
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் விராட் கோலி. இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியையும் வழிநடத்தி வந்த அவரது கேப்டன் பொறுப்பை தேர்வுக்குழுவினர் அண்மையில் பறித்திருந்தனர், அது தொடர்பாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார் கோலி.
இந்த சூழலில் கோலியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன்சி விவகாரம் குறித்து மனம் திறந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
“இதனை ரோகித் மற்றும் கோலிக்கு கிடைத்துள்ள ஆசீர்வாதமாக நான் பார்க்கிறேன். இன்றைய கொரோனா சூழலில் பயோ பபுளுக்கு உள்ளே, வெளியே என ஒரே வீரர் மூன்று விதமான (பார்மெட்) அணிகளையும் கையாள்வது கடினம். விராட் கோலி தனது முழு கவனத்தையும் ‘ரெட் பால்’ கிரிக்கெட் மீது செலுத்த உதவலாம். அதோடு அவர் விரும்புகிற வரை டெஸ்ட் அணியை வழிநடத்தலாம். இது அவரது ஆட்டம் குறித்து ‘ஆற அமர’ சிந்திக்க உதவும். எப்படியும் அவர் அடுத்த 5 - 6 ஆண்டுகள் வரை நிச்சயம் கிரிக்கெட் விளையாடுவார்” என ரவி சாஸ்திரி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.