Published : 20,Jan 2022 03:03 PM
'பிக்பாஸ்’ ஷிவானி நாயகியாக நடிக்கும் ’பம்பர்’ - கேரளாவில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

நடிகர் வெற்றி நடிக்கும் புதிய படத்தில் ‘பிக்பாஸ்’ ஷிவானி நாயகியாக நடிக்கிறார்.
‘பிக்பாஸ் 4’ மூலம் கவனம் ஈர்த்த ஷிவானி தற்போது கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் உறுதுணை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு, ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் படத்திலும் நாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்த நிலையில், ஷிவானி நடிக்கும் ’பம்பர்’ படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அறிமுக இயக்குநர் செல்வக்குமார் இயக்கிறார். இவர், இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் முத்தையாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் வெற்றிக்கு ஜோடியாக நடிக்கிறார் ஷிவானி.
இப்படத்தினை வேதா பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இசையில் கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதுகிறார். கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நிறைவடைந்துள்ளது.