[X] Close

இந்திய பாரம்பரிய இடங்கள் 18: தஞ்சை பெருவுடையார் கோயில் - தமிழினத்தின் தனிப்பெரும் அடையாளம்

சிறப்புக் களம்

Indian-Heritage-Sites-18--Great-Living-Chola-Temples-

தமிழர்கள் வரலாறு என்று எடுத்துக்கொண்டால் சேர சோழ பாண்டியர்கள்தான் தமிழகத்தின் விலாசங்கள். இவர்களுக்கு நடுவில் ஏற்பட்ட போர்கள், அரசு விரிவாக்கத்திற்காக வெளியில் செய்த போர்கள், அதனால் ஏற்பட்ட வணிகம், வளர்ச்சி, போரின் வெற்றியைக் கொண்டாட எழுப்பப்பட்ட நினைவுச்சின்னங்கள், நடுகற்கள், காவியங்கள் என்று தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் பெரும் பங்கை இவர்கள்தான் எழுதியுள்ளனர்.

அதிலும் 'நடந்தாய் வாழி காவேரி' என்று புகழப்படும் காவேரியின் கரைகளைத் தன் தேசத்தின் பரப்பாகவும், தஞ்சையைத் தலைமையிடமாகவும் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர் இவர்கள். துங்கபத்திரை நதியின் கீழிருக்கும் இந்திய நிலப்பரப்பையும், இலங்கை, கடாரம் எனப்படும் மலேசியா, தாய்லாந்து பகுதிகளையும் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். கங்கை கரை வரை போர் புரிந்து சென்று அங்கிருந்து அடிமைகளைக் கொண்டு கங்கை நதியைத் தமிழகத்திற்கு எடுத்து வந்த கதைகளும் இவர்களின் வரலாற்றில் உண்டு. அவர்கள் தங்கள் வெற்றிச்சின்னங்களாக விட்டுச்சென்ற கோயில்களைதான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

image


Advertisement

தற்போதைய காலங்களில் கட்டிய சில மாதங்களில் வீழும் கட்டடங்களுக்கு நடுவில், 1,000 ஆண்டுகள் கடந்தும் அசையாமல், சிதையாமல் மனிதன் உருவாக்கிய ஒரு கட்டடம் இருந்தால் அது வியப்பிற்கு உரியதுதானே. சங்கம் தோன்றிய காலத்திலிருந்தே சோழர்கள் ஆட்சியும், அவர்களின் கலைப்படைப்பும் இருந்து வந்தது.

களப்பிரர்கள் காலத்தில் வீழ்ந்த சோழர்கள் ஆட்சியை 9-ஆம் நூற்றாண்டில் விஜயாலய சோழன் காலத்தில் மீட்டெடுத்தனர். அதற்குப் பின்வந்த ஆதித்த சோழன் கர்நாடகம் வரை தன் பரப்பை விரிவுபடுத்தினார். பராந்தகன் ராஷ்டிரகூடர்களை வென்று சோழ ராஜ்ஜியத்தை வடக்கு திசையில் விரிவாக்கினார். அடுத்து வந்த ராஜராஜ சோழன் வரலாற்றின் பெரும்பகுதியை தன்னகத்தே கொண்டுள்ளார்.

image


1000 ஆண்டுகளைக் கடந்த சோழனின் கோயில்: 

கிருஷ்ணா -கோதாவரி நதிக்கு கீழே இருக்கும் மொத்த பரப்பளவையும் தன்னகத்தே கொண்டு ஆட்சிபுரிந்து வந்தார் ராஜராஜ சோழன். கேரளா, லட்சத்தீவு, மாலதீவுகள் உள்ளடக்கிய பகுதிகளையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். கி.பி 985ல், சோழப் பேரரசனாக முடிசூடிக்கொண்ட ராஜராஜன், தன் 25-ம் ஆட்சியாண்டில் உலகமே வியக்கும் வண்ணம் பெரிய கோயிலைக் கட்டியெழுப்பினான்.

