Published : 04,Jan 2022 10:11 PM

”மோடிஜியை திமுக வரவேற்பது சந்தோஷமாக உள்ளது: இந்த நிலைப்பாடு மாறக்கூடாது”: அண்ணாமலை பேட்டி

TN-bjp-leader-annamalai-special-interview

”மழை பெய்தாலே சென்னை வெள்ளக்காடாகி விடுகிறது. மக்களுக்கு மழை வெள்ளம் எப்படி உள்ளது என்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுவது எனது கடமை. ஒரு எதிர்கட்சித் தலைவரின் வேலை என்ன? போட்டோ எடுத்து மக்களிடம் கொண்டு சென்று காட்டுவதுதான். மீண்டும் மழை வெள்ளம் வந்தால் மறுபடியும் எனது படகு கோபாலபுரத்திற்குப் போகும். அதில், எந்த மாற்றமுமில்லை” என்று அதிரடியாக பேசுகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் எதிர்கட்சியாக இருக்கும்போது ‘கோ பேக் மோடி’ என்று எதிர்ப்பு காட்டிய திமுக,  தற்போது 12 ஆம் தேதி மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க தமிழகம் வருவதை ஆதரித்து  வரவேற்கிறது.  திமுகவின் இந்த மாற்றம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பேசினோம், 

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திமுக வரவேற்றுள்ளதே?

”பிரதமர் மோடி ஒருநாளும் பிக்னிக் செல்வதாக நினைத்து தமிழகம் வரவில்லை. நம் பெருமையான மகாபலிபுரத்தை உலகத்திற்கே காட்டினார். ஆவடி வந்து பீரங்கி டாங்கியை அர்பணித்தார். கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரியை திறந்துவைத்தார். இப்படி தமிழக நலன்களுக்காக ஒவ்வொருமுறையும் வரும் பிரதமரை சம்பந்தமே இல்லாமல் எதிர்கட்சியாக இருக்கும்போது கறுப்பு பலூன் விட்டு திமுக எதிர்த்தது. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் வரவேற்பதை தமிழக நலன்மீது அக்கறை வந்திருப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவது தமிழக மக்களின் நலனுக்காக என்பதை திமுகவினர் புரிந்துகொண்டுவிட்டார்கள். பிரதமர் மோடி, திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, எப்படி தமிழகம் மீது அக்கறையுடன் இருந்தாரோ இப்போதும் அக்கறையுடனேயே இருக்கிறார். அவர் மாறவில்லை. திமுகதான் மாறியுள்ளது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மருத்துவக் கல்லூரிகளில் சீட்டுகளை அதிகமாகவில்லை. தமிழகத்தில் மட்டும் இரட்டிப்பாக்கியுள்ளது. இதற்கெல்லாம் பிரதமர் தமிழகத்தின் மீது வைத்திருக்கும் ஸ்பெஷல் பிரியம்தான் காரணம். அதுவும், 1650 சீட்டுகள் கொடுப்பது என்பதெல்லாம் வேற லெவல். நான் படிக்கும்போது மருத்துவப் படிப்பில் சேர்வது கடினமாக இருந்தது. இப்போது, நடுத்தர வர்க்கத்தினருக்கும் மருத்துவ கனவைக் கொடுத்துள்ளார். அதனால், பாஜக பிரதமரைக் கொண்டாடுகிறது. தற்போது, திமுகவும் புரிந்துகொண்டுவிட்டது என்பது சந்தோஷமாக இருந்தாலும், இந்த நிலைப்பாட்டை திமுக தமிழக நலனுக்காக மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன். பிரதமர் தமிழகம் வரும்போதெல்லாம் கொடுத்துவிட்டுத்தான் போனார். எடுத்துக்கொண்டா போனார்? இங்கிருந்து ஒரு செங்கல்லையாவது விமானத்தில் எடுத்துப்போனாரா?

முதல்வர் மு.க ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் ’கோ பேக் மோடி’ என்று ட்விட்டரில் பதிவிட்டார்கள். ஆனால், அவர் முதல்வர் ஆனவுடன் பிரதமர் வாழ்த்து சொன்னார். பார்க்கவேண்டும் என்றவுடன் அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்தார். தமிழகத்தில் மழை வந்தவுடன் ’என்னப் பண்ணவேண்டும்’ என்று தொடர்புகொள்கிறார். மாற்றாந்தாய் மனப்பான்மை எப்போதும் பிரதமருக்கு கிடையாது. அவர், தமிழக மக்களைத்தான் நேசிக்கிறார். அரசியல்வாதிகளை அல்ல. தமிழகத்திற்கு கொடுக்கத்தான் வருகிறார் எடுக்க வரவில்லை என்பதை திமுக நண்பர்கள் தாமதமாகப் புரிந்திருக்கிறார்கள்”

image

பிரதமர் மோடியை வரவேற்கிறோம்: ஆனால், இந்துத்துவாவைத்தான் எதிர்க்கிறோம்... கருத்தியல் ரீதியாகத்தான் எதிர்க்கிறோம் என்பதையெல்லாம் எப்படி பார்க்கிறீர்கள்?

