[X] Close

எளியோரின் வலிமை கதைகள்13: ’கடைசிவரை போஸ்டரும் பசையும்தான்’-சுவரொட்டிகளின் கண்ணீர் வாழ்க்கை

சிறப்புக் களம்

explaining-the-life-of-poster-sticking-workers

நம்முடைய வாழ்க்கையில் விளம்பரம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம். விளம்பரங்கள் பல வகைகளாக உள்ளன. காட்சி ஊடக விளம்பரமாகவும், அச்சு ஊடக விளம்பரமாகவும் இருக்கின்றன. பெரும்பாலும் அச்சு ஊடக விளம்பரங்களையே அனைவரும் விரும்புவதுண்டு. விளம்பரங்கள் வணிக நிறுவனங்கள், வீட்டில் நடைபெறுகிற சுப, துக்க நிகழ்வுகள், அரசியல் கட்சிகளின் நிகழ்வுகள், தேர்தல்கள் என பல வகைகளாக உள்ளது. இவற்றைப் பெரும்பாலும் வெளிப்படுத்துவது சுவரொட்டிகளாகவே இருக்கின்றன.

தினந்தோறும் நாம் செய்தித்தாள்களை பார்ப்பதுபோல, ஊரின் நிகழ்வுகளை சுவரொட்டிகள் மூலமாகவே அதிகம் தெரிந்து கொள்கிறோம். அப்படி அன்றாட நிகழ்வுகளை சுவரொட்டிகளாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அந்த சுவரொட்டி ஒட்டும் தொழிலாளிகளின் வாழ்வியலை அறிந்துகொண்டு என்று பார்க்கலாம் என புறப்பட்டோம். நான் முதலில் சந்தித்த நபர் சேகர். ஆனால் அவரை எல்லோரும் படையப்பா என்றுதான் அழைத்தார்கள். படையப்பா சேகரை சந்தித்தோம்.

image


Advertisement

''1980ல ரஜினிகாந்த் நடித்த பில்லா படம் வெளியானது. இந்த படத்துக்காக தாங்க நான் முதல்ல போஸ்டர் ஒட்ட ஆரம்பிச்சேன். விழுப்புரத்தில் எல்லா தெருவுலேயும் போஸ்டர் ஒட்டுவேன். அந்த வருஷத்துல எனக்கு போஸ்டர் ஒட்டுவதற்கு 50 பைசா. இப்ப இருக்க மாதிரி இல்லீங்க. போஸ்டர் இதைவிட கொஞ்சம் சின்னதாக இருக்கும். இப்ப மாதிரியேதான் அப்போயும் ஒரு போஸ்டர் ஒட்டி விட்டால் போதும், உடனே கூட்டம் கூட்டமாக நின்னு வேடிக்கை பார்ப்பாங்க. சினிமா போஸ்டர் தாங்க நமக்கு பெருசா கை கொடுத்துச்சு. இப்பயும் கை கொடுக்குது. எனக்கு சொந்த ஊர் காரைக்குடி. அப்பா ரிட்டயர்ட் மிலிட்டரி. கூட பொறந்தவங்க 3 அக்கா. ரெண்டு அண்ண. அதுல மூத்த அண்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்றார். நமக்கு சரியா படிப்பு வரல, நம்மள கவனிக்கிறது ஆளுங்க இல்லை. அப்பா மிலிட்டரி அப்படிங்கறதால பயந்து பயந்து வாழறேன்னு நினைச்சு பள்ளிக்கூடத்துக்கு போகல.