அப்படி கி.பி 1003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு கோயில் தான் தஞ்சை பெரிய கோயில் எனப்படும் பிரகதீஸ்வரர் கோயில். கி.பி 1003 - 1004ல் கட்டத் தொடங்கிய பெரிய கோயில், கி.பி 1010ல் கட்டி முடிக்கப்பட்டது. தஞ்சைப் பெரியகோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, கி.பி 1010ல் ராஜராஜனால் முதன்முதலாகக் குடமுழுக்கு செய்யப்பட்டது. ராஜராஜன் காலத்தில் இக்கோயில், `ராஜராஜேஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டது. அதன்பிறகு, பெருவுடையார் கோயில், பெரியகோயில், பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

image

தமிழர் இனத்தின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது, தஞ்சைப் பெருவுடையார் கோயில். முழுவதும் கற்களால் ஆன பெரியகோயிலின் எடை, சுமார் 1,40,000 டன் என்கிறார்கள் கட்டடக்கலை நிபுணர்கள். 216 அடி உயரம் கொண்ட கோயிலின் அஸ்திவாரம், வெறும் ஐந்தடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த கலை அமைப்பு, தனித்துவ கட்டிடக்கலை, சோழர்களின் ஆட்சியைப் பிரதிபலிக்கும் வரலாற்றுக் காரணம், தமிழ் வரலாற்றைக் குறிக்கும் சிறப்பம்சம் கொண்டதனால் 1987-இல் வாழும் சிறந்த சோழர் கோயில் என்ற பெயரில் தஞ்சை பெரிய கோயில் வரலாற்று நினைவாகச் சிறப்புப் பெற்றது. கி.பி 2004ஆம் ஆண்டு கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலும் இப்பட்டியலில் இணைக்கப்பட்டது. பிரகதீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே இருக்கும் லிங்கத்தின் பீடம், 3 அடி உயரமும் 55 அடி சுற்றளவும், 6 அடிக்கு கோமுகமும் கொண்டது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த விஸ்வரூபப் பீடத்தைச் செய்வதற்கு, குறைந்தபட்சம் 500 டன் எடையுள்ள பாறையை மலையிலிருந்து வெட்டி, நகர்த்திக் கொண்டுவந்திருக்க வேண்டும்!

image

காவிரிக்கரையின் மணல் படுக்கைகளுக்கு நடுவே வெறும் கற்களால் மட்டுமே எழுப்பப்பட்ட ஒரு கட்டடம் தஞ்சை பெரிய கோயில். இன்று வரையிலும் இவ்வளவு கற்களை எப்படி இங்கு கொண்டு போனார்கள் என்பது வியப்பே. சுமார் 216 அடி உயரமுள்ள 16 அடுக்கு கொண்ட விமானத்தை கொண்ட கோயிலாக அமைக்கப்பட்டுள்ளதால் இதை தட்சிண மேரு என்று அழைக்கின்றனர்.

விமானத்தின் மேலே அமைந்துள்ள கும்பம் சுமார் 80 டன் கொண்ட ஒற்றை கல்லாகும். இதை எப்படி விமானத்தின் மீது ஏறினர் என்கின்ற கேள்வி இன்றும் ஒரு புரியாத புதிராகவே அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் கோயில்களில் விமானங்களில் பெரிய விமான அமைப்பை கொண்ட கோயில் இது தான். கோயிலின் விமானத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இந்த விமான கலசத்தின் நிழல் தரையில் படாத அளவு விமானத்தின் அமைப்பு பரவலாக அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சுவரோடு அகழி சூழ்ந்த ஒரு கட்டடடமாக அமைந்துள்ளது. கேரளாந்தகன் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள முகப்பு கோபுரத்தின் வழியே உள்ளே சென்றால் ராஜராஜன் திருவாசல் அமைந்திருக்கும். அதன் வழியே நந்தி மண்டபம், முகப்பு மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் வழியே சென்றால் 3.5 மீட்டர் உயரத்தில் சிவன் சிலை அமைந்திருக்கும் பிரதான கோயிலை அடையலாம். கருவறைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள பெரிய நந்தி 20 டன் கொண்ட ஒற்றை கல்லால் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த நந்திக்கு பிரதோஷ நாளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பிரதான கோயிலை சுற்றி மகிஷாசுரமர்த்தினி, முருகன், விநாயகர், விஷ்ணு, கஜலட்சுமி ஆலயங்கள் அமைந்துள்ளன. கோயிலின் சுற்றுப்புற சுவரோடு ஒட்டிய மண்டப கோயிலை சுற்றி முழுவதும் நிறைந்திருக்கிறது. கற்களை ஒன்றோடு ஒன்று இணைக்க சாந்துகள் ஏதும் இன்றி இன்டர்லாக்கிங் என சொல்லப்படும் பின்னிப்பூட்டல் முறையில் கற்களை அடுக்கி இக்கோயிலைக் எழுப்பியுள்ளனர் என்பது வியக்க வைக்கிறது. 1003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்டட வேலை ராஜராஜசோழனின் 25ஆம் ஆட்சியாண்டின் 275ம் நாளில் விமானத்திற்கு தங்கக் கலசம் கொடுக்கப்பட்டதோடு நிறைவடைந்தது.

