[X] Close

மாற்றம் காணும் குடியரசு தின கொண்டாட்டம்: அதிகரிக்கப்படுகிறது விமானப்படையின் வர்ண ஜாலங்கள்?

இந்தியா

Changes-done-in-Republic-days-celebration-due-to-Corona-3rd-wave

பனி மூட்டத்தில் கம்பீரமாக பவனிவரும் பீரங்கிகள்... சுருதி மாறாமல் அணிவகுப்பில் கவனத்தை ஈர்க்கும் முப்படை வீரர்கள்... வெளிநாட்டு விருந்தினருடன் மேடையில் மரியாதையை ஏற்கும் குடியரசு தலைவர் மற்றும் பிரதமர்... கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஆர்ப்பரிக்கும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்... இதுதான் நாம் வழக்கமாக காணும் குடியரசு தின கொண்டாட்டங்கள். ஆனால் இந்த வருட குடியரசு தின கொண்டாட்டத்தில் பல மாற்றங்கள் அறிமுகமாகின்றன. ஒவ்வொரு வருடமும் 10 மணிக்கு தொடங்கும் குடியரசு தின அணிவகுப்பு இந்த முறை அரை மணி நேரம் தாமதமாக பத்தரை மணிக்கு தொடங்க உள்ளது. பனி மூட்டத்தை தவிர்க்க இந்த ஏற்பாட்டை செய்துள்ள அதிகாரிகள் பொதுவாகவே ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தன்று லேசான மழைப்பொழிவு ஏற்படுகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தரையில் மட்டுமல்லாது விண்ணிலும் நடைபெறும். பல சிறிய ரக ட்ரோன் கேமராக்கள், விமானங்களின் அணிவகுப்பு நடைபெறும் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் தொடர்ந்து கண்காணிப்பு வளையத்தில் இருந்து கொண்டிருக்கும். போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் பார்வையாளர்களின் அடையாள அட்டைகளை பரிசோதனை செய்வதை தவிர அவர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பதற்கான ஆவணங்களையும் இந்த முறை பரிசோதிக்கவுள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 15 வயதுக்கு குறைவானவர்களுக்கு மட்டுமே இதிலிருந்து விலக்கு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்பட்டு ஐயாயிரம் பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

image


Advertisement

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த முறையும் சிறப்பு விருந்தினராக வெளிநாட்டுத் தலைவர் யாரும் கலந்து கொள்ளவில்லை. பல மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களை அழைக்க போடப்பட்டிருந்த திட்டம் ஒமைக்ரான் பரவலால் கைவிடப்பட்டுள்ளது. சென்ற வருடம் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வதை இதே காரணத்துக்காக கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் கட்டாயம் இருந்தாலும், துப்புரவு தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் போன்றோர் அணிவகுப்பைக் கண்டு களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் அணிவகுப்பு மற்றும் பிற குடியரசு தின பணிகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் முடிந்த அளவு குறைக்கப்பட்டுள்ளது.

image

அதை சரிக்கட்டும் வகையில் விமானங்களின் அணிவகுப்பு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரஃபேல் உள்ளிட்ட பல ரகங்களை சேர்ந்த 75 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்த வருட குடியரசு தின அணிவகுப்பில் பங்கு பெறுகின்றன. விமானங்களை இயக்குவதில் கொரோனா பரவல் சிக்கல்கள் இல்லை என்பதால் இந்த அம்சத்துக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே சுகோய், ஜாகுவார், ரஃபேல் உள்ளிட்ட பல்வேறு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் சாகசங்களில் ஈடுபடுவதை கண்டுகளிக்கலாம். விமானங்களில் இருந்து பார்க்கும்போது அணிவகுப்பு பகுதி எப்படி தெரிகிறது என்பதை காட்டும் வகையில் அணிவகுப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரிய எல்இடி திரைகளில் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.

image

குடியரசு தின கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்வான "பீட்டிங் ரீட்ரீட்" என்று அழைக்கப்படும் முப்படைகள் தங்களுடைய பாசறைக்கு திரும்புவதை குறிக்கும் அணிவகுப்பில் இந்த வருடம் ஆயிரம் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் கலந்து கொள்ளவுள்ளன. முப்படைகளின் இசைகள் முழங்கும் இந்த நிகழ்வின் இறுதியில் ஆளில்லாத விமானங்கள் வானில் பறந்து, பல வண்ணமயமான உருவங்களை "நார்த் ப்ளாக்" மற்றும் "சவுத் பிளாக்" என்று சொல்லப்படும் அரசு கட்டடங்களின் மேல் பிரதிபலிக்கும். இந்த ட்ரோன் விமானங்களின் அணிவகுப்பு மற்றும் பிற சைகைகள் ஒரே கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

"பீட்டிங் ரீட்ரீட்" நிகழ்ச்சி மாலை நேரத்தில் நாடாளுமன்ற வளாகம் அருகே உள்ள விஜய் சவுக் பகுதியில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி முடிவடையும் தருவாயில் லேசாக இருள் சூழ்ந்துவிடும் என்பதால், ஆளில்லாத ட்ரோன் விமானங்களின் வர்ண ஜாலங்களை கண்டுகளிக்க ஆகாய பின்னணி சரியாக இருக்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. அருகே உள்ள "நார்த் ப்ளாக் "மற்றும் "சவுத் பிளாக்" கட்டடங்களின் மேல் ஒளியைப் பாய்ச்சி மூவர்ணக்கொடி உள்ளிட்ட பல்வேறு உருவங்களை இந்த ட்ரோன் விமானங்கள் உருவாக்கிக் காட்டுவது மிகவும் சிறப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

- கணபதி சுப்பிரமணியம்

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close