
தமிழக சட்டப்பேரவை உரிமைக் குழு 17 உறுப்பினர்களை கொண்டது. சட்டப்பேரவையில் உரிமை மீறலாக கருதப்படும் செயல் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் படைத்தது இந்த அமைப்பு.
இதில் துணை சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரும் இருப்பார்கள். தற்போது அதிமுக 2 அணிகளாக பிரிந்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் 7 பேரும், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 3 பேரும், எதிர்க்கட்சியான திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் 7 சட்டமன்ற உறுப்பினர்களும் உரிமைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது உரிமைக்குழுவின் தலைவராக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளார். இவர், முதலமைச்சர் பழனிசாமியின் ஆதரவாளர் ஆவார். இவரைத் தவிர இக்குழுவில் 17 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், எம்.கீதா, எஸ்.எஸ்.சரவணன், எம்.பரமேஸ்வரி, ஏ.மருதமுத்து, ஜெ.என்.கே.ராமஜெயலிங்கம் ஆகிய ஏழு பேர் முதலமைச்சர் பழனிசாமி அணியைச் சேர்ந்தவர்கள்.
டி.ஏ.ஏழுமலை, ஆர்.தங்கதுரை, எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகிய மூன்று பேர் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஆவர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.ரவிச்சந்திரன், கே.சுந்தர், கே.ஆர்.பெரியகருப்பன், மதிவாணன், எஸ்.ரகுபதி ஆகிய ஆறு திமுகவினருடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதாரணியும் உரிமைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.