Published : 19,Dec 2021 07:19 PM

எண்ணூரில் அனல்மின் நிலையம் அமைக்க முற்பட்டால் தீவிரமான போராட்டம் – சீமான் எச்சரிக்கை

Intense-struggle-over-attempt-to-set-up-a-thermal-power-plant-in-Ennore--Seeman-warns

காலநிலை மாற்றம் உலகெங்கும் பெருஞ்சிக்கலாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மாற்று மின்சார உற்பத்தி முறைகளைக் கையாளாது எண்ணூரில் அனல்மின் நிலையம் அமைக்க முற்படுவதா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடசென்னை, எண்ணூரில் 660 மெகாவாட் திறன்கொண்ட புதிய அனல்மின் நிலையம் அமைக்கும் தமிழக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. சூழலியல் சீர்கேட்டை விளைவித்து, காலநிலை மாற்றத்திற்குக் காரணமாக அமையும் வகையிலான இத்திட்டத்தைச் செயல்படுத்த முனைவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. மக்களின் விருப்பத்திற்கும், மண்ணின் நலனுக்குமெதிரான அனல் மின்நிலையத் திட்டத்தை வலுக்கட்டாயமாகத் திணிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

வடசென்னை பகுதியானது ஏற்கனவே பல தொழில்நிலையங்களும், அனல்மின் நிலையங்களும் அமையப்பெற்றப் பகுதியாகும். இந்த அனல்மின் நிலையங்கள் இருக்கக்கூடிய வடசென்னைப் பகுதியானது கழிமுகங்களைக் கொண்ட இயற்கை முக்கியத்துவம் வாய்ந்தப்பகுதியாகும். இவை வெள்ளக்காலங்களில் வடிகாலாக செயல்படுகின்றன. மேலும், இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த அலையாத்திக் காடுகளும், சிறு வனப்பகுதிகளும், சூழலியல் சமன்பாட்டை உறுதிப்படுத்தும் காயல்பகுதிகளும், உப்பங்கழிகளும் அமைந்தப் பகுதியாகும்.

தற்போது இருக்கக்கூடிய அனல்மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் உலர் சாம்பல் கழிவுகளை, அனல் மின் நிலையத்திலிருந்து சாம்பல் குளம் அமைந்துள்ளப் பகுதிக்கு எடுத்துச் செல்லும் இராட்சதக்குழாய்களானது 1995 – 1996 ஆகிய ஆண்டுகளில் பொருத்தப்பட்டவையாகும். இந்தக் குழாய்கள் சரிவரப் பராமரிக்கப்படாததால் நீர்நிலைகளில் அவைப் படிந்து நீர் மாசினை ஏற்படுத்துகின்றன. இவற்றிற்கு மத்தியில் வாழும் மக்களுக்கு சிறுநீரகம், மூளை , நுரையீரல், கண்கள், தோல் மற்றும் இதயம் போன்ற அனைத்து உடல் உறுப்புகளுக்கும் கடுமையானப் பாதிப்பை ஏற்படுத்தும். சாம்பல் தூசி காற்றில் நுண் துகள்களாக (PM 2.5) மாறி இரைப்பு போன்ற மேல் சுவாசப்பாதை பிரச்சினைகளை உண்டாக்கும். இந்த PM 2.5 கர்ப்பிணிப் பெண்களின் நஞ்சுக்கொடி தடையை தாண்டி மகவின் மூளை வளர்ச்சியை பாதிக்கக்கூடியது. தூத்துக்குடி மக்களுக்கு கருச்சிதைவை உண்டாக்கிய ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கசிந்த கந்தக டை ஆக்ஸைடு வாயு நிலக்கரி எரிக்கும்போதும் வெளியாகும். ஏற்கனவே, இருக்கும் இரண்டு அனல்மின் நிலையத்தின் நிலக்கரிச்சாம்பல் கசிவால் கொற்றலை ஆறு சாம்பலாக மாறிவிட்டது. மீன், நண்டு, இறால் போன்ற வளங்கள் கடுமையாகக் குறைந்துள்ளது.

