Published : 09,Dec 2021 10:10 PM

"தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தை இழப்பீட்டு நிதி" அமைப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

Tamil-Nadu-Affected-Child-Compensation-Fund-Additional-Allocation

பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இடைக்கால இழப்பீடு மற்றும் இறுதி இழப்பீடு வழங்குவதற்காக "தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தை இழப்பீட்டு நிதி" க்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மாதம் 27ம் தேதி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம் - 2012 ன் செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதை துரிதப்படுத்துமாறும், மேற்படி வழக்குகளில் காவல் துறையினர் துரிதமாக முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்வதுடன் இவ்வழக்குகளை விரைவாக முடிவு செய்து, பாலியல் குற்றம் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தருவதை உறுதி செய்யுமாறும், சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகள், மருத்துவ உதவிகள், தொடர் கண்காணிப்பு, சட்ட உதவி, ஆகியவை முற்றிலும் குழந்தை நேய சூழலில் வழங்கிட அறிவுறுத்தி இருந்தார்.

மேலும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த சம்பந்தப்பட்ட அனைத்து துறைகள், பங்கீட்டாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் அறிவுறுத்தினார்.மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்கு ஏதுவாக தமிழக அரசு தனியாக இழப்பீட்டு நிதியை உருவாக்கி இதுவரை 148 பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.1 கோடியே 99 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் முதற்கட்டமாக வழங்கியுள்ளது. மேலும் அடுத்தக்கட்டமாக அரசு ரூ.5 கோடி ஒதுக்கவுள்ளதாகவும், இழப்பீடுகள் துரிதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் 2012 ன் கீழ் பாலியல் குற்றங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இடைக்கால இழப்பீடு மற்றும் இறுதி இழப்பீடு வழங்குவதற்காக, "தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தை இழப்பீட்டு நிதி" க்கு கூடுதல் நிதியாக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்