[X] Close

7ஆயிரம் கோடி கடன்.. கணவரின் இழப்பு - சிங்கப்பெண்ணாக சீறி 'காபி டே'வை மீட்ட மாளவிகா!

சிறப்புக் களம்

How-Malavika-Hegde-revived-Cafe-Coffee-Day-after-VG-Siddhartha-died

2019ம் ஆண்டின் ஜூலை மாதம் அது. 'கஃபே காபிடே' நிறுவனர் சித்தார்த்தா மங்களூருவில் உள்ள ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட செய்தி காட்டுத்தீ போல பரவியது. அனைத்து ஊடகங்களிலும் அன்று மட்டுமல்ல, அந்த வாரம் முழுவதும் அது தான் தலைப்புச் செய்தி. சித்தார்த்தா ஏன் தற்கொலை செய்துகொண்டார் என அலச ஆரம்பித்தனர். கஃபே காபிடே என்ற சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்... தனி மனுஷியாக போராடி சாதித்த  சிங்கப்பெண் - மாளவிகா ஹெக்டே!!

வெளிநாடுகளுக்கு ஒரு ஸ்டார் பக்ஸ் என்றால், இந்தியாவுக்கு கஃபே காபிடே. சுமார், 3,000 ஏக்கர் காப்பி தோட்டங்கள், நாடெங்கும் 1,600 காபி டே கடைகள் என இந்தியாவின் மிக பெரிய கார்ப்பரேட் நிறுவனராக வலம்வந்தவர் வி.ஜி.சித்தார்த்தா. அந்த அளவுக்கு பிரபலமான இந்த நிறுவனத்தின் முதல் கடை 1996-ம் ஆண்டு பெங்களூரில் திறக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு வாக்கில், நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை வைத்திருக்கும் ஒரு பெரிய வணிகக் குழுவாக வளர்ந்தது. காபிடேவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தை மறுக்க முடியாது. இதையடுத்து இந்தியாவின் மூலை முடுக்களில் காபிடே கடைகள் திறக்கப்பட்டன.


Advertisement

ஒரு கட்டத்தில் கடைகளின் எண்ணிக்கையுடன், கடனும் கூடியது. இந்த நிலையில்தான் கடன் பாக்கியை சமாளிக்க முடியாமல் 2019ம் ஆண்டு விஜி சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டார். கஃபே காபி டே நிறுவனம்,சித்தார்த்தின் மரணத்துக்குப் பின் திண்டாடிப்போனது. என்ன செய்வது என குடும்பமே தத்தளித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்றார் சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா.

யார் இந்த மாளவிகா ஹெக்டே?

சித்தார்த்தா இறப்புக்குப்பிறகு கஃபே காபிடேவின் வரலாறு இத்தோடு முடிந்துவிட்டது என எண்ணிக்கொண்டிருந்தவர்களின் எண்ண ஓட்டத்தை மாற்றி எழுதினார் மாளவிகா. கணவரின் இறப்புக்கு பிறகு நிறுவனத்தை அவர் தூக்கி நிறுத்திய விதம் அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது. மாளவிகாவை பொறுத்தவரை 'பார்ன் வித் சில்வர் ஸ்பூன்' என்பதற்கு ஏற்ப, செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் தான் மாளவிகா. கவலைகளின் ரேகைகளை படராத அவரது வாழ்வில், கணவரின் இறப்புக்கு பிறகு அடுக்கடுக்கான சவால்கள் எதிர்நோக்கியிருந்தன.

சவால்கள் என்றால், கொஞ்ச நஞ்சமல்ல. ஒருபுறம் கணவரின் இறப்பு. மறுபுறம் 7,000 கோடி ரூபாய் கடன்; நிறுவனத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை, தவிர, தனது இரண்டு குழந்தைகளை கரை சேர்க்க வேண்டும் என சோதனை சுழன்றி அடித்தது. நிறுவனத்தை மூடிவிட்டால் தொழிலாளர்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள் என்பதும், கணவரின் கனவு நிறுவனத்தை மூடக்கூடாது என்ற வைராக்கியமும் அவரை முன்னேறிச்செல்ல உந்தியது.

சரிந்த சாம்ராஜ்ஜியத்தை மீட்டெடுத்த 'காஃபி டே' மாளவிகா - ஓர் உத்வேகக் கதை | Malavika  Hegde, a Determined CEO Who Saved CCD From Dying - hindutamil.in

உறுதியுடன் களமாடினார்:

பெரும் கடனிலிருக்கும் ஒரு நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்றாகிவிட்டது. இனி என்ன செய்வது? கடனிலிருந்து நிறுவனத்தை எப்படி மீட்பது என இராப்பகலாக சிந்தித்து இறங்கி அடிக்க ஆரம்பித்தார். ரூ.7,000 கோடி கடன்களை அடைக்கும் வழிகளை ஆராய்ந்தவர், முதலில் 10 கோடி, 20 கோடி என்று சிறு, சிறு கடன்களை அடைக்கத் தொடங்கினார்.