image

சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வரை ராஜராஜன்தான் பெரிய கோயிலைக் கட்டினார் என்பதே உலகத்துக்குத் தெரியாது. அதற்கு முன்பு, கரிகால் சோழன்தான் இதைக் கட்டினார், காடுவெட்டிச் சோழன் என்பவர்தான் கட்டினார், பூதங்கள் வந்து கட்டின என எக்கச்சக்க வதந்திகள் பரவின.

1896-ல் ஜெர்மனைச் சேர்ந்த கல்வெட்டு அறிஞர் Hultz என்பவர்தான் முதன்முதலில் பெரியகோயிலின் கல்வெட்டுக்களை முழுமையாகப் படித்து இதைக் கட்டியவர் ராஜராஜ சோழன் என்று அறிவித்தார். குஞ்சர மல்லன் என்பவர்தான் பெரியகோயிலைக் கட்டிய தலைமை கட்டடப் பொறியாளர். இவருக்கு, ராஜராஜப் பெருந்தச்சன் என்று பட்டம் கொடுத்திருக்கிறார், ராஜராஜன்.

கோயிலின் மற்ற வேலைகளைச் செய்தவர்களையும் சமமாகவே மதித்திருக்கிறார். கோயிலில் நாவிதராக வேலை பார்த்தவருக்குக் கொடுக்கப்பட்ட பட்டம், ராஜராஜப் பெரு நாவிதன். பரதநாட்டியத்தின் 108 கரணங்களில் 87 கரணங்களை கோயிலின் வெளிப்புற சுவற்றில் பதித்துள்ளனர். பிச்சை பாத்திரம் ஏந்தி நிற்கும் ஈசன், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரன், யாழி படுத்திருக்கும் நிலையில் யானை, முகப்பிலுள்ள ஆளை நசுக்கும் யானையை விழுங்கும் யாளி சிலை என்று பல சிற்பங்கள் நம் கவனத்தை ஈர்க்கும்.

image

ஈசனை வழிபட்டு நிற்கும் ராஜராஜ சோழனின் உருவமும் இங்கு சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியர்கள், கிழக்கு ஆசியர்கள் சிற்பங்களும் இங்கு காணப்படுகின்றன. சிற்பங்களோடு சேர்ந்து சில முக்கிய கலைகளும் உண்டு. அதில் ஒன்று மியூரல் ஓவியங்கள். பிரஸ்கோ எனப்படும் ஈர சாந்துக்கு மேல் அமைக்கப்படும் ஓவிய வகை இங்கு பிரசித்தி பெற்றது. இலை, மரப்பட்டைகள், பூவிலிருந்து எடுக்கப்பட்ட சாந்துகளால் இவ்வோவியங்கள் வரையப்பட்டன. இதை நாயக்கர் காலத்திலும் ஐரோப்பியர் காலத்திலும் மீட்டமைக்க முயற்சிகள் நடந்தன.

