[X] Close

தேனியில் மோசடி செய்ய முயன்ற நபர்களை கடத்தி பணம் பறிக்க முயன்ற 10 பேர் கும்பல் கைது

குற்றம்

10-arrested-in-Theni-for-kidnapping-a-person-who-tried-to-involve-in-Fraud

மலிவான விலையில் வைர கற்கள் தருவதாக கூறி ரூ. 25 லட்சம் ஏமாற்ற முயன்ற கும்பலை கடத்தி, அவர்களிடமிருந்தே 5 லட்சம் ரூபாய் பறிக்க முயன்ற பெண் உட்பட 10 பேரை 15 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஜபார் (வயது 29). இவரது தந்தை அக்கிம், பழ வியாபாரி. தந்தைக்கு உறுதுணையாக அப்துல் இருந்து வந்துள்ளார். கொரோனா காலத்தில் பழ வியாபாரம் நஷ்டம் அடைந்ததால் நகைகளை அடகு வைத்து பல லட்ச ரூபாய் கடனும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனவரி மாதம் அப்துல் ஜபார் மற்றும் அவரது நண்பரான தவுபிக் ராஜா ஆகியோர் சென்னை அமைந்தகரையில் தங்கி பழ வியாபாரம் செய்யப்போவதாக தந்தை அக்கிமிடம் கூறிவிட்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி அப்துல் ஜபார் மற்றும் தவ்பீக் ஆகியோரது செல்போன் எண்கள் திடீரென ஸ்விட்ச் ஆகி உள்ளது. பின் கடந்த 21ஆம் தேதி தவ்பிக்கின் மனைவியான பர்ஹானாவுக்கு மொபைல்போன் வழியாக மிரட்டலொன்று வந்துள்ளது. அதில் பேசியவர்கள், தவ்பிக் மற்றும் பர்ஹானா இருவரும் பழ வியாபாரம் செய்வதாகக்கூறி தங்களிடம் 5 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாகவும், அந்த 5 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே அப்துல் மற்றும் தவ்பீக்கை விடுவோம் என்றும் கடத்தல் கும்பலை சேர்ந்தோர் பேசியுள்ளனர். இதைக்கேட்டு பயந்துபோன பர்ஹானா, அப்துலின் தந்தையான அக்கிமுக்கு போன் செய்து விஷயத்தை தெரியப்படுத்தியிருக்கிறார். இதனால் பதட்டமடைந்த அக்கிம், தனது மகனை பல இடங்களில் தேடியிருக்கிறார். ஆனால் மகன் கிடைக்காததால் நேற்று அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அவர்.


Advertisement

image

புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, உதவி ஆணையர் அகஸ்டின் மேற்பார்வையில் ஆய்வாளர் கிருபாநிதி தலைமையில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் செல்போன் எண்களை வைத்து டிராக் செய்ததில் திருப்போரூர் பகுதியில் கடத்தலில் ஈடுபட்டோர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை விரைந்து கடத்தப்பட்டிருந்த அப்துல் ஜபார், தவ்பீக் ராஜா மற்றும் ஜலீல் ரகுமான் ஆகிய மூவரை மீட்டு, கடத்திய பெண் உட்பட 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் பிடித்தனர்.

