Published : 02,Feb 2022 08:53 PM
“பாஜக அரசால் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது” - ராகுல்காந்தி

மக்களவையில் நடைபெற்ற குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி தமிழக மக்களை பாஜக ஒருபோதும் ஆளமுடியாது எனக் கூறினார்.
“இந்தியா ஒரே இந்தியாவாக இல்லை. இரண்டாக பிரிந்து உள்ளது. ஒரு இந்தியா பணம் படைத்தவர்களுக்காகவும், மற்றொரு இந்தியா பணம் இல்லாத ஏழைகளுக்கானதாகவும் உள்ளது. இந்தியாவில் மக்களாட்சி நடக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மன்னர் ஆட்சியை கொண்டு வருகிறார்கள்.
இந்தியாவில் இரண்டு விதமான பார்வை உண்டு. அதில் ஒன்றுதான் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்ற பார்வை. கூட்டாட்சி என்பது அதன் அர்த்தம். தமிழ்நாட்டில் உள்ள என் சகோதரரிடம் நான் சென்று உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்பேன். அவர் அவரது தேவையை என்னிடம் சொல்வார். அதேபோல எனக்கு தேவையானதை கேட்டுப் பெறுவேன். இதுதான் கூட்டாட்சி. இது ராஜ்ஜியம் அல்ல.
ஒரு போதும் உங்களது வாழ்நாளில் தமிழ்நாட்டை நீங்கள் ஆட்சி செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.
“தமிழ்நாடு மீண்டும் மீண்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என கோரிக்கை வைத்தாலும் அதை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. நாட்டு மக்களுடைய கருத்துகளுக்கு அரசர் காது கேட்காதது போல மத்திய அரசு நடந்து கொள்கிறது. அனைத்து மாநில மக்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை, அவற்றுக்கு மத்திய அரசு மதிப்பு அளித்து சம உரிமை வழங்க வேண்டும்” என பேசியுள்ளார் அவர்.
பாகிஸ்தான் - சீனா விவகாரம், வேலையின்மை என பல விஷயங்கள் குறித்து இந்த விவாதத்தில் அவர் பேசியுள்ளார்.