கடவுள் உருவம் பெரிதும் இல்லாமல் தினசரி வாழ்க்கை முறையைக் காட்டும் ஓவியங்கள் இங்கு அதிகம் காணப்படுகின்றன. ஆலமரத்தின் அடியில் தியானிக்கும் ஒரு துறவி, அவரை சுற்றி விலங்குகள், பாம்பு போன்ற உருவங்கள் இந்த ஓவியத்தில் இடம்பெற்றுள்ளது. வரலாற்றுக்கு உதவியாக இருப்பது இங்குள்ள கல்வெட்டுகளே. தமிழ் மற்றும் கிரந்த எழுத்துக்களால் இந்த கோயிலின் வரலாற்றையும் சோழர்களின் வரலாற்றுச் சிறப்பையும் குறிக்கின்றது. இங்குள்ள ஒரு கல்வெட்டில் இந்த கோயிலின் அர்ச்சகர், கொல்லர், விளக்கேத்தி, ஆடல் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், தச்சர்கள் உள்ளிட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊதிய விபரமும், அவர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு ஊதியமாக நிலப்பட்டா கொடுக்கப்பட்ட விபரமும் இக்கோவில் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. கோயிலின் உருவாக்கத்துக்கு நிதியாகக் கொட்டிக் கொடுத்தவர்கள் முதல் ஒரே ஒரு செப்புக் காசு கொடுத்தவர் வரை அத்தனை பேர் பெயர்களையும், என் பெயருக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்துடன் கல்வெட்டில் குறிப்பிட வேண்டும் என்பது ராஜராஜன் பிறப்பித்த முதல் உத்தரவு. அனைவரது பெயர்களும் கல்வெட்டுக்களில் இருக்கின்றன. சிற்பம், ஓவியம், கல்வெட்டுகள் தாண்டி இந்த இடத்திற்கே உரிய சிறப்பாக மாறியது இங்குள்ள வெண்கல சிற்பங்கள். இக்கோயிலில் அமைந்துள்ள வெண்கல நடராஜர் சிலை பதினொன்றாம் நூற்றாண்டில் இங்கு நிறுவப்பட்டது.

image

சோழர்களின் ஆட்சியின்போது 14ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்த டெல்லி சுல்தானியர்கள் மதுரையில் ஒரு கிளை சுல்தான் ஆட்சியை அமைத்துச் சென்றனர். அவர்கள் காலத்தில் கொஞ்சம் சிதிலமடைந்த மதுரையில் உள்ள கோயில்களை அதற்குப்பின் வந்த பிற்கால சோழர்களும், நாயக்கர்களும் சரி செய்தனர். நாயக்கர் காலத்தில் பெரும்பாலான மராமத்து பணிகள் நடைபெற்றது.

இன்று நாம் காணும் கோயிலைச் சுற்றியுள்ள கோட்டை, 1777 ஆம் ஆண்டு பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்டது. 1922ஆம் ஆண்டிலிருந்து இக்கோயிலை இந்தியத் தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. சுல்தான்களின் தாக்குதல்கள், மாலிக்குகளின் படையெடுப்புகள், மேலை நாட்டினரின் பீரங்கிகள், இயற்கைச் சீற்றங்களான இடி, மின்னல், நில நடுக்கம் ஆகியவற்றைக் கடந்து 1000 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரமாக நிற்கிறது பெருவுடையார் கோயில்.

image

கோயிலின் சிறப்புகள்: 1954-ஆம் ஆண்டு மத்திய அரசு ஆயிரம் ரூபாய் நோட்டை தஞ்சை பெரிய கோயில் உருவத்தோடு வெளியிட்டது. ஆனால் 1975 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி செய்த பண மதிப்பிழப்பின்போது அது வழக்கிலிருந்து மறைந்தது.

1010 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இக் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா 2010ஆம் ஆண்டு சிறப்பாக நிகழ்த்தப் பெற்றது. இதற்காக மத்திய அரசு சிறப்பு தபால் தலைகளையும் வெளியிட்டது. மத்திய ரிசர்வ் வங்கி ஐந்து ரூபாய் நாணயத்தை தஞ்சை பெரிய கோயிலின் உருவத்தோடு வெளியிட்டது. மும்பை அச்சகம் சிறப்பு ஆயிரம் ரூபாய் நாணயத்தை தஞ்சை பெரிய கோயிலின் கோபுரத்தைப் பதித்து வெளியிட்டது. 2010ஆம் ஆண்டு செம்மை அரிசி என்ற அரிசி வகைக்கு ராஜராஜன் 1000 என்ற பெயர் வைக்கப்பட்டது.

image

கங்கை கொண்டான் முதல் கடாரம் கொண்டான் வரை!

