[X] Close

பஞ்சாப் கிங்ஸ் டூ இந்திய அணி: கே.எல்.ராகுலை விடாமல் துரத்தும் கேப்டன்சி சோகம்!  

விளையாட்டு

From-Punjab-Kings-to-Indian-Cricket-Team-Captaincy-task-tragedy-for-KL-Rahul

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல், அணியின் துணை கேப்டனாகவும் இயங்கி வருகிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 என சிறப்பாக பேட் செய்து வருகிறார் அவர். இருப்பினும் கேப்டன்சி பணியின் போது மட்டும் ஏனோ தடுமாறுகிறார். ‘அந்தோ பரிதாபம்’ என சொல்லும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது. 

கே.எல்.ராகுலின் கேப்டன்சி சோகம் ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடங்கி இந்திய அணி வரை நீண்டுள்ளது. ஐபிஎல் களத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் ராகுல். 2018-இல் பேட்ஸ்மேனாக அந்த அணியுடன் ஆரம்பித்த அவரது பயணம் 2020-இல் கேப்டனாக மாறியது. அவர் விளையாடிய நான்கு சீசனிலும் சிறப்பாக ரன் குவித்தார். குறிப்பாக கேப்டனாக விளையாடிய போது 600+ ரன்களை அவர் குவித்தார். 2021 சீசனில் வலுவான அணி அமைந்த போதும் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடம் பிடித்தது பஞ்சாப். ராகுல் கேப்டனாக செயல்பட்ட போட்டிகளில் பஞ்சாப் அணி வெற்றி கோட்டுக்கு அருகே சென்று வெற்றியை கோட்டை விட்ட தருணம் எல்லாம் கூட நடந்துள்ளது. அது ஐபிஎல் போட்டி தானே என கடந்து வந்த சூழலில் தற்போது தென்னாப்பிரிக்க தொடரிலும் அது தொடர் கதையாக அமைந்துள்ளது. 

image


Advertisement

வலுவான இந்திய அணியை ஒருநாள் தொடரில் ஒயிட் வாஷ் செய்து அனுப்பி உள்ளது தென்னாப்பிரிக்கா. இத்தனைக்கும் அந்த அணியின் வேகப் புயல் ரபாடா கூட இந்த தொடரில் விளையாடவில்லை. ஒரு கேப்டனாக களத்திற்கு வெளியே போடும் ஸ்கெட்ச்களை சரியாக அப்ளை செய்கிறார் ராகுல். ஆனால் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ற வகையில் முடிவு எடுப்பதில்தான் அவருக்கு சிக்கல் இருப்பதை போல தெரிகிறது. உதாரணமாக ஒரு வெற்றிகரமான பேட்டிங் கூட்டணி அமைகின்ற போது அதனை தகர்க்க தனது பவுலர்களை ரொட்டேட் செய்ய தவறுகிறார். முதல் போட்டியின் தோல்விக்கு பிறகு தொடக்க வீரர் எனது டாஸ்க் இல்லை என சொல்லிவிட்டு அடுத்த இரண்டு போட்டியிலும் அந்த பொசிஷனில் தன்னை வலிய வந்து சேர்க்கிறார்.

மிடில் ஆர்டர் சோபிக்க தவறும் பட்சத்தில் சிறப்பான தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இருக்கும் போது அவரை ஆட வைத்து ஒரு தலைவனாக ராகுல் அழகு பார்த்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய தவறினார். ஒரு கேப்டனுக்கு வேண்டிய ஸ்பார்க் அவரிடம் இல்லை என தோன்றுகிறது. ரஹானே கூட சாதுவாக இருந்து காரியங்களை சாதிக்கும் கேப்டன் ரகம். ராகுலும் அந்த ரகம் என எண்ணி இருக்க அவர் அது பொய் என தனது செயல் மூலம் நிரூபித்துவிட்டார். 

image

மொத்தத்தில் இதில் அவரை குற்றம் குறை சொல்ல ஒன்றும் இல்லை. அவர் மீது அந்த டாஸ்க் திணிக்கப்படுவதாகவே தோன்றுகிறது. எந்தவொரு வேலையையும் விரும்பி செய்வதற்கும், விரும்பாமல் செய்வதற்கும் வித்தியாசங்கள் இருப்பதுண்டு. அது தற்காலிகமாக இருந்தாலும் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும். ரோகித் வந்தால் நமக்கு இந்த டாஸ்க் இல்லை என்ற மன உறுதியுடன் அவரது செயல்பாடு இருக்கிறது. இந்தியாவுக்காக இதுவரை 138 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் அந்த அனுபவத்தை தனது கேப்டன்சி டாஸ்கின் போது பயன்படுத்தியிருந்தால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் பாசிட்டிவான மனநிலையோடு அடுத்த தொடரை அவர் அணுக உதவியிருக்கும். ஆனால் அது நடக்காமல் போயுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close