Published : 27,Jan 2022 07:41 AM

டெல்லி: ட்ரோன்களின் பிரமாண்டமான தோற்ற ஜாலம்

குடியரசு தின விழா மற்றும் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சிக்கான ஒத்திகைக்காக டெல்லி விஜய் சவுக் பகுதியில், இருண்ட வானில், ஆயிரம் ட்ரோன்கள் கொண்டு இந்தியாவின் பெருமை பறைசாற்றப்பட்டது.

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி விஜய் சவுக் பகுதியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் அரசு கட்டடங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தச் சூழலில், வரும் 29-ஆம் தேதி நடைபெறும் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சிக்கான ஒத்திகைக்காக அந்திப் பொழுதில் ஆயிரம் ட்ரோன்கள் கொண்டு வானில் சாகசம் நிகழ்த்தப்பட்டது.

உலக வரைபட வடிவில் தொடங்கி, இந்திய வரைபடம், தடியுடன் நடக்கும் மகாத்மா காந்தியின் உருவம், மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் இலட்சினை, மூவர்ணக் கொடி உள்ளிட்ட வடிவங்கள் வரை வானில் மிக பிரமாண்டமான தோற்ற ஜாலம் ட்ரோன்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. இதனை திரளானோர் கண்டு களித்து பரவசமடைந்தனர். பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சிக்காக முதல் முறையாக இந்த ட்ரோன்களின் கண்கவர் காட்சிகள் இடம்பெறவுள்ளன.