ராஜராஜன் மகனான ராஜேந்திர சோழன் தன் தந்தையைத் தாண்டி நாட்டை விரிவு படுத்த வேண்டும் என்பதற்காக ஒடிசாவின் கலிங்கர்கள், வங்காளத்தின் பாலர்கள், கங்கைக் கரையில் உள்ள மன்னர்களை வென்று கங்கை கொண்டான் என்ற பெயரை தன்னகத்தே கொண்டார். அதன் பின் தேடல் தீராத ராஜேந்திர சோழன் மலேசியா பகுதியை வென்று கங்கை கொண்டார் ஆக இருந்தவர் கடாரம்கொண்டான் ஆக மாறினார்.

கங்கைக்குக் கீழ் உள்ள பெரும்பாலான இந்திய நிலப்பரப்பு ராஜேந்திர சோழன் ஆட்சியின் கீழ் இருந்தது. அதுபோக தென்னாசியாவின் இந்தியப் பெருங்கடல் ஒட்டிய நாடுகள் அனைத்தும் சோழர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. கங்கைகொண்ட வெற்றியின் சின்னமாக கங்கைகொண்ட சோழபுரம் என்ற புது தலைநகரத்தை ராஜேந்திரன் உருவாக்கினான். அங்கே எழுப்பப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் சிறப்புப் பெற்றது.

image

தந்தை கட்டிய பெரிய கோயிலை விட சிறப்பான ஒரு கோயிலாக இதைக் கட்ட எண்ணி, பணியைத் தொடங்கினார். சதுர அமைப்பு கொண்ட ஒரு கோயிலை இன்றைய பெரம்பலூர் பகுதியில் எழுப்பினார். 15 மீட்டர் உயரம் கொண்ட ஒரு விமானத்தை எழுப்பி அதன் கீழ் ஒரு சிவனை பிரதிஷ்டை செய்தார். ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட இக்கோயில் பெரும்பாலான வெண்கலச் சிலைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

நந்தி மண்டபம், அலங்கார மண்டபம், மகா மண்டபம், முக்கிய மண்டபம், அர்த்த மண்டபம் வழியே ஒன்பது அடுக்கு கொண்ட ஸ்ரீ விமானம் கருவறையை அடையலாம். மாசி சிவராத்திரி ஐப்பசி பவுர்ணமி மார்கழி திருவாதிரை நாட்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படும். இக்கோயிலை ஒட்டி சிம்ம கேணி என்ற நீர்நிலை அமைக்கப்பட்டுள்ளது. கங்கையை வென்ற ராஜேந்திரன் அங்கிருந்த அடிமைகள் மூலம் எடுத்துவந்த கங்கை நீரை இந்த கேணியில் ஊற்றிப் பாதுகாத்து வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

1311 ஆம் ஆண்டு டெல்லி சுல்தான்களின் தூதுவராக வந்த மாலிக் கபூர் இங்குள்ள பெரும்பாலான கோயில்களை தாக்கியதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. 1311ல் குசுரவ் கான்,1323ல் முகமது பின் துக்ளக் ஆகியவர்கள் இப்பகுதியை சூறையாடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் மதுரை சுல்தானியர்கள் இப்பகுதியை ஆட்சி புரிந்து வந்தனர். 1378 ஆம் ஆண்டு விஜயநகர விஜயநகர ஆட்சியின் கீழ் வந்த இப்பகுதி நாயக்கர்கள் காலத்தில் மீட்டு அமைக்கப்பட்டது.

image

ராஜேந்திரனுக்குப் பின் வந்த குலோத்துங்க சோழன் விக்கிரமன் குலோத்துங்கன் 2 போன்ற மன்னர்கள் இந்த ஆட்சியை பாதுகாத்து வந்தனர். அதற்குப்பின் வந்த இரண்டாம் ராஜராஜ சோழன் தன் பகுதியை மேலும் விரிவுபடுத்தி அதன் வெற்றியைக் குறிக்கும் விதமாக ஐராவதேசுவரர் கோவிலை நிலைநாட்டினார்.

