Published : 25,Jan 2022 06:08 PM
மார்வல் மூவிஸ் பாணியில் மாஸ்: ’தோர்’ சன்னி, ’ஹல்க்’ ராகுல்.. களைகட்டும் பஞ்சாப் தேர்தல்!

காங்கிரஸ் தலைவர்களை சூப்பர் ஹீரோக்களாக சித்தரித்து வித்தியாசமான முறையில் பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை கையிலெடுத்துள்ளது காங்கிரஸ்.
கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக 5 மாநில தேர்தல்களிலும் அரசியல் கட்சிகள் தெருமுனைக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசியல் கட்சிகளின் பார்வை முழுவதும் இணையத்தை நோக்கி திரும்பியுள்ளது. அந்த வகையில் பஞ்சாப் முதலமைச்சராக இருக்கும் சரஞ்சித் சன்னியை மார்வல் படங்களில் வரும் தோர் கதாபாத்திரத்தை போல சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநில காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடபட்டுள்ள இந்த வீடியோவில் 'அவஞ்சர் இன்வினிடி வார்' படத்தின் வீடியோ காட்சியில் தோர் கதாபாத்திரத்திற்கு பதிலாக முதல்வர் சரண்சித் சிங் சன்னியின் முகம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவஞ்சர் திரைப்படத்தின் பிரபலமான போர்க்காட்சியை எடிட் செய்து, அதில் ஹல்க் உருவில் ராகுல்காந்தியையும், நவ்ஜோத் சிங் சித்துவை கேப்டன் அமெரிக்காவுடனும் ஒப்பிட்டு சித்தரித்துள்ளனர்.
We will do whatever it takes to redeem our beloved state from the clutches of evil forces working against the interest of Punjab and its people. #CongressHiAyegipic.twitter.com/6lVxqkN4VC
— Punjab Congress (@INCPunjab) January 24, 2022
இதில் பிரதமர் மோடி, அரவிந்த் கெஜ்ரிவால், அமரிந்தர் சிங், சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டு, இவர்கள் அனைவரையும் சரண்சித் சிங் சன்னி வெற்றி கொள்வதாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.''பஞ்சாப் மற்றும் அதன் மக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் தீய சக்திகளின் பிடியில் இருந்து எங்கள் அன்பான மாநிலத்தை மீட்டெடுக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்'' என அந்த பஞ்சாப் காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவுக்கு கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.