Published : 25,Jan 2022 09:45 PM
“எல்லாம் முடிஞ்சதுன்னு நெனச்சேன்; தோனியின் அந்த ஒரு முடிவுதான்”-ஹர்திக் பாண்ட்யா ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியுடனான தனது பயணம் முடிவு பெறாமல் இருக்க காரணமே முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் அந்தவொரு முடிவுதான் என மனம் திறந்து பேசியுள்ளார் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா.
“அனைவரிடத்திலும் நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். குறிப்பாக மாஹி பாயிடமிருந்து (தோனி அண்ணன்) நிறைய நுட்பமான விஷயங்களை நான் கற்றுள்ளேன். நான் அணியுடன் இணையும் போது வெறும் மூலப் பொருளாக (Raw Material) மட்டுமே சென்றிருந்தேன். அவர் என்னை பக்குவமடைய செய்தார். எனது தவறுகளிலிருந்து என்னை பாடம் கற்க செய்தார். நிறைய சுதந்திரம் கொடுத்தார்” என தெரிவித்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா.
தற்போது அவர் அகமதாபாத் ஐபிஎல் அணியின் கேப்டனாக எதிர்வரும் சீசனில் களம் காண உள்ளார். முன்னாள் கேப்டன் தோனியை கோலி, ரோகித், கே.எல்.ராகுல், சாஹல் என பலரும் போற்றி புகழ்ந்துள்ளனர். அந்த வகையில் பாண்ட்யாவும் அதனை செய்துள்ளார்.
“எனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நான் வீசிய முதல் ஓவரில் 22 - 24 ரன்கள் வரை கொடுத்திருந்தேன். அப்போது இதுதான் எனது கடைசி போட்டி என எண்ணியிருந்தேன். பின்னர் அந்த போட்டியில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஃபீல்ட் செய்ய சென்றுவிட்டேன். கொஞ்சம் நேரம் கழித்து எனக்கு பந்து வீசும் வாய்ப்பை தோனி கொடுத்தார். அது வெறும் வாய்ப்பு அல்ல எனக்கு அவர் கொடுத்த நம்பிக்கை. அவரது அந்த முடிவு என்னை காத்தது” என சொல்லி உள்ளார் பாண்ட்யா.