image

திட்டமிடப்பட்டதுபோல, புதிதாக அனல்மின் நிலையம் அமைக்கப்படுமாயின் இந்த ETPS ல் இருந்து மட்டும் CO2 வெளியேற்றம் ஆண்டுக்கு 4,435 மெட்ரிக் டன்களாக இருக்கும். ETPSற்கு நிலக்கரி கொண்டு செல்லப் புதிதாக 5 கி.மீ நிலக்கரி கன்வேயர் பெல்ட் கொற்றலை ஆற்றின் குறுக்கே அமைக்கப்படவுள்ளது. வடசென்னை மக்கள் முப்பதிற்கும் மேற்பட்ட அபாயகரப்பட்டியலிலுள்ள தொழிற்சாலைகள் (3 துறைமுகம்,2 அனல்மின்நிலையம், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலைகள், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் உட்பட),1 பெரிய குப்பைக்கிடங்கு என இவற்றுக்கு மத்தியில் மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு புதிய அனல்நிலையம் அமையவிருப்பது ஒட்டமொத்த வடசென்னை மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் செயலாகும். மேற்சொன்ன சிக்கல்களே பல ஆண்டுகளாக மக்கள் தரப்பிலிருந்து கோரிக்கையாக வைக்கப்பட்டும் தீர்க்கப்படாத நிலையில் புதிதாக ஒரு அனல்மின் நிலையம் வெளியிடக்கூடியக் கழிவுகள் மேலும் பாதிப்பை அதிகரிக்கவே செய்யும். பலமுறை உயர் நீதிமன்றமும், தேசிய பசுமைத்தீர்ப்பாயமும் சாம்பல் கழிவுகள் பொதுவில் கலக்கப்படுவதையும், பக்கிங்காம் – கொற்றலை ஆறுகள் மாசடைவதையும் கண்டித்தும், கழிவுகளை அகற்ற உத்தரவிட்டப்பின்னரும் எந்தவித சொல்லத்தக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேலும், தொழிற்சாலை மாசுக்கு ஆளாகாத தலைநகரின் பல இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட 34,000 அடித்தட்டு மக்களை இப்படிப்பட்ட அபாயகரமான தொழிற்சாலை வளாகத்திலிருந்து வெறும் 20 அடி தொலைவில் புதிதாக கட்டப்பட்ட 6,800 குடிசைமாற்று வாரிய கட்டடத்தில் குடியமர்த்த இருக்கிறார்கள். சமூகநீதி என்கிற சொல்லாடலை அரசியல் இலாபத்திற்காக நாளும் பயன்படுத்தும் ஆளும் திமுக அரசு, அதற்கு முற்றிலும் நேர்மாறான வகையில் மீண்டும் மண்ணின் மக்களுக்கெதிரான ஒரு கொடுஞ்செயலை விளைவிக்கத் துடிப்பது வெட்கக்கேடானது.

முன்னதாக, இத்திட்டத்திற்கான மக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் வரும் சனவரி 6 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு அரசு தரப்பு இத்திட்டத்தில் இருக்கக்கூடியச் சிக்கல்களை முன்வந்து ஆராய வேண்டும். சூழலியல் அபாயகரமானப் பெரும் திட்டங்களுக்காக நடத்தப்படும் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் வெறும் கண்துடைப்பென மாறி நிற்கும் வேளையில், மண்ணுக்கோ, மக்களுக்கோ பெரும் கேடாக அமையப்போகிற இத்திட்டம் கருத்துக்கேட்புக்கூட்டம்வரை கொண்டு செல்லப்படக்கூடாது என்றும், அனல் மின்நிலையத் திட்டத்தினை உடனடியாகவும், முழுவதுமாகவும் கைவிட தமிழக அரசு முன்னேற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். அதற்கு நேர்மாறாக, இத்திட்டம் முன்நகர்ந்தால் இதன் தீயவிளைவுகளை எடுத்துரைத்து, மக்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சி மிகத்தீவிரமாகப் போராடுமெனப் பேரறிவிப்பு செய்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்