Published : 15,Dec 2021 09:45 PM
"மிகவும் மகிழ்ச்சி"- சொந்த கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் நடராஜன்

கடந்த 2020 டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுமானவர் தமிழ்நாட்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இந்திய அணிக்காக 4 டி20 , 2 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் நடராஜன் விளையாடி உள்ளார்.
இந்த நிலையில் தனது சொந்த கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் அமைத்து வருவதாக தெரிவித்துள்ளார் அவர். “இதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். நான் எனது சொந்த கிராமத்தில் சகல வசதிகளும் உள்ளடங்கிய கிரிக்கெட் மைதானத்தை அமைத்து வருகிறேன். இந்த மைதானத்திற்கு நடராஜன் கிரிக்கெட் மைதானம் என பெயரிட உள்ளேன். கனவு நனவானது. கடந்த டிசம்பரில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானேன். இந்த டிசம்பரில் மைதானம் அமைத்து வருகிறேன். கடவுளுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார் அவர்.
காயம் காரணமாக நடராஜன் சரிவர கிரிக்கெட் விளையாட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். அதனால் சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளை அவர் மிஸ் செய்துள்ளார்.