Published : 17,Dec 2021 07:37 AM
சென்னை: சிறுவர்களிடம் ஆசைக்காட்டி ரூ.8 லட்சம் மோசடி - தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு

சென்னை தேனாம்பேட்டையில் சகோதரர்களான சிறுவர்களிடம் ஆசைக்காட்டி 8 லட்சம் ரூபாயை மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மளிகைக் கடை நடத்திவரும் நடராஜன் என்பவர் நிலம் வாங்குவதற்காக வீட்டில் 8 லட்சம் ரூபாயை சேமித்து வைத்துள்ளார். இவரது மகன்கள், அண்டை வீட்டில் வசித்து வரும் ராஜசேகர் - மெரிட்டா புஷ்பராணியின் வீட்டிற்கு சென்று அவர்களது பிள்ளைகளுடன் ஆன்லைன் கேம் விளையாடியுள்ளனர். அப்போது சிறுவர்கள் அதிகளவில் பணம் கொண்டு வருவதை அறிந்த மெரிட்டா, மேலும் பணம் கொண்டு வந்தால் சாப்பாடு, ஐஸ் க்ரீம், சாக்லேட் போன்றவற்றை தருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுவர்கள், தங்களது தந்தை வைத்திருந்த 8 லட்சம் ரூபாயையும் மெரிட்டாவிடம் கொடுத்ததாக தெரிகிறது. பணம் காணாமல் போனதை அறிந்த நடராஜன், மகன்களிடம் விசாரித்தபோது ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், மெரிட்டா அவரது கணவர் உள்பட 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.