[X] Close

குடியரசு தின விழா: கொண்டாட்டங்களுக்கு தயாராகும் சென்னை கடற்கரை சாலை

தமிழ்நாடு

Republic-Day-Celebration--Chennai-Beach-Road-getting-ready-for-celebrations

சென்னையில் மெரினா கடற்கரை சாலையில், டி.ஜி.பி. அலுவலகம் எதிரே குடியரசு தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 26ம்தேதி காலை 8 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு, மதநல்லிணக்கத்திற்கான பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை அணிவிக்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்காக மெரினா கடற்கரை சாலையில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

image


Advertisement

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைப்பெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகம் உள்ள காரணத்தால் குடியரசு தின விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவில் அரசு துறைகளின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடைபெறுவது வழக்கம். இதேபோல் மாணவ, மாணவிகளின் ஆடல்-பாடல், கலை நிகழ்ச்சிகளும், ஒவ்வொரு மாநில கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு அரசு துறைகளின் அலங்கார ஊர்தி அணி வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட இருந்த வீரமங்கை வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோரின் அலங்கார அணிவகுப்பு வண்டிக்கு அனுமதி கிடைக்காததால் அந்த அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.அதன்படி 26ம் தேதி மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் 4 அலங்கார வண்டிகள் அணிவகுத்து வர ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது.

image

முதலாவதாக, அலங்கார ஊர்தியாக செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி குழுவினரின் நாதஸ்வரம், தவில், வீணை குழுவினரின் மங்கள இசை இடம் பெறுகிறது.இதில் மங்கள இசைக்கு ஏற்ப பரதநாட்டியம், வள்ளுவர் கோட்டம் தேர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பு நிகழ்ச்சியின் முக்கிய புகைப்படங்கள், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றிய புகைப்படங்கள் இடம்பெற உள்ளது.

அதேப்போல், இரண்டாவது அலங்கார ஊர்தியில் வீரமங்கை வேலு நாச்சியார், மருதுசகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒன்டிவீரண், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோரது சிலைகளுடன் வேலூர் கோட்டை, காளையார் கோவில் கோபுரம் ஆகியவை இடம்பெற உள்ளன..

இதேபோல் விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சி. செக்கு இழுக்கும் நிகழ்வுகள், பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்கள் ஆகியோரை காட்சிபடுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் அலங்கார ஊர்திகளில் இடம் பெறுகின்றன.

image

தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, கர்ம வீரர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ரெட்டமலை சீனிவாசன், வ.வே.சு. அய்யர், வாஞ்சி நாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், கன்னிய மிகு காயிதே மில்லத், ஜோசப் குமாரப்பா ஆகிய தலைவர்களை சித்தரிக்கும் தத்ரூப சிலைகளுடன் அலங்கார ஊர்தி என 4 ஊர்திகள் இடம் பெறுகிறது.

இதுதவிர, மத்திய அரசின் சார்பில் தரைப்படை, கப்பற்படை, விமானப்படையின் சாதனைகளை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து வருகின்றன.போலீசாரின் அணி வகுப்பு நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் மெரினா கடற்கரையில் ஒரு மணி நேரம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 35 நிமிட நேரத்தில் விழாவை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close