நான் தமிழ்நாடு முழுசும் போஸ்டர் ஒட்டி இருக்கேங்க. திருப்பதிக்கு கூட போய் போஸ்டர் ஓட்டியிருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா ஐம்பது பைசாவிலிருந்து ஒரு ரூபாய் கொடுக்க ஆரம்பிச்சாங்க. மதுரையில் தொடங்கி சென்னை வரைக்கும், சைக்கிள்ளே போஸ்டர் ஒட்டி கிட்டுவருவேன். கோயமுத்தூரில் தொடங்கி திருச்சி வரைக்கும் சைக்கிள்ளே போஸ்டர் ஒட்டிகிட்டு போவேன். நமக்கு தமிழ்நாடு முழுக்க வேலை கொடுக்கிறவங்க இருக்காங்க. இப்பெல்லாம் மூணு ரூபா நாலு ரூபாய் குடுக்குறாங்க. ஒரு ஷீட்ல ஆரம்பிச்சு பத்து ஷீட்டு வரைக்கும் ஒரே ஆளு போஸ்டர் ஒட்டுவேன். எனக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்.ரெண்டு பேரும் ப்ளஸ்டூ வரைக்கும் படிச்சாங்க.

image


Advertisement

இந்த போஸ்டர் ஒட்டி வருகிற வருமானத்தை வைச்சுதான் குடும்பத்தை நடத்திட்டு இருக்கேன். ரஜினிகாந்த் படையப்பா படம் வந்தப்ப தமிழ்நாடு முழுசும் போஸ்டர் ஒட்டினே அப்ப இருந்து எல்லாரும் என்ன "படையப்பா"ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.
போஸ்ட் ஒட்டறதுக்குன்னு நேரம் காலம் எதுவும் கிடையாதுங்க. எந்த நேரத்துலயும் போஸ்டர் ஒட்ட கூப்பிடுவாங்க. இறப்பு நிகழ்ச்சியா இருந்தா ராத்திரி நேரத்திலேயும் கூப்பிடுவாங்க. போஸ்டர் ஓட்றதிலே கவனமா இருக்கணும்.

அடுத்து நடக்குற நிகழ்ச்சி போஸ்டர் மேல ஓட்டிட்டோம்னா, மறுநாள் காலையில சண்டைக்கு வந்துருவாங்க. பெரும்பாலும் போஸ்டர்கள் சொற்ப எண்ணிக்கையில் தான் கொடுப்பாங்க. ஒவ்வொருநாளும் சுவத்துல புதுசு புதுசா போஸ்டர் வரும்போதெல்லாம், இது யாரு ஒட்டி இருப்பாங்கன்னு எங்களுக்குள்ளே தெரியும். முகூர்த்த நாளில் நிறைய கல்யாண போஸ்டர்கள் வரும். அவ்வளவுதான் அப்புறம் பொங்கல், தீபாவளி, ரம்ஜான்னு ஏதாவது வாழ்த்து போஸ்டர்கள் கொடுத்தால்தான் உண்டு. இப்ப நிறைய செல்போனில விளம்பரம் வர ஆரம்பிச்சதால போஸ்டருக்கு பெருசா மதிப்பு இல்லீங்க. ஆனாலும், எங்களுக்கு இது தவிர வேறு எந்த வேலையும் தெரியாது. இப்படியே போயிட்டு இருக்கு காலம். வயசு இருக்கிறவரைக்கும் போஸ்டரும் பசையும் சைக்கிளும்னு காலத்தை ஓட்டிக் வேண்டியதுதான்'' என்றார் படையப்பா சேகர்.

image

சுவரொட்டிகள் நாளை நடக்க இருப்பதையும் நமக்கு சொல்லுகிறது. நேற்று நடந்து முடிந்ததையும் நமக்கு நினைவூட்டுகிறது. சில உள்ளூர் நிகழ்வுகளை நாம் மறந்து இருந்தபோதும் அதை நினைவூட்டுகிறது. ஒருமுறை ஒரு சுவற்றில் சுவரொட்டி ஒட்டப்பட்டு அதன்மூலம் நாம் ஒரு தகவலை நாம் அறிந்தால் மறுமுறை அந்த பக்கம் போகும் போதெல்லாம் அந்த சுவர் மீது பார்வை இருந்து கொண்டே இருக்கும். இப்படி நமக்கு பல நினைவுகளை ஏற்படுத்துகிற மற்றுமொரு சுவரொட்டி ஒட்டுபவரை சந்தித்தோம்.

