[X] Close

இந்திய பாரம்பரிய இடங்கள் 17: சுந்தரவனக் காடுகள்: அழிந்துவரும் உயிரினங்களின் சொர்க்கம்!

சிறப்புக் களம்

Indian-Heritage-Sites-17--The-Sundarbans---Paradise-for-endangered-species-

இந்தியத் துணைக்கண்டம் என்பது இந்த புவியில் உள்ள புவியியல், வெப்பமண்டலங்களை, நில அமைப்புகளை ஒருங்கே கொண்டது. பனிமலை, பாலைவனம், மழைக்காடுகள், புல்வெளிகள், இலையுதிர் காடுகள், சதுப்புநிலங்கள், கடற்கரைகள், தீவுகள் , தீபகற்பம், பீடபூமி, பள்ளத்தாக்குகள் என்று அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. நன்னீர் கடல்நீர் இரண்டும் கலக்கும் ஒரு தனித்துவ இடையிட்ட மண்டலம் என்றால் அது சதுப்பு நிலக்காடுகள் தான்.

image
பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவிகிதம் சதுப்புநிலங்கள் உள்ளன. அந்த 6 சதவிகிதமும் நீர் வள மேம்பாட்டிலும் உயிர்ச்சூழலைத் தக்கவைப்பதிலும் மற்ற காடுகளுக்கு நிகரான பெரும் பங்கைச் செய்கின்றன. வெள்ளப் பெருக்கு, புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுபவை சதுப்புநிலங்கள். இந்த நிலங்களின் அழிவைத் தடுப்பதற்காகவும் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவும் `ராம்சார் அமைப்பு' என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது.

image


Advertisement

கடற்கரையோரச் சதுப்புநிலங்களில் வாழும் தாவரங்கள், கடலில் ஆக்ரோஷமாகப் பொங்கிவரும் அலைகளை ஆற்றுப்படுத்தி, சீற்றத்தைத் தணிக்கின்றன. அதனால், இத்தாவரங்கள் சூழ்ந்த சதுப்பு நிலக்காடுகளை ‘அலையாத்திக் காடுகள்’ என்று அழைக்கிறார்கள். ஆறும், கடலும் இணையும் கழிமுகப்பகுதிகளில் உருவாகும் காடுகள்தான் சதுப்பு நிலக்காடுகள். மலைப்பகுதிகளில் உள்ள காடுகள், வறட்சியின்போது காய்ந்து போகும். ஆனால், இந்த அலையாத்திக் காடுகள் எப்போதும் தண்ணீரில் அல்லது தண்ணீருக்கு அருகிலேயே இருப்பதால் பசுமையாகவே இருக்கின்றன. எனவே இவை, ‘பசுமை மாறாக் காடுகள்’ எனவும் அழைக்கப்படுகின்றன. சூழலியல் சமன்பாட்டில் இத்தகைய சதுப்பு நிலக்காடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

image

மேலும், இவ்வகை காடுகள் சுரபுன்னைக் காடுகள், கண்டல் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் இக்காடுகளில் சுந்தரி மரங்கள் இருப்பதால், ‘சுந்தரவனக் காடுகள்’ (சுந்தர்பன் காடுகள்) என்றும் அழைக்கப்படுகின்றன. சதுப்புநிலங்களில்தான் 40 சதவிகிதம் அரியவகைப் பறவைகள் உயிர்வாழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. உலகில் உள்ள ஈரநிலங்களிலேயே பெரிய நிலப்பரப்பு கொண்ட சதுப்புநிலம் எது என்றால் அது சுந்தர்பன் காடுகள் தான்.

image

சுந்தரவனக் காடுகள் (சுந்தர்பன் காடுகள்) : உலகிலேயே மிகப்பெரிய சதுப்புநிலக்காடுகளான சுந்தரவனக் காடுகள் இந்தியா, வங்கதேசம் என இரு நாடுகளில் 10,000 சதுர கிலோமீட்டருக்கும் மேல் பரவியுள்ளது. இரண்டு நாடுகளும், உலக அமைப்புகளோடும், இயற்கையைப் பாதுகாக்கும் அமைப்புகளோடும் சேர்ந்து சுந்தர்வனக் காடுகளை பாதுகாத்து வருகின்றன. இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளத்தில் குல்னா, மோங்களா பகுதிகள் தான் இதில் பெரிதும் முக்கியத்துவம் கொண்டது.

