[X] Close

'இதற்குமேல் எதற்கு'.. எஸ். ஜானகி to சந்தியா முகர்ஜி - பத்ம விருதுகளை நிராகரித்த பிரபலங்கள்

சிறப்புக் களம்

Buddhadeb-Is-Not-The-First-Here-Is-A-List-Of-People-Who-Rejected-Or-Returned-Padma-Awards

இந்திய குடிமக்கள் அவரவர் சார்ந்த துறைகளில் ஆற்றி வரும் சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்படும். அதன்படி, நாட்டின் உயர்ந்த விருதுகளில் முதன்மையானதாக பாரத ரத்னா விருதும், அடுத்தப்படியாக பத்ம விபூஷணும், அதற்கு அடுத்த நிலையில் பத்ம பூஷண் விருதும், கடைசியாக பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படும். மத்திய உள்துறை அமைச்சகம் நியமிக்கும் தேர்வுக் குழு, விருதுக்குரியவர்கள் பெயர்களை முடிவு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும். அதன் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படும்.

அந்தவகையில், குடியரசுத் தினத்தை முன்னிட்டு 2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள், கடந்த 25-ம் அறிவிக்கப்பட்டது. இந்த விருது 128 பேருக்கு அறிவிக்கப்பட்டதில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்யா, பிரபல பின்னணி பாடகி சந்தியா முகர்ஜி, பிரபல தாள வாத்தியக் கலைஞர் பண்டிட் அனிந்த்யா சாட்டர்ஜி ஆகியோர் தங்களது பத்ம விருதுகளை புறக்கணித்துள்ளனர். இது புது விவாதத்தை கிளப்பிய நிலையில், ஏற்கனவே பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி, தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் உள்பட இதுவரை பலர் பத்ம விருதுகளை நிராகரித்துள்ளனர் அல்லது திருப்பி அளித்துள்ளனர். அவர்கள் குறித்து சிறுதொகுப்பை இங்குக் காணலாம்.

image


Advertisement

பாரத் ரத்னா :

1. மௌலானா அபுல் கலாம் ஆசாத்

பிரபல சுதந்திரப் போராட்ட இயக்கத் தலைவரும், பாரத ரத்னா இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத், பாரத் ரத்னா விருதை புறக்கணித்தார். இந்த விருதுக்கான தேர்வுக் குழுக்களில் இருப்பவர்கள், தாங்களே அவற்றைப் பெறக்கூடாது என்று வாதிட்டு, பாரத ரத்னாவை அவர், நிராகரித்தார். 1992-ல் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் மறைவுக்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

2. சுபாஷ் சந்திர போஸ்

1945 -ம் ஆண்டு மர்மமான சூழ்நிலையில் காணாமல் போன தேசியவாத தலைவரும், புரட்சியாளருமான சுபாஷ் சந்திர போஸ், அவரது  மறைவிற்குப் பிறகு 1992-ம் ஆண்டு  பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கம், சுபாஷ் சந்திர போஸை காலத்தாமததாக அங்கீகரித்ததால், அவரது குடும்பத்தினர் அந்த விருதை நிராகரித்தனர். மேலும், சில சட்ட சிக்கல்களால் அந்த விருது திரும்ப பெறப்பட்டது.

3. ஜோதி பாசு

கொல்கத்தாவில் பிறந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மேற்குவங்க முதல்வருமான ஜோதி பாசு, பாரத ரத்னா விருதுக்காக அவரை தொடர்புகொண்டுகேட்டபோது, விருது அறிவிக்கும் முன்பே அந்த விருதை ஏற்க மறுத்துள்ளார்.

image

பத்ம விபூஷண்:

1. பி.என். ஹக்சர்

பிரதமர் இந்திரா காந்தியின் தனிச் செயலாளராக இருந்தவர் பி. என். ஹக்சர். இவருக்கு, கடந்த 1973-ம் ஆண்டு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டபோது, அதனை அவர் ஏற்க மறுத்து இருந்தார். இந்தோ-சோவியத் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் சிம்லா ஒப்பந்தம் ஆகியவற்றின் முக்கிய பங்காற்றியதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் “நான் எனது கடமையை செய்தேன். அதற்காக விருதை பெற்றுக் கொள்வது அசௌகரியமாக இருக்கிறது’ எனக் கூறியிருந்தார்.

2. இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்

பிரபல பொதுவுடைமைத் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், கட்சிக் கொள்கையை மேற்கோள்காட்டி, 1992-ம் ஆண்டில் வழங்கப்பட இருந்த பத்மவிபூஷண் விருதை நிராகரித்தார்.

3. சுவாமி ரங்கநாதநந்தா

கடந்த 2000-வது ஆண்டு ஆன்மீகவாதியான சுவாமி ரங்கநாதநந்தா, தனது ராமகிருஷ்ணா மிஷன் அமைப்பை சேர்க்காமல் தனிப்பட்ட முறையில் பத்மவிபூஷண் அறிவிக்கப்பட்டபோது அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

4. பிரகாஷ் சிங் பாதல்

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பிரகாஷ் சிங் பாதல், கடந்த 2015-ம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட பத்மவிபூஷன் விருதினை, கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பி அளித்தார்.