”இந்துத்துவா என்பது அனைத்து மக்களையும் ஒன்றாக இணைக்கும் கருவி. இதில், இஸ்லாமிய, கிறிஸ்துவ சகோதரர்களும் ஒன்றிணைய வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். புரிதல் இல்லாமல் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். எதிர்கட்சியாக இருக்கும்போது மட்டும் ஏன் எதிர்த்தார்கள்?அண்ணாமலையை எதிர்த்துவிட்டுப் போகட்டும். பிரதமரை ஏன் எதிர்க்கவேண்டும்? இவர்கள் அரசியலுக்காக எப்படி வேண்டுமென்றாலும் பேசட்டும். ஆனால், நாங்கள் எங்கள் இலக்கில் தெளிவாக இருக்கிறோம். பிரதமர் மோடியை தமிழ்நாடு கொண்டாட ஆரம்பித்துவிட்டது. இனிவரும் காலத்தில் இவர்கள் பொய் பிரச்சாரம் செய்யமுடியாது. ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பிரதமரின் திட்டங்களை விளக்கி வருகிறோம்”.

பெண்களின் திருமண வயது உயர்த்தப்படுவதை ஆய்வு செய்யும் 31 எம்.பிக்கள் குழுவில் ஒரேயொரு பெண் எம்.பியை மட்டும் நியமித்தது குறித்து கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளாரே?

“பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த அறிவியல்பூர்வமான காரணங்கள் உள்ளன. அறிவியல்பூர்வமாக இல்லாமல் மத்திய அரசு எதையும் கொண்டுவரவில்லை. குழந்தைப் பிறக்கும்போது உலகத்திலேயே அதிகம் பெண்கள் இறக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. பெண்களுக்காக, பெண் குழந்தைகளுக்காக நம் பிரதமர் அக்கறையுடன் கடந்த 7 வருடமாக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். அதன், தொடர்ச்சிதான் 21 வயதாக உயர்த்தியது. இதன்மூலம், பெண்கள் மன வலிமையுடன் உடல் வலிமையுடனும் இருப்பார்கள். ஆனால், இதனை புரிந்துகொள்ளாமல் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆய்வும் செய்யும் குழுவில் பெண் எம்.பி ஆண் எம்.பி என்று பிரித்துப்பார்க்க வேண்டியதில்லை. பாராளுமன்றத்தில் யார் வேண்டுமென்றாலும் நோட்டிஸ் கொடுத்து கேள்விக் கேட்க அனுமதி உள்ளது. அப்படி விவாதிக்க அனுமதி கொடுத்திருக்கும்போது, இதனை மட்டும் ஒரு பாயிண்டாக எடுத்துப் பேசுவது நியாயமற்றது.

மேலும், பெண்களின் திருமண வயதை உயர்த்தியதை கனிமொழி எம்.பிதான் முதலில் பாராட்டி இருக்கவேண்டும். சகோதரி கனிமொழி ஒரு நல்ல அரசியல்வாதி. ஏனென்றால், முற்போக்கான கருத்துக்களை எப்போதும் தெரிவிப்பார். அவரின், அரசியலை நிறைய இடத்தில் நான் ஆதரிக்கிறேன். பிற்போக்காக எல்லாம் பேசமாட்டார். முற்போக்கான சிந்தனை கொண்டவர் என்பதால் சகோதரி கனிமொழி இதனை நிச்சயமாக முதல் எம்.பியாக ஆதரிக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள். மற்றபடி ஆண் எம்.பிக்களை அதிகம் நியமித்ததில் எந்த ஆணாதிக்கமும் இல்லை. அப்படி ஆணாதிக்கமாக இருந்தால், அவர்கள் விருப்பப்படி பெண்ணின் திருமண வயதை 16 என்றுதான் நிர்ணயித்திருப்பார்கள். ஆணாதிக்கத்தை உடைப்பதற்காகத்தான் 21 வயது என்று கொண்டு வந்துள்ளார்கள்”.

image

இன்னும் ஏன் மதுரை எய்ம்ஸை துவக்கவில்லை?

“மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் குறித்து எங்கள் அமைச்சர் விரிவாக சொல்லிவிட்டார். இந்த ஆண்டே 150 மாணவர்களை அட்மிட் செய்ய தயாராக இருக்கிறோம். மாநில அரசுதான் வேண்டாம் என்று சொல்லிவிட்டது. ஜப்பானில் இருந்து வரும் நிதிக்காக காத்திருக்கிறோம். கொரோனா சூழல் என்பதால் வரவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து ஏழு மாதம் ஆகிறது. என்ன முன்னெடுப்பு செய்தார்கள் என்று இவர்களே சொல்லட்டுமே?”.

- வினி சர்பனா

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்