பெரிய கடன்களை அடைக்க வங்கிகளிடம் அவகாசம் வாங்கினார். நிறுவனத்தின் 25,000 ஊழியர்களுக்கு மாளவிகா எழுதிய கடிதத்தில், சொத்துக்களை விற்பதன் மூலம் கடனை சமாளிக்கக்கூடிய அளவிற்கு குறைப்பதாக நம்பிக்கையளித்தார். அதேபோல கடன் பெற்றவர்களை சந்தித்து, 'உங்கள் கடன்கள் நிச்சயம் திருப்பி செலுத்தப்படும்' என உறுதியளித்தார். சொன்ன சொல்லை காப்பாற்ற அயராத உழைப்பையே துணையாக கொண்டு துடுப்பை செலுத்தினார்.

பிரச்னைக்கான காரணங்களை ஆராய்வதே பிரச்னைகளை தீர்ப்பதற்கான முதல்வழி. அதன்படி, தேவையற்ற, லாபம் தராத இடங்களில் இருந்த காஃபி டே கிளைகளுக்கு மூடு விழா நடத்தினார். அதற்கு மாற்றாக, மக்கள் விரும்பும் இடங்களை தேர்வு செய்து, முக்கியமான மால்கள், ஐடி பார்க்குகள், உள்ளிட்ட இடங்களில் புதிய கிளைகளை திறந்து நம்பிக்கை பாய்ச்சினார்.

புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதன் மூலம் நிறுவனத்திற்கு மூலதனத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தினார். கொரோனா லாக்டவுன் நாட்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதன்படி, காஃபி தூள்கள், காஃபி உபகரணங்கள் என பல புதிய தயாரிப்புகளை தனது நிறுவனத்தின் சார்பில் அறிமுகப்படுத்தி, லாக்டவுனை சமாளித்தார்.

malavika hedge: cafe coffee day: சாம்ராஜ்ஜியத்தை மீட்டெடுத்த தனிப் பெண்! -  meet malavika hegde ceo of cafe coffee day the single woman and wife of  late siddhartha | Samayam Tamil

அவரின் தொடர் உழைப்புக்கு கைமேல் பலன் கிட்ட ஆரம்பித்தது. ஆம்! மார்ச் 2019 இல் ரூ.7200 கோடியாக இருந்த கடன் 31 மார்ச் 2020 நிலவரப்படி ரூ.3100 கோடியாகக் குறைந்தது. இருள்படிந்த வாழ்வில் நம்பிக்கை ஒளி வீசத்தொடங்கியது. மாளவிகாவின் தொடர் முயற்சியின் விளைவாக, 2021ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி கடன் சுமை ரூ.1731 கோடியாகக் குறைந்துள்ளது.

கொரோனா காலத்திலும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து, கஃபே காபிடே கடைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தற்போது நாடு முழுதும் 572க்கும் மேற்பட்ட காபிடே கடைகள் இயங்கி வருகின்றன. தவிர, பல்வேறு நிறுவனங்களில் சுமார் 36,000 காபி விற்பனை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இவரது 20,000 ஏக்கர் காபி தோட்டத்தில் விளையும் காபி கொட்டைகள் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன.

நிறுவனம் முன்னேற, திட்டங்கள் மட்டுமே போதாது. மாறாக, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அச்சாணியாக திகழும் ஊழியர்களுடனான நல்லுறவும் முக்கியம். அந்த வகையில், காபிடே தொழிலாளர்களுடன் இணக்கமாகவும்,அவர்களின் நலனில் அக்கறை செலுத்தியவராகவும் மாளவிகா இருந்துள்ளார். இதனால்தான் கடினமான நேரங்களில் ஊழியர்கள் நம்பிக்கையுடன் நிறுவனத்தை தலைநிமிரச்செய்ய கடுமையாக உழைப்பை செலுத்தியுள்ளனர். இவை அத்தனையும் உள்ளடக்கியதே சிறந்த தலைமை பண்பு என்பதை நிரூபித்து, சூப்பர் ஹூமனாக மாறி காபிடேவை மீட்டிருக்கிறார் மாளவிகா. தூற்றிய வாய்கள் இன்று அவரை தூக்கி கொண்டாடுகின்றன. உண்மையில் வெற்றி என்பது இதுதானே.உடைந்து போவதைக்காட்டிலும், எதிர்த்து நின்று போராடுவது எத்தனை அழகானது...

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close