Published : 25,Aug 2017 10:44 AM
பரபரப்பான அரசியல் சூழலில் நாளை தமிழகம் வருகிறார் ஆளுநர்

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை தமிழகம் வருகிறார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், முதலமைச்சரை மாற்ற தமிழக ஆளுநரிடம் தனித்தனியே கோரிக்கை மனுக்களை கொடுத்திருந்தனர். இந்நிலையில் நாளை சென்னை வரும் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை வரவேற்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் வருவதாக தகவல்கள் கூறுகின்றன. டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களின் கோரிக்கை மீது மீது என்ன நடவடிக்கை எடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரையும் கட்சித் தாவல் தடை சட்டம் மூலம் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரைப்பதாக, அதிமுக சட்டமன்ற கொறடா ராஜேந்திரன் கூறியிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின், கட்சித் தாவல் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த முயற்சி நடப்பதாக ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, பெரும்பான்மையை நிருபிக்க முதல்வருக்கு உத்தரவிட ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல, பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் அமைச்சர்கள் தனித்தனியே, கட்சியில் அதிருப்திக்குரல் அதிகரித்திருப்பது குறித்து விவாதித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.