Published : 27,Dec 2021 03:08 PM
ராஜேந்திர பாலாஜியை நெருங்கிவிட்டதாக காவல்துறை தகவல்

பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் நெருங்கிவிட்டதாகவும், ஓரிரு நாட்களில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த 17-ஆம் தேதி முதல் ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் தேடிவருகின்றனர். வெவ்வேறு கார்களில் மாறி மாறிச் சென்று அவர் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்ட்ராய்ட் செல்போனை பயன்படுத்தாமல், சாதாரண பட்டன் கைப்பேசியை ராஜேந்திர பாலாஜி பயன்படுத்தி வருவதாகவும், எனவே அவர் இருக்கும் இடத்தை கண்டறிவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் பதுங்கியுள்ள இடத்தை நெருங்கிவிட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், இன்றோ அல்லது நாளையோ அவர் கைது செய்யப்படுவார் எனத் தகவல் அளித்துள்ளனர்.
11 நாட்களாக தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது 6 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள், நண்பர்கள் உட்பட 600 பேரின் செல்போன் எண்களை சைபர் கிரைம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்கும் உத்தரவு ரத்து