5. லஷ்மி சந்த் ஜெயின்

ராஜஸ்தானைச் சேர்ந்த எழுத்தாளரும், அரசியல் ஆர்வலருமான லஷ்மி சந்த் ஜெயின் மறைவுக்குப் பின், கடந்த 2011-ம் ஆண்டு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை, அவரது குடும்பத்தினர் நிராகரித்தனர்.

image

பத்ம பூஷண்:

எஸ். ஜானகி

2013-ல் பத்ம பூஷண் விருது திரைப்பட பின்னணி பாடகி எஸ். ஜானகிக்கு அறிவிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என தென் மாநில திரைப்படங்கள் மற்றும் பாலிவுட்டில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடிய ஜானகி, தனக்கு அறிவிக்கப்பட்ட விருது காலம் கடந்து கிடைக்கும் கெளரவம் என்று கூறி விருதை ஏற்க முடியாது என்று அறிவித்தார். அந்த விருது அறிவிக்கப்படும்போது எஸ். ஜானகிக்கு வயது 75.

விருதை நிராகரிப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜானகி, “கடந்த 55 ஆண்டுகளாக, திரைத் துறையில் புகழ் பெற்ற பாடகியாக இருந்தேன். ஆனாலும், மத்திய அரசு, என்னை அங்கீகரிக்கவில்லை. நான் பாடிய அனைத்து பாடல்களுமே, அந்தந்த மாநில ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. என் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் மற்ற மொழிகளில் எனது உச்சரிப்பு சரியாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். ஆனால் இவ்வளவு காலம் தாழ்த்தி, எனக்கு கிடைத்துள்ள கெளரவத்தை ஏற்க எனக்கு மனம் வரவில்லை.

அதற்காக, மத்திய அரசு மீது, எனக்கு எந்த கோபமும் இல்லை. நான் தவறு செய்துவிட்டதாகவும் கருதவில்லை. ஆனாலும், இந்த விருதை வாங்கப் போவது இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறியிருந்தார். மேலும், அவர் கூறுகையில், தென்னிந்தியாவைச் சேர்ந்த கலைஞர்களுக்கும் விருது வழங்குவதில் பாரபட்சமின்றி, வழங்க முயலுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இவரைப்போல் பல்வேறு காலக்கட்டத்தில், பெங்கால் நாடகக் கலைஞர் சிசிர் குமார் பாதிரி, சமூகவியலாளர் ஜி.எஸ். குர்யே, பத்திரிக்கையாளர்கள் நிகில் சக்ரவர்த்தி, கே. சுப்ரமணியம், வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர், தொழிலதிபர் கேசுப் மஹிந்திரா, ஆர்.எஸ்.எஸ். தட்டோபந்த் தெங்காடி, முன்னாள் ராஜஸ்தான் அமைச்சர் சித்தாராஜ் தட்டா, குடிமைப் பணி அதிகாரி எஸ்.ஆர். சங்கரன், கிருஷ்ணா சோப்டி ஆகியோர் பத்ம பூஷண் விருதுகளை புறக்கணித்தனர். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மாவுக்கு அவரது மரணத்துக்கு பின்பு 2014-ல் அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை ஏற்க, அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர். சேத் கோவிந்த் தாஸ், விருந்தாவன் லால் வர்மா, கே. ஷிவராம் கரந்த், இந்தர் மோகன், சத்யபால் தங், புஷ்பா மிட்ரா பார்கவா, சுகுதேவ் சிங் தின்சா, குஷ்வந்த் சிங் ஆகியோர் விருதுகளை திருப்பி அளித்தனர்.

image

பத்ம ஸ்ரீ:

பி. ஜெயமோகன்

கடந்த 2016-ம் ஆண்டு பிரபல தமிழ் எழுத்தாளர் பி. ஜெயமோகன், பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்து இருந்தார். விருதை ஏற்றுக்கொள்வது தனது சுதந்திரத்தையும் தனது கருத்துகளின் நேர்மையையும் சமரசம் செய்யக்கூடும் என்பதால் அதனை வேண்டாம் என்று கூறினார். அதேபோல, மொத்தம் 20 பேர் பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்ததோடு, 10 பேர் பத்மஸ்ரீ விருதை திரும்ப வழங்கியுள்ளனர். பொதுவாக பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட நிராகரித்தது அல்லது திரும்ப அளித்ததுக்கு காரணமாக சொல்லப்படுவது என்னவெனில், தாமதமான விருது அறிவிப்பும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தங்களது பணிகளை செய்வதற்கு விருது தேவையில்லை எனவும், அரசியல் கொள்கை ஆகியவை உள்ளன. 

கடந்த 2018-ம் ஆண்டில்கூட திரை இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம பூஷண் விருதை மத்திய அரசு அறிவித்தது. அதுவும் காலம் கடந்து வழங்கப்பட்ட விருது என இளையராஜாவின் மகனும் இசை அமைப்பாளருமான கார்த்திக் ராஜா கூறினார். இருப்பினும், அந்த விருதை மகிழ்ச்சியுடன் பெறுவதாக இளையராஜா தெரிவித்தார். இசை உலகில் இளையராஜாவின் சிஷ்யனாக இருந்து தமிழ், தெலுங்கு, பாலிவுட் மட்டுமின்றி திரைத்துறையில் ஹாலிவுட்டிலும் சாதித்தவர் ஏ.ஆர். ரகுமான். குருவான இளையராஜாவுக்கு 2018-ல் கிடைத்த பத்ம பூஷண் விருதினை, அவரது சிஷ்யனான ஏ.ஆர். ரகுமானுக்கு 2010-லேயே மத்திய அரசு வழங்கி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.- 

சங்கீதா, நிரஞ்சன் குமார்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close