[X] Close

திரை விமர்சனம்: ஆன்டி இந்தியன் - 'பிண' அரசியலை கூராய்வு செய்யும் நல்முயற்சி!

சிறப்புக் களம்

Anti-Indian---Movie-Review

சலசலப்புக்குரிய சினிமா விமர்சகராக அறியப்படும் 'ப்ளூ சட்டை' மாறன் எனும் இளமாறன் இயக்கியுள்ள முதல் சினிமா 'ஆன்டி இண்டியன்'. சி.இளமாறன், ராதாரவி, ஆடுகளம் நரேன், பசி சத்யா உள்ளிட்டோர் நடித்து நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகும் இப்படம் எப்படி இருக்கிறது? - இதோ திரைப் பார்வை...

பாட்ஷாவை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். பாட்ஷாவின் தாய், தந்தை இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாட்ஷாவை அடக்கம் செய்வதில் சிக்கல் உருவாகிறது. அது தேர்தல் சமயமாகவும் உள்ளது. பாட்ஷாவின் சவத்தை வைத்துக் கொண்டு மதவாதிகளும் அரசியல்வாதிகளும் செய்யும் ஆதாய அரசியலே இப்படத்தின் திரைக்கதை.

image


Advertisement

தென்கச்சி கோ சுவாமிநாதனின் புறாக் கதையில் துவங்குகிறது இந்த சினிமா. அப்போதே 'ஆன்டி இண்டியன்' பேசப்போகும் கதையின் நோக்கம் நமக்கு புரிகிறது. பட்டிணப்பாக்கத்தில் கடலோரத்தில் வசிக்கும் எளிய மனிதர்கள் சிலரை வைத்துக்கொண்டு இளமாறன் இந்தக் கதையை நமக்குச் சொல்கிறார். படத்தின் போக்கில் எங்குமே தொய்வோ சுணக்கமோ இல்லை. திரைக்கதை சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது. நிறைய சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் சொருகப்பட்டிருக்கிறது. அவை பேசும் அரசியலும் நையாண்டியும் ரசிக்க வைக்கிறது. கருப்புச் சட்டை அணிந்துகொண்டு வரும் ஒருவர் காட்சிகளுக்கு இடையே பேசும் வசனங்கள் கூடுதல் சுவை.

காவல் துறை, அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என அனைத்து தரப்பின் மீதும் சரமாரி விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் இயக்குநர். தொழில்நுட்ப அடிப்படையிலும் கூட ஓரளவிற்கு நன்றாகவே அமைந்திருக்கிறது 'ஆன்டி இண்டியன்'. ஒளிப்பதிவாளர் கதிரவன் ஓரளவு தனது மேக்கிங்கில் படத்தினை கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் மசூதி காட்சிகள், ராதாரவியை ஆடுகளம் நரேன் சந்தித்துப் பேசும் காட்சிகள் இவற்றில் சீரியல் தன்மை இருப்பதை உணர முடிகிறது. பல இடங்களில் ஒளி அமைப்பில் ஆழமில்லை. ஃப்ளாட் லைட்டிங்கை கொஞ்சம் தவித்திருக்கலாம். இயக்குநரே இசையமைத்திருக்கிறார். இப்பணியை வேறுயாராவது செய்திருக்கலாம். இளமாறனின் பின்னனி இசை அத்தனை வசீகரமாக இல்லை. கானா பாடல்களின் நீளத்தையும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.

image


Advertisement

இழவு வீட்டில் கானா பாடல்கள் பாடும் கானா கலைஞர்கள் நேரமாக நேரமாக சலித்துப் போய் ஜாலியான பாடல்களை பாடத் துவங்குகின்றனர். இது கவனிக்க வைக்கிறது. 18 நாள்களில் இந்த சினிமாவை படம் பிடித்ததாகச் சொல்கிறார் இயக்குநர். பதினெட்டே நாள்களில் இத்தனை சின்ன பட்ஜட்டில் எடுக்கப்பட்ட சினிமாவா இது என நம்மை ஆச்சர்யப்படுத்திகிறார் 'ஆண்டி இண்டியன்'.

அமைதிக் குழுவுடன் மதப் பற்றாளர்கள் நடத்தும் பேச்சுவார்த்தை காட்சியும், அதன் பிறகு வெடிக்கும் வன்முறைக்காட்சியும் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல; இறந்து பிறகு மதமென்ன சாதியென்ன என்ற புள்ளியை நோக்கி இக்கதை நகர்வது போல இருந்தாலும், இறுதியில் பாட்ஷாவின் சவம் யாரிடம் ஒப்படைக்கப்படுகிறது எனத் தெரிய வரும்போது நமக்கு சில கேள்விகள் எழும். அது, இந்தப் படைப்பின் நடுநிலைக் குறித்தானதாகவும் இருக்கும்.

image

"உங்ககிட்ட ஒரு பொணம் கிடச்சது, அத வச்சு 13 பேர கொன்னீங்க. இப்ப உங்ககிட்ட 13 பொணம் கிடச்சிருக்கு... இத வச்சு என்னல்லாம் பண்ணப் போறானுங்களோ" என 'பசி' சத்யா பேசும் வசனம் அப்ளாஸ் அள்ளுகிறது.

பொதுவாக ஒரு சினிமா எடுக்கும்போது பலரும் அதில் நடிக்க வைக்கப்படுவார்கள். ஆனால் படத்தொகுப்பில் வேறு வழியின்றி பல காட்சிகள் துண்டிக்கப்படும். தங்களது காட்சி திரையில் வரும் என நம்பியிருக்கும் சின்னச் சின்ன நடிகர்கள் ஏமாந்து போவார்கள். இது எல்லா சினிமாவிலும் நடக்கும். அது ஆன்டி இண்டியனிலும் நடந்திருக்கிறது. விசயம் என்னவெனில், அப்படி நடிக்க வைத்து துண்டிக்கப்பட்ட காட்சிகளுக்காக அந்த சின்னச் சின்ன நடிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ஒரு வரி டைட்டில் கார்டில் சேர்க்கப்பட்டிருக்கிறது. தன்னுடன் பணி செய்த உதவி இயக்குநர்கள் அனைவரையுமே இணை இயக்குநர் என டைட்டிலில் குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

image

'ஆண்டி இண்டியன்' படத்தின் கரு, நோக்கம் திரைக்கதையோட்டத்தில் ஆங்காங்கே சிதைக்கப்பட்டிருப்பதாக உணர முடிகிறது. ஒரு சென்ஸிடிவ்வான சினிமாவிற்கு இது அழகல்ல. 'ஆன்டி இண்டியன்' நல்ல முயற்சி; ஆனால், இது போதாது இளமாறன். எனினும், ஒட்டுமொத்த குழுவின் முயற்சிக்கு பாராட்டுகள்.

"எவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுக்குறோம்... ஈஸியா குப்பைன்னு சொல்லி விமர்சனம் பண்றீங்களே... முடிஞ்சா ஒரு படம்தான் எடுத்துப் பார்றேன்..." என்று தனது திரை விமர்சனங்கள் மீது வைக்கப்படும் விமர்சனத்துக்கு 'ஆன்டி இண்டியன்' மூலம் பக்குவமாக பதில் சொன்ன விதத்தில் 'ப்ளூ சட்டை' மாறன் ஜெயித்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.


Advertisement

Advertisement
[X] Close