Published : 05,Jan 2022 06:29 PM
“புல்லி பாய் விவகாரத்தில் கைதாகியுள்ள 18 வயது பெண்ணை மன்னியுங்கள்” - கவிஞர் ஜாவேத் அக்தர்

இஸ்லாமிய பெண்களின் புகைப்படத்தை மிகவும் மோசமான வகையில் சித்தரித்திருந்த புல்லி பாய் செயலி விவாகரத்தில் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஸ்வேதா சிங் என்ற 18 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த வழக்கில் முதன்மை குற்றவாளி என சொல்லப்படுகிறது. அவரை மும்பை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கவிஞர் ஜாவேத் அக்தர் அந்த பெண்ணுக்கு கருணை காட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
“புல்லி பாய் விவகாரத்தின் பின்னணியில் உண்மையில் அந்த 18 வயது பெண் மூளையாக இருந்து செயல்பட்டிருந்தால் அவளை பெண்களோ அல்லது பெரியவர்களோ சந்தித்து, ‘அவள் செய்த தவறு என்ன?’ என்பதை அவளுக்கு புரிய வைக்க வேண்டும். புற்று நோயால் தாயையும், கொரோனா தொற்றால் தந்தையையும் இழந்தவள் அவள். அவளை மன்னியுங்கள். அவளுக்கு கருணை காட்டுங்கள்” என தெரிவித்துள்ளார் கவிஞர் ஜாவேத்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக சொல்லி இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கவிஞர் ஜாவேத் அக்தர், புல்லி பாய் விவகாரம் தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதில் பிரதமர் உட்பட அனைவரது மவுனத்தை பார்த்து தான் திகைப்பதாக சொல்லி இருந்தார்.