Published : 27,Dec 2021 06:33 PM
’சல்மான் கான் எனக்கு மகன் போன்றவர்’-பாம்புக்கடி குறித்து நலம் விசாரித்த தர்மேந்திரா ட்வீட்

சல்மான் கானுக்கு பாம்பு கடித்த செய்தி குறித்து கேள்விப்பட்டு கவலையுடன் தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக கூறியுள்ளார் பாலிவுட் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா.
பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பண்ணை வீட்டில் இருந்தபோது திடீரென அறைக்குள் புகுந்த பாம்பு தனது கைகளில் 3 முறை கடித்ததாகவும், பின் உடனடியாக மருத்துவனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு நலமுடன் வீடு திரும்பியதாகவும் தெரிவித்திருந்தார். சல்மான் கானுக்கு பாம்பு கடித்த செய்தியை கேள்விப்பட்ட சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சல்மான் கானை பாம்பு கடித்தது குறித்து அறிந்ததும் கவலையுடன் தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தர்மேந்திரா, ''சல்மான் கான் எனக்கு மகன் போன்றவர். அவரும் என்மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். நான் எப்போதும் அவரது பிறந்தநாளில் பிரார்த்தனை செய்கிறேன், அவருக்கு சிறந்ததை விரும்புகிறேன். பாம்பு கடித்த செய்தியை அறிந்ததும் கவலைப்பட்டு அவரை அழைத்துப் பேசினேன். அவர் நலமுடன் இருக்கிறார்'' என்று கூறியுள்ளார்.