Published : 12,Jan 2022 12:43 PM
பாலினத்தை நிரூபிக்க திருநங்கைகளின் ஆடைகளை களைந்து சோதனை - சர்ச்சையில் திரிபுரா போலீசார்

காவல் நிலையத்தில் திருநங்கைகள் அவமானப்படுத்தப்பட்டிருப்பதாக பல்வேறு தரப்பினரும் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திரிபுராவில் கடந்த சனிக்கிழமை இரவு அன்று நான்கு திருநங்கைகள் ஹோட்டல் ஒன்றில் விருந்து நிகழ்ச்சி முடித்துவிட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக சென்றவர்களிடம் மிரட்டி பணம் பறித்ததாக வந்த புகாரின் பேரில் திருநங்கைகள் நால்வரையும் மேற்கு அகர்தலா மகளிர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு ஆண் மற்றும் பெண் போலீஸார் சேர்ந்து திருநங்கைகளின் பாலினத்தை அறிவதற்காக அவர்களின் ஆடைகளை வலுக்கட்டாயமாக களைந்து சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கிராஸ் டிரஸ் அணிந்துகொண்டு நகரில் சுற்ற மாட்டோம் என்றும் அவ்வாறு அணிந்து சுற்றினால் கைது செய்யப்படுவோம் என்றும் அவர்களிடம் போலீசார் எழுதி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருநங்கைகள் காவல் நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். எந்த ஆதாரமும் இல்லாமல் மிரட்டி பணம் பறித்ததாக தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட திருநங்கைகள் தெரிவித்துள்ளனர். இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் திரிபுரா காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஒரு பெண்ணை மற்றொரு பெண்ணே பாதுகாக்காதபோது’ : வரதட்சணை வழக்கில் உச்சநீதிமன்றம் வேதனை