
தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருவதால் கடந்த 2011-ம் ஆண்டு முதல் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழக அணி தேசிய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
9-வது தெற்கு மண்டல துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆவடியை அடுத்த வீராப்புரம் காவல்துறை பயிற்சி மையத்தில் நடைபெற்றது, இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துப்பாக்கிச் சுடுவதில் தமிழகம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்றும் அதனால்தான் தமிழக காவல்துறையை ஸ்காட்லாந்துயார்டுடன் ஒப்பிடுவதாகவும் தெரிவித்தார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு விளையாட்டு வீரர்களை ஊக்குவித்ததாகவும், அது தற்போதும் தொடர்கிறது என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படுவதால் துப்பாக்கிச்சுடுதலில் தமிழகம் தொடர்ந்து தேசிய அளவில் முதலிடம் வகிப்பதாகவும் அவர் கூறினார்.