''என் பேரு முருகன். நான் ஒரு முப்பது வருஷமா போஸ்டர் ஒட்றேன். இருபது வயசுல மைதா மாவு காய்ச்சறத்துக்கு தொடங்கிச்சி என் வாழ்க்கை. இப்ப வரைக்கும் பசையும் போஸ்டருமாதான் வாழ்ந்துட்டு வர்றேன். அப்ப தியேட்டர்ல மாசம் முப்பது ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தேன். வாரத்துக்கு ஒருநாள் புது புது படமா வரும் அப்ப மட்டும் ராத்திரி முழுக்க போஸ்டர் ஒட்டுற வேலை தான் இருக்கும். சினிமா தியேட்டர் வேலை போக மத்த நேரங்கள்ல இரங்கல் போஸ்டர், கல்யாண வாழ்த்து போஸ்டர், அப்புறம் கம்பெனி விளம்பர போஸ்டர் ஒட்ட ஆரம்பிச்சேன்.

image

ஒரு ரூபாய் தொடங்கி இப்ப நாலு ரூபா வரைக்கும் போஸ்டருக்கு கொடுக்கிறாங்க. நிறைய அரசியல் கட்சி போஸ்டர் தான் நம்ம அடிக்கடி சுவத்துல பார்ப்போம் அதையும் நாங்க தான் ஒட்றோம். ஆனா அதுக்கு கூட முழுசா காசு குடுக்காம ஏமாத்திடுவாங்க அரசியல்வாதிங்க. அதை நினைக்கும் போது கஷ்டமா இருக்கும். இருந்தாலும் வயித்துக்காக மறுபடியும் அவங்க கிட்ட தான் வேலை செய்ய வேண்டி இருக்கும்.போராட்டம் அது இதுன்னு போஸ்டர் ஒட்டினா போலீஸ் போராட்டம் நடத்தறவன கூட பிடிக்க மாட்டாங்க. 

எங்கள போல கூலிக்கு போஸ்டர் ஒட்டரவங்கல புடிச்சிட்டு போயிடுவாங்க. அப்படி ஒரு கேஸ்ல என்னையும் போலீஸ் புடிச்சிட்டு போயிடுச்சு. ஜெயில்ல இருந்துட்டு தான் வந்தேன். வருஷத்துல எல்லா நாளும் வேலை இருக்குன்னு சொல்ல முடியாதுங்க. சில நாள்ல போஸ்டர் கையில் இருக்கும் மழை நிக்காம பொய்யும் அந்த நேரத்துல போஸ்டர் ஒட்டி முடிச்சா தான் கூலி தருவாங்க மழையால போஸ்டர் ஒட்ட முடியாமலே போய்விடும். மறு நாள் விசேஷம் வச்சிருப்பாங்க அந்த நேரத்தில என்ன பண்ணமுடியும் இப்படி தினமும் தினமும் போஸ்டர நம்பியே வாழற வாழ்க்கை தான் எங்களுக்கு வேறு எந்தத் தொழிலும் கத்துக்காம போனதால இதை மட்டுமே நம்பி இருக்க வேண்டியிருக்கு. அதுவும் கூட எவ்வளவு நாளைக்குன்னு தெரியல என்றார்.

image

புரட்சி, போராட்டம், நினைவேந்தல், திருமணநாள், பண்டிகைன்னு சுவரொட்டி நம்முடைய வாழ்க்கையில் இரண்டற கலந்து இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட சுவரொட்டி ஒட்டுற அவர்கள் வாழ்க்கை இருண்டு கிடப்பதைப் நம்மால் காண முடிகிறது.

- ஜோதி நரசிம்மன்


Advertisement

Advertisement
[X] Close