[X] Close

"தெருக்கூத்து தான் எங்கள் நோய் தீர்க்கும் மருந்து" வெள்ளிகுப்பம்பாளையம் மக்களின் நம்பிக்கை

தமிழ்நாடு

Therukkuthu-is-the-hope-of-the-people-of-Vellikuppampalayam-who-are-our-cure-for-the-disease

இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் நடத்தப்படும் தெருகூத்து நாடகம் தான் தங்களது ஊரின் நோய் தடுப்பு மருந்தாக உதவுவதாக வெள்ளிகுப்பம்பாளையம் கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தமிழகத்தின் பாரம்பரிய கலைகளின் உன்னத வடிவமாக போற்றப்படும் தெருக்கூத்து, திறந்தவெளி தெருக்களின் சந்திப்பில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், 19-ஆம் நூற்றாண்டுகளில் செல்வாக்கு பெற்று வளர்ந்த இக்கலை, 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நலிவடையத் துவங்கியது.

image


Advertisement

தெருக்கூத்து பொழுதுபோக்கு கலையாக மட்டுமின்றி, மக்களுக்குத் தெரிந்த கதைகள், தெரியாத வரலாறுகள், நீதி போதனைகள் என பல்வேறு விஷயங்கள் தெருக்கூத்து வாயிலாக பரிமாற்றம் செய்யப்பட்டன. தற்போது பல நவீன கலைகள் உருவாகி, அவை காட்சி ஊடகமாக மக்களை சென்றடைந்தாலும், இன்று வரை கிராம மக்களிடம் தெருக்கூத்து பெற்றிருந்த நெருக்கத்தையும், ஈடுபாட்டையும் பெறவில்லை என்றே கூறலாம்.

இந்நிலையில், தெருக்கூத்து கலையை தங்களது வாழ்வின் ஒரு அங்கமாகவும், தங்களின் நோய் தீர்க்கும் மருந்தாகவும் கருதி கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் ஊர்கூடி விடிய விடிய தெருக்கூத்தை நடத்தி மகிழ்கிறது கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வெள்ளிகுப்பம்பாளையம் கிராமம்.

image

மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளிகுப்பம்பாளையம், பகத்தூர், மூலத்துறை, கிச்சகத்தியூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு காலரா, கொல்லை நோய் என அழைக்கப்பட்ட பிளேக் போன்ற நோய்கள் பரவி பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. வீடு தோறும் மரணங்கள் தொடர்ந்த அக்காலகட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலையும் அளிக்கும் வகையில் இரண்ய நாடகம் என்ற தெருக்கூத்து இப்பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

image

பக்த பிரகலாதனின் கோரிக்கையை ஏற்று திருமால் நரசிம்ம அவதாரத்தில் தூணில் இருந்து வெளிவந்து தீமையின் அடையாளமான இரண்யனை அழிப்பதாகக் கூறும் நாடகத்தால் அன்று தங்களது ஊரை பிடித்த நோய் பிணி மெல்ல மெல்ல விலகி மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் திரும்பியதாக தெரிவிக்கும் இக்கிராம மக்கள், அன்று முதல் இன்று வரை பல தலைமுறைகளாக தொடர்ந்து இந்த தெருக்கூத்து நாடகத்தை தங்களது ஊரின் நோய் தீர்க்கும் மருந்தாக கருதி நடத்தி வருகின்றனர்.

image

ஊர் மக்கள் ஒன்று கூடி முதல் நாள் மாலை துவங்கி விடிய விடிய நடத்தப்படும் இந்த இரண்ய நாடக தெருக்கூத்து, இரவு முழுவதும் தொடர்ந்து அடுத்த நாள் காலை இரண்யன் கொல்லப்பட்டு இறைவனின் கோபம் தணிந்த பின்னரே நிறைவடையும். ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா கால கட்டுப்பாடுகளால் இதில் மாற்றம் செய்யப்பட்டு காலை துவங்கி இரவுக்குள் முடிக்கப்படுகிறது.

இதில், முழுக்க முழுக்க உள்ளூர் கிராமத்தினரே வேடமிட்டு நடிப்பதும், இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எந்த பகுதியில் பணி நிமித்தமாக இருந்தாலும் தெருக்கூத்து நாடகம் நடத்தப்படும் நாளில் தவறாமல் ஊர் திரும்பி இக்கூத்தில் பங்கெடுப்பது தனிச்சிறப்பு.

image

நம் பாரம்பரிய கலைகள் கலைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல, மக்கள் பயன்பாடிற்காக உருவாக்கப்பட்டவை என வலியுறுத்தும் இப்பகுதி கிராமமக்கள், நாங்கள் நோய் நொடியின்றி வாழ வழிவகுக்கும் இக்கலை வடிவம் இனி வரும் ஆண்டுகளிலும் விடாது தொடரும் என்கின்றனர். இவர்களின் அசையாத நம்பிக்கை ஒரு தொன்மையான கலையினை வாழவைத்து கொண்டிருகின்றது.

செய்தியாளர் : இரா.சரவணபாபு

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close