பிடிப்பட்ட 10 பேரையும் அமைந்தகரை காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் கீழ்க்காணும் திடுக்கிடும் தகவல் வெளியானது. அப்துல் ஜபார் மற்றும் தவ்பீக் ராஜா ஆகியோர் கொரோனா காலத்தின் போது பழ வியாபாரம் நஷ்டம் அடைந்ததால், இவ்விருவரும் நகைகளை அடகு வைத்து பல லட்சம் கடனுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு அதே ஊரை சேர்ந்த ஜலீல் ரஹ்மான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவர் தற்போது நெல்லூரில் டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகின்றார். இவர் போலி முத்து மற்றும் வைரகற்களை வாங்கி நிஜ கற்களை போல் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் என அப்துல் மற்றும் தவ்பீக்கிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பிய அப்துல் மற்றும் தவ்பீக், மோசடிக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் தவ்பீக் தனக்கு தெரிந்தவரான ஆண்டனி பெனெடிக் ராஜ் என்பவரிடம், தனக்கு சுங்கத்துறை அதிகாரிகள் பல பேரை தெரியும் எனவும் வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய முத்து, வைரகற்களை குறைவான விலைக்கு தனக்கு கிடைக்கும் எனவும் அதை அதே விலைக்கு தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் 25 லட்சம் மதிப்பிலான வைர, முத்து கற்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ஆண்டனி தன்னிடம் போதுமான பணமில்லாததால், தனது நண்பர்களான சுமன், ராஜேஷ், அல்போன்ஸ் உட்பட 9 பேரிடம் இருந்து பணத்தை வாங்கி வைர கற்களை வாங்க முயன்றுள்ளார்.

image

இதனையடுத்து பணம் ரெடியாக இருப்பதாகவும், மீனம்பாக்கத்தில் வைர கற்களை கொடுத்துவிட்டு பணத்தை வாங்கி கொள்ளுமாறு ஆண்டனை தெரிவித்த போது, நெல்லூரில் சென்று வாங்கி கொள்ளுமாறு அப்துல் ஜபார் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஆண்டனி தனக்கு கற்கள் எதுவும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். உடனே அப்துலும் தவ்பிக்கும், புராதன பொருள் ஒன்று இருப்பதாகவும் அதை பெற்று கொள்ளுமாறும் அப்துல் ஆண்டனியிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டவுடன் இவர்கள் மோசடி கும்பல் என அறிந்த ஆண்டனி, புராதன பொருளை தாங்கள் வாங்கி கொள்வதாக கூறி திட்டம்போட்டு அப்துல் மற்றும் தவ்பீக் ஆகியோரை மீனம்பாக்கத்திற்கு வரவழைத்துள்ளார்.

`புராதன பொருட்களும் அவர்களிடம் இல்லை’ என்பதை ஏற்கெனவே கணித்திருந்த ஆண்டனி, அவரது நண்பர்களுடன் இணைந்து அப்துல் மற்றும் தவ்பீக்கை அடித்து காரில் கடத்தி திருப்போரூர் அழைத்து சென்றிருக்கிறார். அந்த கும்பல், அப்துல் மற்றும் தவ்பீக்கிடம் ‘நீங்கள் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் உங்களை விடுவிக்கிறோம்’ எனக் கூறியுள்ளது. இதைக்கேட்ட அப்துல் - தவ்பீக், தங்களது இன்னொரு நண்பர் ஜலீலிடம் பணம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஜலீலை சென்னை அழைத்து கடத்தி விசாரித்த போது பணம் சுத்தமாக இல்லை என்பதை அறிந்த கும்பல், குடும்பத்தினரிடம் பணம் பறிக்க தவ்பீக்கின் மனைவியை போன் செய்து மிரட்டியுள்ளனர். அவர், அதை அப்துல்லின் தந்தையிடம் தெரிவித்திருக்கிறார். அத்தந்தை பின் காவல் நிலையத்தை நாடியிருக்கிறார்.

இறுதியாக தற்போது காவல்துறையினர் அப்துல் - தவ்பீக் - ஜலீலை கடத்திய 10 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர். அதன்படி கேளம்பாக்கத்தை சேர்ந்த ஆண்டனி பெனடிக் ராஜ், சுமன் அல்போன்ஸ், வேல்முருகன், புவனேஸ்வரன், வெங்கடராமன், ராஜேஷ், சரத்பாபு, அஸ்வினி ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கும்பலில் இருவர் மீது கொலை வழக்குகள் மற்றும் கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களிடம் அமைந்தகரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

- சுப்ரமணியன்

சமீபத்திய செய்தி: மருத்துவத்தில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்-மா.சுப்பிரமணியன்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close