Published : 11,Dec 2021 02:40 PM

காற்றுமாசினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்: SOMO ஆய்வு

Online-business-companies-that-do-not-take-action-to-control-air-pollution--SOMO-study

அமேசான், பிளிப்கார்ட் போன்ற மின்னணு வர்த்தக  நிறுவனங்கள் காற்று மாசை கட்டுப்படுத்துவதில் போதிய  நடவடிக்கை எடுக்கவில்லை என்று  “SOMO ”நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

2021-கிளாஸ்கோ பருவநிலை  மாநாட்டின்  (COP26)  அடிப்படையில் 2070 ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கார்பன் உமிழ்வு என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் இந்த ஆய்வு முடிவு முக்கியத்துவம் பெருகிறது. இந்த ஆய்வுகள், மின்னணு வர்த்தக விநியோகத்தில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான வாகன போக்குவரத்தால் டெல்லியில் ஏற்படும் சுற்றுச்சுழல் பாதிப்பையும், அதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய  நடவடிக்கைகளையும் பட்டியலிடுகிறது. 

டெல்லியை போன்றே  சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலும் மின்னணு வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே இந்த ஆய்வு முடிவுகளை  சென்னை, பெங்களூரு நகரங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால்,  இந்நகரங்களில் அதிகரிக்கும் காற்று மாசினை தவிர்க்க இந்த மின்னணு வர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு பங்காற்ற முடியும் என்றும் என்பதையும் உணர்த்துகிறது.   

image

இந்தியாவில்  கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியடைந்தது. இந்த வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு,சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், மக்களின் உடல் நிலையிலும்  பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வு முடிவுகள்:

”புவி வெப்பமயமாதலில் மின்னணு வர்த்தகம் - விநியோக நிறுவனங்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் Dutch நாட்டை சேர்ந்த பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமான ( SOMO- Stichting Onderzoek Multinationale Ondernemingen)  இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. இதில் Amazon, Walmart, Flipkart, UPS, DHL மற்றும் Fedex போன்ற 6 நிறுவனங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், இந்த 6 நிறுவனங்களும் கார்பன் உமிழ்வை 1.5 டிகிரியாக குறைக்கும் இலக்கை நிர்ணயிக்காமல் செயல்படுவது தெரியவந்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களிடம் பொருட்களை கொண்டு சேர்க்க இயக்கப்படும் விநியோக  வாகன இயக்கத்தால் ஏற்படும் மாசு குறித்த விவரம் அறிந்திருந்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை போதிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. புவி வெப்பமயமாதலை சமாளிக்க சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற நிறுவனங்கள், பூஜ்ஜியம் கார்பன் உமிழ்வை அடையவோ, அல்லது கார்பன் உமிழ்வில் சமநிலையை எட்டுவதிலும் ஒத்துழைப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான செயல்பாடுகள் இந்த நிறுவனங்களால் தொடங்கப்படவேயில்லை.

image

இந்த ஆய்வை மேற்கொண்ட ”SOMO”  சர்வதேச ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் இல்லோனா ஹார்ட்லீஃப் (Ilona Hartlief) கூறும் போது, பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது தான் தங்களின் வாகனங்களை மின் வாகனங்களாக மாற்ற தொடங்கியிருப்பதாகவும், இந்த நிறுவனங்கள் அதன் வேகத்தை பெருமளவு அதிகப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

சென்னை, டெல்லி, பெங்களூரு -மின்னணு வர்த்தகமும், காற்று மாசும் :

இந்தியாவில் டெல்லியும், சர்வதேச அளவில் இலண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சலீஸ் நகரங்களிலும் இந்த ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. அதே நேரம் டெல்லியை போலவே மின்னணு வர்த்தக துறை பெரும் வளர்ச்சி கண்டுள்ள சென்னை மற்றும் பெங்களூரு  நகரங்களுக்கும் இந்த ஆய்வு முடிவுகள் பொருந்துகிறது.

இந்தியாவில் மின்னணு வர்த்தகம் அதிகம் நடைபெறும் நகரங்களில் சென்னை முதல் 5 இடத்தில் உள்ளது. 2020ல் அமேசான் நிறுவனமும் தன்னுடைய மிகப்பெரிய சேமிப்பு கிடங்கை சென்னையில் ஏற்படுத்தியது. பிளிப்கார்ட் நிறுவனமும் அதன் தளத்தை இங்கு விரிவுபடுத்தியுள்ளது. கோவிட் 19 பெருந்தொற்று காலத்திலும் சென்னையில் மட்டுமே சேமிப்பு கிடங்குகளின் தேவை அதிகரித்துள்ளது.

டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக வர்த்தகம் நடைபெறும் இடம் பெங்களூரு என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று தரக்குறியீடு அடிப்படையில், பெங்களூரின் காற்றின் தரம்  தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. 2030 ஆண்டில் பெங்களூரு நகரத்தின் காற்று மாசு 70% வரை அதிகரிக்கும் என்றும் வாகனங்களால் ஏற்படும் மாசு இதில் பிராதானமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ள  நகரங்களில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் வேகமாக வளரும் நகரமாகவும் உள்ளது. டெல்லியில், இருசக்கர வாகனம், கார், ஆட்டோக்களால் ஏற்படும் மாசு 38% என்று இந்த  ஆய்வறிக்கை கூறுகிறது.

image

இந்த ஆய்வறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அசர் நிறுவனத்தை சேர்ந்த சித்தார்த் ஸ்ரீ நிவாஸ்,  பெருநிறுவனங்கள் விநியோக கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இந்த நிறுவனங்கள்  மின் வாகனங்களுக்கு மாறுவதால்,கார்பன் உமிழ்வை பெருமளவு குறைப்பதோடு,  பொருளாதார ரீதியிலும் அந்த நிறுவனங்கள் பயன் பெறும் என்றும்  கூறுகிறார்.

பெருநிறுவனங்களின் கவலைக்குரிய செயல்பாடுகள்:

பிளிப்கார்ட் 2030 –க்குள்ளும், பெடக்ஸ் 2040-க்குள்ளும் தங்களின் வினியோக வாகனத்தை மின் வாகனங்களாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது.  டிஹெச்எல், அமேசான் போன்ற நிறுவனங்களும் இதுபோன்ற இலக்குகளை நிர்ணயித்துள்ளது. 2021ஆண்டுக்குள் பிளிப்கார்ட்  2000 மின் வாகனங்களையும், அமேசான் 1800 வாகனங்களையும் மின் வாகனங்களாக மாற்ற உள்ளன. ஆனால் அந்த நிறுவனங்கள் பொருட்களை விநியோகிக்க பயன்படுத்தும்  மொத்த  வாகனங்களில், இது எத்தனை சதவீதம் என்பதை தெரிவிக்கவில்லை. வால்மார்ட் தற்போது , இத்திட்டத்தை தொடங்கியிருந்தாலும், அதன் மொத்த வாகன பயன்பாடு குறித்தும், அதில் மின் வாகனங்களின் பயன்பாடு குறித்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்தியாவில் பல நகரங்களில் பதிவாகும் அதீத கனமழையும்,  பருவம் தவறி பெய்யும் மழையும், வட இந்திய பகுதிகளில் நிலவும் காற்று மாசும், சுற்றுச்சூழல் பாதிப்பின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகிறது. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் இந்த பெரு நிறுவனங்கள் மின் வாகனங்களுக்கு மாறும் போது, சூழியலில் நேர்மறையான  தாக்கத்தை உடனடியாக ஏற்படுத்தும்.

image

இந்த ஆய்வறிக்கை பல கவலைக்குரிய விஷயங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது. பூஜிய உமிழ்வை நோக்கிய தங்களின்  நடவடிக்கை குறித்த விவரங்களை இந்த சர்வதேச மின்னணு நிறுவனங்கள் தர தயக்கம் காட்டுகின்றன. சுற்றுச்சுழலை மையப்படுத்தி இந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் விரைவாக தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

“SOMO”வின் இந்த ஆய்வறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பூவுலகின்  நண்பர்கள்  அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட பெரு மழையும் அதை தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகள், காற்று மாசை தடுக்க நாம் எவ்வளவு விரைவாக நாம் செயல்பட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தியிருப்பதாக தெரிவித்துளார். மின்னணு வர்த்த நிறுவனங்களால் இயக்கப்படும் வாகனங்கள் ஏற்படுத்தும்  காற்று மாசு குறைக்கப்பட வேண்டுமென்றும், அதற்கு மின் வாகனங்களின் பயன்பாட்டை நோக்கி நகர வேண்டும் என்றும் சுந்தர்ராஜன் வலியுறுத்துகிறார்.

இதனைப்படிக்க...ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? நீதிமன்றம் கேள்வி 

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்