image

இமாலயத்தில் இருந்து உதிக்கும் கங்கையின் ஹூக்ளீ, பத்மா நதிகளும் பிரமபுத்திரா நதியும் அதன் கிளை நதியான மேக்னா நதியும் சுந்தரவனத்தின் வழியாகத்தான் கடலைச் சேர்க்கிறது. இந்த நதிகளின் நன்னீரும், கடலின் உவர்ப்பு நீரும் தான் இந்த காட்டின் நீராதாரங்கள். அடைந்த மழைக்கால காடுகள், புல்வெளிகள், பசுமைக்காடுகள், சதுப்புநிலக்காடுகள் என்று பலவகை நில அமைப்புகளை ஒரே இடத்தில் கொண்டுள்ள இந்த இடத்தில் எப்போதுமே நீர்வளம் உள்ளதால் என்றுமே பசுமையாகக் காணப்படும்.

image

சுந்தரவனக் காடுகள் வரலாறு: கி.பி. 200-300 ஆம் ஆண்டிற்கு முன்பே இப்பகுதியின் வரலாறு காணப்படுகிறது. சான்ட் சடாகர் உருவாக்கிய நகரத்தின் சிதைந்த பகுதிகள் பக்மரா காட்டில் காணப்படுகின்றன. அன்றைய அசாம், வங்காளம் பகுதியை காமரூபா என்றழைக்கப்பட்டு வந்தது. அதை ஆட்சி புரிந்து வந்த பனியா இனக்குழுவின் சந்த் சதகர் இக்காட்டுப்பகுதியையும் ஆட்சிபுரிந்து வந்தனர்.

முகலாயர்கள் காலத்தில் காமரூபா பகுதி அவர்கள் ஆட்சியின்கீழ் வந்தது. அப்போது அரசர்கள் வசிக்க சுந்தரவனக்காடுகளை குத்தகைக்கு எடுத்தனர். இந்த கால கட்டத்தில், பேரரசர் அக்பரின் படைகளிடம் இருந்து தப்பிக்க சுந்தரவனக்காடுகளை ராஜா பசண்ட ராய்யும் அவருடைய அண்ணன் மகனும் புகலிடமாக ஏற்றனர். அக்பர் காலத்தில் இக்காடுகள் பற்றிய குறிப்புகளை அவர்களது இலக்கியத்திலும் வரலாற்றுக் குறிப்புகளிலும் எழுதி வைத்துள்ளனர். அதன் பின்னர் ஐரோப்பியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியப் பகுதிகளுக்கு வரத்தொடங்கிய காலத்தில் போர்ச்சுக்கீசியர்கள் சிலர் சுந்தரவனப்பகுதிக்கு வந்தனர். ஆட்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் போர்ச்சுக்கல் நாட்டை சார்ந்த கடற் கொள்ளையர்கள், உப்புக் கடத்தல்காரர்கள், படைக்கலம் ஏந்திய கொள்ளைக்காரர்களால் இந்த பகுதி அபகரிக்கப்பட்டது. சிதைக்கப்பட்ட நேடிதோபனி சுந்தரவனக்காடுகளை சுற்றி உள்ள பிற பகுதிகளின் சிதைந்த நிலையே இதற்கான உண்மையான சான்றாகும்.

image

இந்த காட்டில் சட்டப்பூர்வமான மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்பட்டது. இதுவே அறிவியல் ஆராய்ச்சியின் கீழ் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சதுப்புநிலகாடாகும். 1757 ஆம் ஆண்டில் மொகாலாய பேரரசர் இரண்டாம் அலம்கிர்ரிடம் இருந்து காப்புரிமையைப் பெற்றது. அதைத் தொடர்ந்து கிழக்கு இந்திய கம்பெனி 1764 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே நில அளவையர்களால் அதன் வரைபடம் வரையப்பட்டது. அதன் பின்னர் தான் உலக அரங்கில் இக்காடுகள் கவனத்திற்கு வந்து, பெரிதும் பேசப்பட்டது. அக்காலகட்டத்தில் ஆட்சியில் மேலோங்கிக்கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் இதை பாதுகாக்கத் தொடங்கினர். 1769 இல் இப்பகுதியை பெரிசியா சர்வேயர் ஜெனரல் ஒருவர் வந்து அளவிட்டு அறிக்கை வெளியிட்டார். வங்காள மாநிலத்தின் வனத்துறை இலாக்கா நிறுவிய பின்பு 1860 ஆம் ஆண்டில் இந்த காட்டு நிலப்பகுதியின் முறையான நிர்வாகம் தொடங்கப்பட்டது.

image

1869 இல் இந்திய வனத்துறை உருவாக்கப்பட்டது. சுந்தரவனக்காடு முதன்முதலாக வனத்துறை நிர்வாகத்தின் கீழ் மாற்றுவதற்கான சட்ட பூர்வ அதிகாரத்தைப் பெற்றது. அந்தத் துறையின் கீழ் தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது சுந்தரவனக் காடுகள்.

