Published : 02,Feb 2022 06:18 PM
15-வது ஐ.பி.எல் மெகா ஏலம்: முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் உருக்கமான வேண்டுகோள்

ஐ.பி.எல். போட்டியின் மெகா ஏலத்தில் இடம்பெற்றுள்ள இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
2022-ம் ஆண்டுக்கான 15-வது ஐ.பி.எல். போட்டி, வரும் மார்ச் மாதம் துவங்கி, மே மாதம் வரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஐ.பி.எல். போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
பிசிசிஐயின் விதிமுறைப்படி, ஏற்கெனவே ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மீதவுள்ள வீரர்களை விடுவித்துள்ளது. இதைத் தொடர்ந்து பிசிசிஐ, மெகா ஏலத்தில் பங்குபெறும் 590 வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. முன்னதாக 8 அணிகள் இருந்தநிலையில், தற்போது லக்னோ (சூப்பர் ஜெயண்ட்ஸ்) மற்றும் அகமதாபாத் என இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு மெகா ஏலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.
இந்நிலையில் 38 வயதான இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மெகா ஏலத்தின் 590 வீரர்களில் ரூ. 50 லட்சம் அடிப்படை விலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய ஸ்ரீசாந்த்க்கு, சூதாட்ட புகார் காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டது. வாழ்நாள் முழுவதும் நீட்டிக்கப்பட்ட தடை பின்னர், 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு முதல் சையது முஷ்டக் அலி டிராபியில் கேரள அணிக்காக ஸ்ரீசாந்த் விளையாடினார். இதேபோல் விஜய் ஹசாரே போட்டியிலும் பங்கேற்றார்.
தடைக்குப் பிறகு கடந்த ஆண்டு ஸ்ரீசாந்த், ஐ.பி.எல். ஏலத்தில் பதிவு செய்திருந்தார். ஆனால் அவரது பெயர் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டின் ஐ.பி.எல். மெகா ஏலத்தின் இறுதிப் பட்டியலில் ஸ்ரீசாந்த் பெயர் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து ட்விட்டர் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஸ்ரீசாந்த், "எல்லோரையும் நேசிக்கிறேன்.. உங்கள் அனைவருக்கும் நன்றி சொன்னால் அது போதுமானதாக இருக்காது. உங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். தயவுசெய்து இறுதி ஏலத்திற்கான உங்கள் பிரார்த்தனையில் என்னை வைத்துக்கொள்ளுங்கள்” ஓம் நம சிவயா என ட்வீட் செய்துள்ளார்.
Love u all..can’t thank u all enough..lots of gratitude ❤️❤️❤️❤️❤️Thnks a lot..#grateful and alwys will be grateful to each and every try one of u..plss do keep me in ur prayers for final auction too..”om Nama Shivaya..” pic.twitter.com/XAyBGx9IVU
— Sreesanth (@sreesanth36) February 1, 2022