[X] Close

'கிரிக்'கெத்து 18: வரலாற்று நினைவாக விளங்கும் பாரம்பரிய சிறப்புமிக்க பொங்கல் டெஸ்ட் போட்டி

சிறப்புக் களம்

Indian-Traditional-rich-Pongal-Test-remains-in-the-history-of-Indian-Cricket-will-it-be-bring-back-to-Tamil-Nadu-in-this-Week-s-Puthiya-Thalaimurai-Series--

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு இந்தியா. கலாசாரம், பாரம்பரியம், பழக்கவழக்கம், மொழி என வேறுபட்டு நிற்கும் இந்திய மாநிலங்களை ஒற்றைப் புள்ளியில் இணைப்பது கிரிக்கெட் விளையாட்டு எனவும் சொல்லலாம். இந்த விளையாட்டை எந்தவித வேறுபாடுமின்றி பன்முகத்தன்மை கொண்ட இந்தியர்கள் பிரியத்துடன் கண்டு ரசிப்பதுண்டு. அப்படிப்பட்ட இந்திய கிரிக்கெட்டில் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க ‘பொங்கல் டெஸ்ட்’ கிரிக்கெட் போட்டி சென்னை நகரில் நடத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது அது வரலாற்றின் நினைவாக மட்டுமே எஞ்சியுள்ளது. 

எப்படி ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டு வருகிறதோ, அது போல இந்திய கிரிக்கெட் வாரியம் பொங்கல் டெஸ்ட் போட்டியை நடத்தி வந்துள்ளது. கால ஓட்டத்தில் அது கரைந்து போயுள்ளது. சிறப்புமிக்க பொங்கல் டெஸ்ட் போட்டியின் வரலாறு குறித்த நினைவுகளை மீள்பதிவு செய்வோம். 

image


Advertisement

‘பொங்கல் டெஸ்ட்’ வரலாறு!

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடைபெற்று வரும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிபோல ஒவ்வொரு ஆண்டும் நம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் உள்ள சேப்பாக்கம் - எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் மற்றும் நேரு மைதானத்தில் (அப்போது அது கார்ப்பரேஷன் மைதானம்) ‘பொங்கல் டெஸ்ட்’ போட்டியை நடத்தும் வழக்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் கடைபிடித்து வந்துள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி திங்களின் இரண்டாவது வாரத்தில் அந்த கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் தமிழ் மண்ணில் அறுவடை திருநாளான பொங்கல் விழா கொண்டாட்டங்கள் களைக்கட்டும். அதனால் அந்த டெஸ்ட் போட்டி ‘பொங்கல் டெஸ்ட்’ என்ற அடையாளத்துடன் அழைக்கப்பட்டுள்ளது. 

image

1959 - 60 காலகட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி உள்ளது. அந்த தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி சென்னை கார்ப்பரேஷன் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்திய அணியை குலாப்ராய் ராம்சந்தும், ஆஸ்திரேலிய அணியை ரிச்சி பெனாடும் வழிநடத்தினர். அந்த போட்டியில் இந்திய அணி ஃபாலோ ஆன் செய்து இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக ஸ்டம்புக்கு அருகே கரும்புகளை நிற்க வைத்து டாஸ் வீசுவதை ஒரு வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. பொங்கல் டெஸ்ட் போட்டி என்ற அடையாள சிறப்பை குறிக்கும் விதமாக இந்த ஏற்பாடாம். 

பொங்கல் டெஸ்ட் போட்டி 1988 வரை தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் சுழற்சி முறையில் பொங்கல் டெஸ்டில் விளையாடி உள்ளன. 

image

1960, 1961, 1962, 1964, 1967, 1973, 1975, 1977, 1979, 1980, 1982, 1985, 1988 என பதிமூன்று பொங்கல் டெஸ்ட் போட்டிகள் இந்த இரண்டு மைதானங்களிலும் நடைபெற்றுள்ளன. அதில் முதல் நான்கு போட்டிகள் கார்ப்பரேஷன் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. பொங்கல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆறு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. நான்கு போட்டிகள் சமனிலும், மூன்று போட்டிகள் தோல்வியிலும் முடிந்துள்ளன. இங்கிலாந்து 6 முறை, வெஸ்ட் இண்டீஸ் 4 முறை, பாகிஸ்தான் 2 முறை, ஆஸ்திரேலியா 1 முறை என பொங்கல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி உள்ளன.  

image

1988 சீசனில் கடைசி பொங்கல் டெஸ்ட் சென்னையில் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு 14 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் இதுவரை நடந்துள்ளது. அதில் ஒரு போட்டி கூட ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடத்தப்படவில்லை. 

image

பொங்கல் டெஸ்ட் போட்டி நடத்தப்படாமல் போனதற்கு காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட் வாரியம் சுழற்சி முறையில் கிரிக்கெட் விளையாடும் மைதானங்களை மாற்றும் கொள்கையை கொண்டு வந்தது. இதன் மூலம் நாட்டில் அமைந்துள்ள மற்ற கிரிக்கெட் மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும் என வாரியம் நம்பியது. அதனால் ஜனவரி இரண்டாவது வாரத்தில் 1988-க்கு பிறகு இதுவரை சென்னையில் டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. 

image

மீண்டும் வேண்டும் பொங்கல் டெஸ்ட்!

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம். 1934 முதல் இந்தியா இந்த மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. அதனால் இந்திய கிரிக்கெட்டின் பிரதான மைதானங்களில் ஒன்றான சேப்பாக்கத்தில் மீண்டும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் பொங்கல் டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் சொல்கின்றனர். 

image

ஏனெனில் இரண்டாவது வாரத்தில் மாநிலம் முழுவதும் விடுமுறை. அதனால் போட்டியை நேரில் பார்க்க பார்வையாளர்கள் அதிகம் வருவார்கள். அதே நேரத்தில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டின் வருகையால் கிரிக்கெட் விளையாட்டின் அசல் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதுத்தெம்பு மற்றும் புத்துயிர் கொடுக்கும் விதமாக அது அமையும் என்றும் சொல்லப்படுகிறது. நிச்சயம் அதனை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்கும் என நம்புவோம். இதனை உடனடியாக செய்துவிட முடியாது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணைகள் சில ஆண்டுகள் முன்கூட்டிய திட்டமிடப்படும். அதனால் பொங்கல் டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிட்டு இப்போதே அதற்கான அட்டவணையை வாரியம் தயார் செய்தால் அடுத்த சில ஆண்டுகள் முதல் மீண்டும் பொங்கல் டெஸ்ட் களைக்கட்டும். 

சென்ற வார அத்தியாயம்: 'கிரிக்'கெத்து 17: சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சி வரும் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

https://www.puthiyathalaimurai.com/newsview/126650/Indian-Women-Cricketer-Smriti-Mandhana-who-don-s-with-her-bat-in-international-cricket-arena-in-this-week-s-Puthiya-Thalaimurai-Series

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close