
இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மகத்தான டாப் 5 தருணங்களில் ஒன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 2001-இல் பலப்பரீட்சை செய்து விளையாடிய டெஸ்ட் போட்டி. காலச்சக்கரத்தை இருபது வருடங்களுக்கு பின்னோக்கி சுழற்றி அந்த போட்டியில் ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் இணையர் கூட்டு சேர்ந்து ஆஸ்திரேலியா அணியை துவம்சம் செய்தது குறித்து பார்க்கலாம்.
ஃபாலோ ஆன் செய்த இந்தியா!
சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி அணிகளில் ஒன்று ஆஸ்திரேலியா. அதுவும் கடந்த 2000-மாவது ஆண்டு வாக்கில் அந்த அணியின் கள அணுகுமுறை வேற லெவலாக இருக்கும். அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 16 போட்டிகளில் வெற்றி பெற்று வீறுநடை போட்டுக் கொண்டிருந்தது அந்த அணி. கொல்கத்தா போட்டிக்கு முன்னதாக கூட மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது ஆஸி.
இந்த நிலையில்தான் கொல்கத்தா போட்டி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 445 ரன்களை குவித்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 171 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதோடு ஃபாலோ ஆன் விளையாடவும் இந்தியாவை பணித்தது ஆஸ்திரேலியா.
இரண்டாவது இன்னிங்ஸை 274 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா தொடங்கியது. 232 ரன்களுக்கு இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. லக்ஷ்மன் மற்றும் கங்குலி என இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது மட்டுமே அதில் கிடைத்த ஒரே ஆறுதல். இந்த நிலையில்தான் டிராவிட் களத்திற்கு வந்தார்.
சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த டிராவிட் - லக்ஷ்மன்!
இரண்டாவது இன்னிங்ஸில் டிராவிட் மற்றும் லக்ஷ்மன் என இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 376 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். லக்ஷ்மன் 452 பந்துகளை எதிர்கொண்டு 281 ரன்களை எடுத்திருந்தார். அதில் 44 பவுண்டரிகள் அடங்கும். இந்தியாவுக்காக 632 நிமிடங்கள் களத்தில் அந்த இன்னிங்ஸில் மட்டும் பேட் செய்திருந்தார் அவர்.
டிராவிட், தன் பங்கிற்கு 353 பந்துகளை எதிர்கொண்டு 180 ரன்களை பதிவு செய்திருந்தார்.
இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பலமான பந்து வீச்சை பந்தாடினர். மெக்ராத், கிலஸ்பி, மைக்கேல் காஸ்ப்ரோவிச், ஷேன் வார்ன் என ஆஸ்திரேலிய தரமான பவுலிங் யூனிட்டிற்கு தண்ணிக்காட்டி இருந்தனர் இருவரும். டிராவிட், இரண்டாவது இன்னிங்ஸில் ரன் அவுட்டாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 657 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 75 ஓவர்களில் 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது ஆஸ்திரேலியா.
ஹர்பஜனின் மேஜிக் டச்!
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். முதல் இன்னிங்ஸில் ஹாட்ரிக் உட்பட 7 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு அது உதவியது.
முடிவில் 212 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா. இந்தியா 171 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியின் இந்த வெற்றியில் லக்ஷ்மன் மற்றும் டிராவிடின் பங்கு மிகவும் அதிகம். அவர்கள் இருவரது பார்ட்னர்ஷிப்பும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த டெஸ்ட் கிரிக்கெட் பார்ட்னர்ஷிப்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.
முந்தைய அத்தியாயம்: 'கிரிக்'கெத்து 12: உலகக் கோப்பை 83 ஃபைனலில் 'அட்டாக்' செய்த கிரிக்கெட் தமிழர் ஸ்ரீகாந்த்!