சாதியம் சீண்டிய தேசத்தின் மகள் - வந்தனாவுக்கான பத்மஸ்ரீவிருது முக்கியம் பெறுவது ஏன்?

சாதியம் சீண்டிய தேசத்தின் மகள் - வந்தனாவுக்கான பத்மஸ்ரீவிருது முக்கியம் பெறுவது ஏன்?
சாதியம் சீண்டிய தேசத்தின் மகள் - வந்தனாவுக்கான பத்மஸ்ரீவிருது முக்கியம் பெறுவது ஏன்?

இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அணி தோல்வியுற்றதும் வந்தனா சாதிய ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானார். இந்த சூழலில் அவருக்கு வழங்கப்படும் பத்மஸ்ரீ விருது சாதிய சக்திகளின் முகத்தில் அறைந்துள்ளது. இது குறித்து பார்ப்போம். 

இந்தியா உச்சி முகர்ந்த தேசத்தின் மகளின் வீட்டின் முன் திரண்டு நின்றது ஒரு கூட்டம். சாதியவாதத்தில் ஊறி, திளைத்த மூடர் கூட்டமது. டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி அரையிறுதியில் அர்ஜென்டினாவுடன் இந்தியா போராடி தோற்ற நிலையில், ஹரித்துவாரின் ரோஷனாபாத் நகரில் உள்ள வந்தனா கட்டாரியா வீட்டின் முன் திரண்டவர்கள், 'ஒடுக்கப்பட்டவர்கள் இந்திய அணியில் அதிகமாக இருப்பதாலேயே அணி தோல்வியை தழுவியது' என கூறி புளகாங்கிதம் அடைந்தனர். தங்களுக்குள்ளேயே சிரித்து, கிண்டல் செய்து நடனமாடினர். பட்டாசுகளை வெடித்து இந்தியாவின் தோல்வியை சாதியை முன்னிறுத்தி கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், அவர்களுக்கு தெரியாது தாய் நாட்டுக்காக தன் தந்தையின் இறுதி அஞ்சலியில் கூட பங்கேற்காமல் தியாகம் செய்தவர் வந்தனா என்பது!

ஆம் வந்தனாவின் வாழ்வில் எல்லாமுமாய் இருந்தவர் அவரது தந்தை. உறவினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அப்பாவின் உறுதுணையுடன் ஹாக்கி ஸ்டிக்கை கையிலெடுத்தவர் வந்தனா. எல்லாமுமாய் இருந்த உயிர் பிரிந்த போதும், கண்ணீருடனும், கனத்த மனதுடனும் நாட்டுக்காக பயோபுள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

''நான் இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு நிமிடமும் என் தந்தை என்னைப் பார்த்து மகிழ்வார். இறுதி அஞ்சலியில் கலந்துகொள்வதைக்காட்டிலும், இந்தியாவுக்காக விளையாடுவதையே தந்தை விரும்புவார்'' என்று கூறியவர் தான் வந்தனா. நேற்று அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று வந்தனாவின் சாதிப்பெயரை கூறி கிண்டல் செய்து ஆடியவர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது இந்த அறிவிப்பு. இந்த ஆண்டு விருதுபெற தகுதியாகி இருக்கும் ஒரே ஹாக்கி வீராங்கனை வந்தனா மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.

நாட்டிற்காக என்ன செய்தார் வந்தனா?

ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, காமென்வெல்த் போட்டி என எதை எடுத்துக்கொண்டாலும் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணிக்கு வந்தனா ஆற்றிய பங்கு முக்கியமானது. கடந்த 2013ம் ஆண்டு நாடே உற்று நோக்கிக்கொண்டிருந்த ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த போட்டியில் அதிக கோல் அடித்தவர் வந்தனா. ஒரு ஃபார்வர்ட் வீரராக இந்தியாவின் அட்டாக்கிங் முகமாக அறியப்பட்டவர், சீனியர் அணிக்காக 200 போட்டிகளுக்கும் மேல் ஆடி 60+ கோல்களை அடித்திருக்கிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தகுதி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

அதுமட்டுமல்லாமல், 2015 உலக ஹாக்கி லீக்கில் 11 கோல்கள் அடித்து அசத்தினார். ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனைகளில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் அட்டாக்கிங் கிங்காக, பார்வர்ட் பிளேயராக பல ஆண்டுகளாக கைகொடுத்தவரை ஒரு கூட்டம் சாதியின் பெயரால் தூற்றியதைக்கண்டு நாடே கொந்தளித்தது.

சொல்லப்போனால் அவர்கள் தூற்றிய அந்த ஆட்டத்தில் 41 ஆண்டுகளுக்குப்பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக்கின் காலிறுதிக்குள் நுழைந்தது. அந்த தொடரில் நட்சத்திர வீரராக விளங்கி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்தவர் வந்தனா. இந்திய அணியின் நட்சத்திர வீரருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கிய மத்திய அரசு கௌரவிக்க உள்ளது. இந்த கௌரவம் அனைத்திற்கும் தகுதியானவர் வந்தனா கட்டாரியா என்பதில் மாற்றமில்லை.

வந்தனா கட்டாரியா மட்டுமல்ல, ரியோ ஒலிம்பிக்கில் பிவி சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றதும் இந்தியர்கள் இணையத்தில் தேடியது அவரது ஜாதியைத்தான். ஹீமா தாஸூம் இந்த பிடியில் சிக்கியவரே. போட்டிகளில் வெற்றி பெற்றதும் உயர்சாதியினரை தூக்கி பிடிப்பதும், தோல்வி என்றதும் ஒடுக்கப்பட்டவர்களை தூற்றுவதையும் சாதிய சக்திகள் கைவிட வேண்டும். மீறி நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பதே இதுபோன்ற குற்றங்களை தடுக்கும்!

விருது பெறும் தேசத்தின் மகள் - வந்தனாவுக்கு வாழ்த்துகள்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com