Published : 24,Jan 2022 04:54 PM
திருச்சி: ஒரே இடத்தில் இறந்து கிடந்த 24 குரங்குகள்: கொல்லப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை

திருச்சி அருகே ஒரே இடத்தில் 24 குரங்குகள் உயிரிழந்த நிலையில் கிடந்ததால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ் சாலையோரம் ஒரே இடத்தில் 18 ஆண் மற்றும் 6 பெண் குரங்குகள் என மொத்தம் 24 குரங்குகள் இறந்த கிடந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருச்சி மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர்கள் 24 குரங்குகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த குரங்குகள் அனைத்தும் மந்தி வகையைச் சேர்ந்தது எனவும், மக்கள் வசிக்கும் பகுதியில் வாழ்ந்துவரும் இவ்வகை மந்திகளின் தொல்லை தாங்காமல் யாரோ விஷமிகள் சிலர் அடித்துக்கொன்றார்களா அல்லது விஷம் வைத்த காய், கனிகளை தின்றதால் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.
எனவே பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.