பல அடுக்கு பாதுகாப்பு கொண்ட சுந்தரவனக் காடுகள்: சுந்தரவனக்காடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் 1875ல் இதை காப்புக்காடாக அன்றைய ஆங்கிலேய அரசு அறிவித்தது.

image
இங்குதான் பூனை குடும்பத்தின் முக்கியமான உலகில் எங்கும் காணப்படாத புலியினங்கள் ( Royal Bengal Tiger) காணப்படுகின்றன. எனவே அவற்றைப் பாதுகாக்கும் எண்ணத்தில் இந்திய அரசு 1973 இல் சுந்தரவனக் காடுகளை புலிகள் காப்பகமாக அறிவித்தது.

image

பின்னர் 1977-ல் இது வனவிலங்கு சரணாலயமாக மாற்றியமைக்கப்பட்டது. 1984 இல் இந்த இடத்தில் உள்ள இயற்கையின் முக்கியத்துவம் அறிந்து இதை தேசிய பூங்காவாக அறிவித்தது. சிறந்த இயற்கை வளமும், தனித்துவமான அமைப்பும், பல்லுயிர் ஓம்புதலுக்குத் துணையாகவும் இருக்கும் சுந்தரவனக் காடுகளை, 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், சுற்றுச்சூழல், இயற்கை வளம், பல்லுயிர் பெருக்கம், சதுப்புநிலம், அழிந்துவரும் விலங்கினங்களின் வாழ்விடம், தனித்துவம் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 9 மற்றும் 10-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் சுந்தரவனக் காடுகள் சேர்க்கப்பட்டன.

image

உயிர்க்கோளக் காப்பகங்களின் உலகக் கூட்டமைப்பு 1989 இல் இருந்து சுந்தரவனத்தை தன் தனி கவனத்துடன் பாதுகாத்து வருகிறது. 2019 இல் ஈரநிலைப்பை பாதுகாக்கும் எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட ராம்சார் மன்றத்தின் பட்டியலில் சுந்தரவனத்தையும் இணைத்து சுந்தரவனக் காடுகளின் சதுப்புநிலங்களைப் பாதுகாத்து வருகின்றது.

புயலில் உழன்ற சுந்தரவனம்: 2007 இல் வங்கக்கடலில் உருவான புயலால் கிட்டத்தட்ட 40 % சுந்தரவனம் பாதிப்புக்கு உள்ளானது. மேலும் 2009 இல் வங்கக்கடலில் உருவான அய்லா புயல் மீண்டும் சுந்தரவனத்தை அதிகளவில் சேதமடைய வைத்தது. அதில் எல்லாம் இருந்து மீண்டு, மீண்டும் உருவாகியுள்ளது தான் இன்று நாம் பார்க்கும் சுந்தரவனக் காடுகள்.

image

அழிந்துவரும் உயிரினங்களின் சொர்க்கம்:

உலகில் அழிந்து வரும் பல இனங்களின் சொர்க்க பூமியாக சுந்தரவனக் காடுகள் விளங்குகிறது. இந்தியாவின் சிறப்பு அடையாளங்களுள் ஒன்று வங்காளப்புலிகள். அதன் எண்ணிக்கை அதிகம் காணப்படும் ஒரே இடம் இந்த சுந்தரவனம் தான். நீரிலும் நீந்தி உயிர்வாழும் தன்மை இங்குள்ள புலிகளுக்கு உண்டு. சுமார் 693 வகையான வனவிலங்குகள், 290 பறவை இனங்கள், 315 வகையான நீர்ப்பறவைகள், 210 வெள்ளை மீன் இனங்கள், 120 வகை மீன்கள், 24 இறால் இனங்கள், 14 வகை நண்டுகள், 49 பாலூட்டி இனங்கள். 59 ஊர்வன, 8 நிலம் மற்றும் நீரில் வாழும் உயிரினங்கள், கழுகு இனங்கள் என சுந்தரவனத்தைத் தன் அடைக்கல பூமியாகக் கொண்டுள்ளது ஏராளமான உயிர்கள்.