முன்னர் தலைநகரமாக இருந்த கங்கைகொண்ட சோழபுரத்தை மாற்றி அதன் அருகிலுள்ள பழையாறை-ஐரத்தாலி என்ற இடத்தை தலைமையிடமாக மாற்றினார். இன்று தாராசுரம் என்று அழைக்கிறோம் கும்பகோணத்தை அடுத்துள்ள இந்த இடத்தில் 18 கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1150 முதல் 1162 வரையிலான காலக்கட்டத்தில் அமைக்கப்பட்ட இந்த ஐராவதேஸ்வரர் கோயில் சிறப்பாகக் கருதப்படுவது ராஜகம்பீர திருமண மண்டபம். இது ராஜா அரசவை ஆக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோக ஏழு அரசவை அமைப்புகள் இங்கே காணப்படுகின்றன. கோனார்க், ஹம்பி கோயில்களில் கண்ட தேர் இக்கோயிலில் காணப்படுகின்றது. ஐரா என்றால் யானை. இந்திரனின் யானை ஐராவதம் என்றழைக்கப்படும். புராண தெய்வங்களான இந்திரன், அக்னி, வருணன், வாயு ,சூர்யா ,விஷ்ணு, சப்த கன்னிகள், சிவன், பார்வதி, முருகன், கணேசன் ஆகியவற்றிற்கான கோயில்களாக இது அமைந்துள்ளது. 1954ஆம் ஆண்டு முதல் இந்தியத் தொல்லியல் துறை இக்கோவிலைப் பாதுகாத்து வருகிறது.

image

தமிழர்களின் வரலாற்றைக் குறிக்கும் சிறப்பம்சம் நிறைந்த கோயில்களை, 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், சிறந்த கலை அமைப்பு, தனித்துவ கட்டடக்கலை, தமிழ் நாகரிகம், சோழர்களின் ஆட்சியைப் பிரதிபலிக்கும் வரலாற்றுக் காரணம், கோயில்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு, தனித்துவம் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 1,2,3 மற்றும் 4-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் சோழர்களின் கோவில்கள் சேர்க்கப்பட்டன.

சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு…

கோயில் அமைந்துள்ள இடம், சுக்கான் பாறையாகும். சென்னையிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தஞ்சை மாவட்டத்திற்குச் சென்று அங்கிருந்து கோயிலுக்குச் செல்லலாம். அதேபோல், தஞ்சை ரயில்நிலையத்திற்கு அருகிலேயே பெரிய கோயில் அமைந்துள்ளது. பெரிய கோவிலிலிருந்து 70 கிமீ தொலைவில் கங்கைகொண்ட சோழபுரமும், 40 கிமீ தொலைவில் தாராசுரமும் அமைந்துள்ளது.

image

இங்கு பிரம்மோற்சவம், ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா, அன்னாபிஷேகம், திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை பிரதோசம், சிவராத்திரி தேரோட்டம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படும். காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 9 மணி வரையும் திறந்திருக்கும் இந்த கோயிலில் சிவராத்திரி நேரங்களிலும், பெரும் விழா நாட்களிலும் இங்கு தேரோட்டங்களையும் காணலாம்.

image

சோழர் காலம் தொடங்கி, விஜயநகரப் பேரரசு, நாயக்கர் காலம், மராட்டிய ஆட்சிக் காலம், ஆங்கிலேயர்களின் காலம் எனக் கடந்த 1000 வருட இந்திய ஓவியங்கள் அனைத்தும் பெரிய கோயிலில் உண்டு. இப்படி ஓர் ஓவிய சங்கமத்தை இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது என்பத தமிழர்களின் தனிச் சிறப்பு.

(உலா வருவோம்...)

முந்தைய அத்தியாயம்: இந்திய பாரம்பரிய இடங்கள் 17: சுந்தரவனக் காடுகள்: அழிந்துவரும் உயிரினங்களின் சொர்க்கம்!

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close