநிலங்களின் கூட்டமைப்பு என்கிற அடிப்படைகளுக்கு மாறாக மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வை பற்றி பேசிய ராகுல் காந்தி தமிழகம் மீண்டும், மீண்டும் நீட் தேர்வை விலக்க வேண்டும் என முறையிட்டாலும், அதை ஏற்காமல் துரத்தி விடுவதே மத்திய அரசின் வாடிக்கையாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.
மாநிலங்களை அரவணைத்து, கூட்டாட்சி முறையில் ஆட்சி செய்வதே மத்திய கூட்டாட்சி தத்துவம் என்றும், பிரச்னைகளை கேட்டு, பேசி அதற்கு தீர்வு காண்பதே சிறந்த ஆட்சி என்றும் ஆவேசம் பொங்க பேசினார்.
தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் என ஒவ்வொரு மாநில மக்களும் ஒவ்வொரு வகையான மொழி, கலாசார, அடிப்படைகளை கொண்டிருப்பதை ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். பல வண்ணமுள்ள மலர்களும் ஒரே பூங்கொத்தில் இருப்பதுதான் இந்தியாவின் தனித்துவம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அடிப்படையான கட்டமைப்பை புரிந்து கொள்ளாதவர்கள் அதிகாரத்தில் இருப்பதாகவும் அவர் சாடினார். தனிச்சையாக செயல்பட்டால் ஒரு அரசால் எதையும் சாதிக்க முடியாது என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்தார். உரையின்போது தமிழ்நாடு என அதிகமுறை உச்சரித்தது குறித்த கேள்விக்கு, நான் ஒரு தமிழன் என ராகுல் பதில் அளித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசம் பற்றி உரையில் இடம்பெறாதது ஏன் என்ற வினாவிற்கு ராகுல் காந்தி பதில் அளிப்பதைத் தவிர்த்தார்.