image

வங்காள புலியைத் தவிர்த்து, காட்டுப்பூனை, மீன்பிடி பூனை, சிறுத்தை, சித்தல் மான், முதலை, உப்புநீர் முதலை, மக்கர் முதலைகள், காண்டாமிருகங்கள், சாதுப்புநில மான்கள், அழியும் நிலையில் உள்ள ஜாவன் காண்டாமிருகங்கள் இங்கு அதிகம் காணப்படுகின்றது. இந்த கடற்கரையில் இரவின் நிலவின் ஒளியில் ஒளிரும் பிளாங்டன் வகை தாவரங்கள் அதிகம் காணப்படும். இரவு நேரங்களில் சுந்தரவனத்தின் கடற்கரைகளில் உலாவர வாய்ப்பிருந்தால், இந்த பிளாங்டன் ஒளிகளை இரவின் இருளில் ரசிக்கலாம். சுற்றுலாப் பயணிகள் காவற்கோபுரங்களில் இருந்து வனத்தின் அழகை பார்வையிடலாம்.

image

எழுத்துக்களில் சுந்தரவனம்...
எமிலியோ சல்காரியின் "தி மிஸ்டரி ஆஃப் தி பிளாக் ஜங்கிள்", ஷிப் சங்கர் மித்ராவின் "சுந்தர்பேன் அர்ஜூன் சர்தார் மற்றும் பத்மா நதிர் மாஜி" உள்ளிட்டவை, இங்குள்ள கிராமங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, சுந்தரவனக் காடுகளின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல்கள். மேலும், புக்கர் பரிசு பெற்ற நாவல், சல்மான் ருஷ்டியின் "மிட்நைட்ஸ் சில்ட்ரன் (நள்ளிரவின் குழந்தைகள்)" மற்றும் அமிதவ் கோஷின் "தி ஹங்கிரி டைட் (The Hungry Tide)" ஆகியவை சுந்தரவனக் காடுகளின் சிறந்த நாவல்கள்.

image

சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு…

சுந்தரவனம் எண்ணற்ற வங்காளி நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனங்களின் மூலம் புகழ்பெற்றது. சென்னையிலிருந்து சுமார் 2,084 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுந்தரவன தேசிய பூங்காவிற்கு விமானம், இரயில் மற்றும் சாலை போக்குவரத்து போன்ற வசதிகளைப் பயன்படுத்தி எளிதில் அடையலாம். சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு விமானம் மூலம் பயணம் செய்து, கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள சுந்தவனக் காடுகளை அடையலாம். அருகிலிருக்கும் ரயில் நிலையம் கேனிங். 30 கி.மீ. தொலைவில் உள்ளது. கொல்கத்தாவிலிருந்து சாலை வழியாக வருவதென்றால் பேருந்து வசதியும், வாடகைக்கு டாக்சியும் கிடைக்கிறது.

image

ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையும், செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையும் சுற்றுலா சென்றால் அங்குள்ள இயற்கை அழகை கொஞ்சம் கூடுதலாகவே ரசிக்கலாம். தேசிய பூங்காவிற்குச் செல்ல காலை 8.30 மணியிலிருந்து மாலை 4 மணி வரை படகு சஃபாரி வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு ஜீப் சஃபாரி வசதி இல்லை.

image
அடர்ந்த காடுகள் சூழ்ந்த பகுதி என்பதால் சுற்றுலா செல்பவர்கள் கூடவே ஒரு டார்ச் லைட் எடுத்துச் செல்வது பயணத்துக்கு உதவியாக அமையும்.

காலநிலை மாற்றம் மட்டுமல்ல தொழில்துறை வளர்ச்சிகள், நகரமயமாதல், மனிதர்களின் ஆக்கிரமிப்புகள் என சுந்தரவனக் காடுகளுக்கும் வங்காளப் புலிகளுக்கும் இன்னும் அதிகமான அபாயங்கள் இருக்கின்றன.

(உலா வருவோம்...)

முந்தைய அத்தியாயம்: இந்திய பாரம்பரிய இடங்கள் 16: எலிஃபெண்டா குகைகள் - ஒற்றைக்கல்லில் பிரம்மாண்ட யானை சிலை!

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close