ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படுகிறதா பூஸ்டர் தடுப்பூசி? - ஆறுதல் அளிக்கும் அமெரிக்க ஆய்வுகள்

ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படுகிறதா பூஸ்டர் தடுப்பூசி? - ஆறுதல் அளிக்கும் அமெரிக்க ஆய்வுகள்
ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படுகிறதா பூஸ்டர் தடுப்பூசி? - ஆறுதல் அளிக்கும் அமெரிக்க ஆய்வுகள்

உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்றின் வேகம் தீவிரமடைந்து கொண்டிருக்கிற இந்த வேளையில், ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை பூஸ்டர் தடுப்பூசி 90% தடுப்பதாகக் கூறியிருக்கிறது அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையத்தின் மூன்று ஆய்வு முடிவுகள்.
ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படுகிறதா என்பது குறித்து அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதல் ஆய்வுகள் இவை. தடுப்பூசி செலுத்தாதவர்கள் அதிக அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

என்ன சொல்கிறது ஆய்வு முடிவுகள்?

கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் கூட்டு நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கிறது. இது கொரோனாவிலிருந்து பாதுகாப்பதுடன், நோயின் தாக்கத்தையும் குறைத்து இருப்பதாக கூறியிருக்கிறது அமெரிக்க ஆய்வு. ஆகஸ்ட் 2021 லிருந்து தற்போது வரை அமெரிக்காவின் 10 மாகாணங்களில் கிட்டத்தட்ட 88 ஆயிரம் கொரோனா நோயாளிகளிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதில், இரண்டு டோஸ் தடுப்பூசிகள் 57% ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படுவது தெரியவந்திருக்கிறது. அதேசமயம் பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்களுக்கு 90% நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இந்த பூஸ்டர் தடுப்பூசியானது இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு செலுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல், பூஸ்டர் தடுப்பூசியானது அவசர சிகிச்சைக்கு நோயாளிகள் கொண்டுசெல்லப்படுவதை 82% குறைத்திருப்பதாகவும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன. இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகே அவை 38% பலனளிப்பதாக கூறுகிறது இந்த முதல் ஆய்வு.

இரண்டாவது ஆய்வு, ஏப்ரல் 4 முதல் டிசம்பர் 25, 2021 வரை அமெரிக்காவின் 25 மாகாணங்களில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து நடத்தப்பட்டது. அதில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று குறைந்த அளவே பாதிப்பு ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. 10 ஆயிரம் மக்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்களில் 149 பேரும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களில் 255 பேரும் பாதிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது.

மூன்றாம் ஆய்வை அமெரிக்க விஞ்ஞானிகள் குழு நடத்தியிருக்கிறது. பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு அறிகுறி தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 67 சதவீதம் குறைவாக இருப்பதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்படாது என்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

பூஸ்டர் தடுப்பூசிக்கு பிறகு தீவிர தொற்று ஏற்படுமா?

பூஸ்டர் தடுப்பூசிக்கு பிறகு கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைவாக காணப்பட்டாலும், ஒமைக்ரானால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மூன்று டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் கூட ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் பூஸ்டர் தடுப்பூசி தொற்றின் தீவிரத்தை குறைக்கிறது என்பது ஆறுதலான தகவல் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com