[X] Close

''தமிழகத்தில் இந்தி படிப்பதை தடுக்கவில்லை.. ஆனால்..'' - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

வீடியோ ஸ்டோரி

தமிழகத்தில் இந்தி மொழி படிப்பதை யாரும் தடுக்கவில்லை எனவும், இங்கு இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது என்பது கொள்கை முடிவு என்றும் உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது

புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு நிலவி வருவதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் அர்ஜுனன் இளையராஜா என்பவர் வழக்குத் தொடர்ந்தார். பல தரப்பட்ட நிபுணர்களிடம் கலந்து பேசி உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பு எனக் கூறி எதிர்ப்பது நியாயமற்றது என்று மனுவில் அர்ஜுனன் இளையராஜா குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிடவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

image


Advertisement

இதை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, எந்த மொழியை கற்பிக்க வேண்டும் என்பதில் மாநில அரசு முடிவெடுக்கலாம் என்ற போதும், இந்தி படிக்கும் வாய்ப்பு இல்லாததால் தமிழக மக்கள் பாதிக்கப்படக் கூடும் என்பதால் இவ்விவகாரத்தில் மக்கள் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். கர்நாடகாவும் ஆந்திராவும் மும்மொழி கொள்கையை பின்பற்றும் நிலையில் தமிழகத்தில் அதை பின்பற்றுவதில் என்ன சிக்கல் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மாநில அரசின் தலைமை வழக்கறிஞர், தமிழகத்தில் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை எனவும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது என கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, மனு மீது நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close